சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பில் வெளியான தகவல்

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு கொழும்பு 7, மகாகமசேகர மாவத்தையில் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் அவர் இறந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த உத்தியோகபூர்வ இல்லம் அமைச்சரவையின் ஒப்புதலுடன் அவரது பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது.

இந்த வீட்டை மீண்டும் அரசாங்கத்திடம் வழங்குவதற்கான முடிவினை மாற்றி புதிய அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், நீதித்துறை மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த உத்தியோகபூர்வ இல்லத்தை மீண்டும் அரசாங்கத்திடம் கையளிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அன்றைய முன்னாள் தினேஸ் குணவர்தனவிடம் அமைச்சு அண்மையில் கையளித்த போதிலும், ஆட்சி மாற்றத்துடன் நிறுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இதற்கமைய, தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் இதற்கான பத்திரத்தை கையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றதன் பின்னர் சம்பந்தனுக்கு இந்த உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமராகி மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கைப்பற்றி இருந்தார். எனினும் சம்பந்தன் குறித்த உத்தியோகபூர்வ இல்லத்தில் தொடர்ந்து இருக்க வாய்ப்பளித்தார்.

இதன்பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் போது அப்போதைய காணி அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் பிரகாரம், 2019 பெப்ரவரி 26 ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானத்தில் சம்பந்தன் தலைவராக இருக்கும் வரை அந்த வீட்டை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டார்.

உத்தியோகபூர்வ இல்லத்தின் நீர்க் கட்டணம், மின்சாரக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம், பராமரிப்புச் செலவுகள்,ஊழியர்களின் சம்பளம் என்பன அரசாங்கத்தினால் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2017ஆம் ஆண்டு அந்த வீட்டின் பராமரிப்பு பணிக்காக மூன்று கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்து இறக்கும் வரை எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே வாழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.