மோசடி, ஊழல் மற்றும் துஷ்பிரயோகம் அற்ற அரசாங்கத்தை அமைப்பதற்கு தமக்கு வாக்களிக்குமாறு தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க மக்களை வலியுறுத்தியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன் அரசியல் ஸ்திரத்தன்மையை விரைவில் உருவாக்கும் என்றும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு புதிய சகாப்தத்தின் மாற்றத்தை நோக்கி, நாட்டை முன் நகர்த்துவதற்காக செப்டம்பர் 21 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தை கைப்பற்றுகிறது என்று திஸாநாயக்க கூறியுள்ளார்.
இதேவேளை, தற்போதைய பொருளாதார நெருக்கடியானது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உருவாக்கப்பட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே விக்ரமசிங்கவினால் ஏற்பட்ட நெருக்கடிக்கு பலியாகியதாகவும் அநுரகுமார தெரிவித்துள்ளார்.
சர்வதேச இறையாண்மை பத்திரத்திலிருந்து இலங்கை 15.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாகவும், மகிந்த ராஜபக்ச காலத்தில் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே பெறப்பட்டதாகவும், மீதி 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ரணில் விக்ரமசிங்கவின் நான்கு வருட நல்லாட்சி அரசாங்கத்தின் போது பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், கோட்டாபய பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர், ரணில் கடனை செலுத்துவதை நிறுத்திவிட்டு, சேமிக்கப்பட்ட டொலரில் எரிபொருள் மற்றும் எரிவாயுவை கொள்வனவு செய்ததாக அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.