பொதுத்தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 17சுயேட்சைக்குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் இரண்டு சுயேட்சைக்குழுக்கள் மற்றும் ஒரு அரசியல் கட்சி இதுவரை வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரியும் அரசாங்க அதிபருமான ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. தற்போது மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.
இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 சுயேட்சை குழுக்கள் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளதுடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் இரண்டு சுயேட்சை குழுக்களும் வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ள.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் ஐந்து தேர்தல் மீறல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் எந்தவித வன்முறைகளும் பதிவுசெய்யப்படவில்லையெனவும் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்திற்கு சுயேட்சைக்குழுக்களில் மூவரும் அரசியல் கட்சிகளை சேர்ந்த செயலாளர் உட்பட நான்கு பேர் மட்டுமே வருகைதரமுடியும் எனவும் மாவட்ட செயலக வளாகத்திற்கள் ஊர்வலத்திற்கு பேரணிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க சுட்டிக்காட்டியுள்ளார்.