சுமந்திரனின் கோரிக்கைக்கு விரைவில் முடிவு: ஸ்ரீகாந்தா பகிரங்கம்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணையுமாறு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரனின் கோரிக்கைக்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

யாழில் (jaffna) உள்ள தனியார் விடுதியில் நேற்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு – கிழக்குக்கு வெளியே தலைநகர் உட்பட தமிழர்கள் வாழ்கின்ற ஏனைய சில மாவட்டங்களிலும் போட்டியிடுவது தொடர்பாகவும் பரிசீலனை செய்வதாக எமது மத்திய குழு தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் வெளியேறியவர்கள் மீண்டும் இணைய வேண்டும் எனப் புன்முறுவலோடு சுமந்திரன் அழைப்பு விடுத்திருக்கினறார். அவருக்கு நாங்களும் புன்முறுவலோடு பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தைத் தக்கவைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழரசுக் கட்சியோடு இணைந்து கூட்டாகச் செயற்பட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தயாராகவுள்ளது.

ஆனால், யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதில் கொள்கை ரீதியாகவும், கடந்த கால அனுபவ ரீதியாகவும் பல மனஸ்தாபங்கள் உள்ளன. இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது எதற்காக? தமிழ்த் தேசியத்தை சிங்கள தேசியத்துடன் சமரசம் செய்து வைப்பதற்காவா? அல்லது இருக்கின்ற பதவிக் கதிரைகளை பறிபோகவிடாமல் தக்கவைப்பதற்காகவா? அல்லது கடந்த காலம் போல் ஆட்சியாளர்களுடன் மறைமுக சமரசம் செய்வதற்காக? போன்ற கேள்விகளை எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

ஒற்றுமை என்பது கொள்கையுடன், குறிக்கோளுடன் இருக்க வேண்டுமானால் தமிழரசுக் கட்சியில் ஆதிக்கம் செலுத்துக்கின்ற சுமந்திரன் தலைமையிலான அணியுடன் ஒருபோதும் அந்த ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது, ஏற்படுத்தக் கூடாது என்பதே தமிழ்த் தேசியக் கட்சியின் முடிவு ஆகும்.

முதலிலே தமிழரசுக் கட்சிக்குள் ஒற்றுமைப்பட முடியாதவர்கள் ஒற்றுமைக்கான அழைப்பை புன்முறுவலோடு விடுப்பது ஒட்டுமொத்த தமிழர்களையும் ஏமாற்றும் செயலாகும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியோடு இணைந்து வீட்டுச் சின்னத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகப் போட்டியிடுவதா? இல்லையா? என்பது குறித்து ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடி ஆராயவுள்ளது. அதில் தமிழ்த் தேசிய கட்சியின் முடிவை உறுதியாகத் தெரிவிப்போம்.” – என்றார்.

சங்கு சின்னம் குறித்து பொதுச்சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சங்கு சின்னத்தை தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புக்குள் உள்ள கட்சிகள் பயன்படுத்தக் கூடாது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை – உப்புவெளி ஆயர் இல்ல மண்டபத்தில் நேற்று (29.09.2024) இடம்பெற்ற பொதுச்சபை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மேலும், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பிலான எவ்வித நடவடிக்கைகளிலும் தமிழ் மக்கள் பொதுச்சபை ஈடுபடாது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இக்கூட்டத்தில் வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த தமிழ் மக்கள் பொதுச் சபையை சேர்ந்த அங்கத்தவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சுயநலவாதிகளைக் களைந்து தேசியத்தை ஒன்றிணைக்க வேண்டும்!

சுயநலவாதிகளைக் களைந்து உண்மையாகத் தேசியத்தை விரும்புபவர்கள் யார் என்று அடையாளம் கண்டு அவர்களை ஒன்றிணைக்க முன்வரவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

‘சுமந்திரன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை திரும்ப அழைத்துள்ளார். நீங்களும் தமிழ்த் தேசியத்தில் ஈடுபாடுடையவர்கள் அனைவரும் சேர்ந்து தேர்தலில் நிற்பது அவசியம் என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால் நீங்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் மீண்டும் சேரும் வாய்ப்புக்கள் உள்ளதா’ என எழுப்பப்பட்டிருக்கும் கேள்விக்கு பதிலளித்திருக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,

“நாங்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் சேரும் வாய்ப்புக்கள் இல்லை. சுட்ட மண்ணும் சுடாத மண்ணும் என்றென்றும் ஒன்று சேராது.

வேண்டுமெனில் தமிழ்த் தேசியத்தில் உண்மையில் ஈபட்டிருக்கும் தமிழ் இளைஞர்கள் பலர் எம் கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியில் சேர்ந்து பயணிக்க முடியும்.

சிலர் ஒரு கட்சியின் பெயரைச் சொல்லி ஒற்றுமை ஏற்படுத்த முனையலாம். ஆனால் அவர்களின் சிந்தனை தமிழ்த்தேசியத்தின் பாற்பட்டதா அல்லது சொந்த சுயநலத்தின் பாற்பட்டதா என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

அவ்வாறானவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து சென்றவர்கள் திரும்பி வாருங்கள் என்று கூறுவது தமிழ்த் தேசியத்துக்காக அல்ல. சுயநல காரணங்களுக்காகவே ஆகும்” என விளக்கமளித்துள்ளார்.

Posted in Uncategorized

அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை மீளப் பெற நடவடிக்கை!

அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சிடம் உடன் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுதங்களை பெற்றுக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் நூறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆயுதங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதனைத் தொடர்ந்து அவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வசதிகளும் ரத்தாவதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பணிக்குழாமிற்கான கொடுப்பனவு, எரிபொருள் கொடுப்பனவு மற்றும் முத்திரை கட்டணம் போன்ற வசதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எனினும் மாதிவெலயில் காணப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரபூர்வ இல்லங்கள் தேர்தல் நடைபெறும் தினம் வரையில் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் தோல்வியடையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக அதிகாரபூர்வ இல்லகங்களை ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அநுரவினால் வழங்கப்பட்ட அனைத்து நியமனங்களிலும் சிக்கல் நிலை!

நாட்டின் புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவியேற்றதன் பின்னர் வழங்கப்பட்ட அனைத்து நியமனங்களிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

பாணந்துறை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியள்ளார்.

அவர்களில் சிலர் நீதிமன்றங்கள் மூலம் தண்டிக்கப்பட்டவர்கள் என்றும், நீதிமன்றங்களில் சிலரின் வழக்குகள் நிலுவையில் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, ​​தற்போதுள்ள நாற்பத்தி இரண்டு சதவீத வாக்குகளை அவர்கள் இழக்க நேரிடும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்தில் ஒரு எழுத்தைக்கூட மாற்றியமைக்காமல் அநுர தரப்பு முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு – பிரதமர் மேற்கொள்ளும் நகர்வுகள்

பொதுத் தேர்தலை தொடர்ந்து நிச்சயமாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

புதிய அரசாங்கத்தில் தீர்வு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்பது அரசியல் வாக்குறுதியல்ல. அது அவர்களின் உரிமை.

எவ்வித மாற்றமுமில்லாமல் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலை நிச்சயம் நடத்துவோம்.

இனப்பிரச்சினைக்கு ஒரு நிலைக்குள் இருந்து கொண்டு மாத்திரம் தீர்வு காண முடியாது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் புதிய சட்ட உருவாக்கம் ஊடாக தீர்வு காணலாம் என்று கருதுகிறார்கள். அதுவல்ல.

அரசாங்கம் செயற்படும் விதத்தை அடிப்படையாகக் கொண்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்கள் அரசாங்கம் தம்மையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதை உணர வேண்டும். அவ்வாறான வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும்.

சட்ட மாற்றத்தின் ஊடாக மாத்திரம் இதனை மேற்கொள்ள முடியாது. நாட்டை நிர்வகிக்கும் கலாசாரம் மாற்றமடைய வேண்டும். அந்த மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்துவோம்.

மொழி உரிமை, அரச நிர்வாக உரிமை பொதுவான முறையில் உறுதிப்படுத்தப்படும். அதனைத் தொடர்ந்து அரசியலமைப்பின் ஊடாக மாற்றங்களை ஏற்படுத்துவோம்.

தீர்க்க முடியாத பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அரசியல், கல்வி, சுகாதாரம், சமூகம் சார்ந்த விடயங்கள் உட்பட அடிப்படைத் தேவைகளில் காணப்படும் பிரச்சினைகள் இனப்பிரச்சினைக்கு ஒரு காரணியாக உள்ளது.

யுத்தம் முடிவடைந்துள்ளது. இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைக்கவிலலை. இடைக்கால அரசாங்கத்தில் பாரியளவிலான மாற்றங்களை மேற்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் அரசாங்கத்தின் செயற்பாட்டு ஒழுங்கு முறையின் ஊடாக காலம் காலமாக காணப்படும் பிரச்சினைகளு்ககு முரண்பாடற்ற வகையில் தீர்வினை பெற்றுக் கொடுப்போம்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னெடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழரசு கட்சியின் அழைப்பை பரிசீலனை செய்யும் தமிழ்த்தேசிய இளைஞர் பேரவை!

இலங்கை தமிழரசு கட்சியின் ஒற்றுமைக்கான அழைப்பை தமிழ்த்தேசிய இளைஞர் பேரவை பரிசீலனை செய்வதாக தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச்செயலாளர் ச.கீதன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2024 ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய ஜனாதிபதி தெரிவாகியதன் பிற்பாடு புதிய அரசியல் கலாசாரத்திற்குள் தென்னிலங்கை செல்வதனை காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்நிலையில் தமிழர்கள் அதற்கு ஏற்ற வகையில் அதற்கு ஈடு கொடுக்கக்கூடிய வகையில் தமது அரசியல் தந்திரோபாயங்கள் மூலமாக தமிழர்களின் நீண்டகால அபிலாசைகளை நிறைவு செய்து கொள்ளக்கூடிய வழிமுறைகளை ஒற்றுமையுடன் கையாள வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதை தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை உணர்ந்து கொள்கிறது.

இந்நிலையில் தமிழர்கள் ஒரே அணியில் சாத்தியமான வழிமுறைகளுக்கூடாக நகர வேண்டிய தேவை உள்ள அதே நிலையில், மாறிவரும் சூழலுக்கு ஏற்ற வகையில் இளைஞர்களின் வகிபாகத்தை அரசியலில் உறுதிப்படுத்தி தொடர்ந்து வரும் ஜனநாயக வெளிகளை கையாள்வதற்கு இளைஞர்களை பலப்படுத்த வேண்டிய தேவையினையும் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை நன்கு உணர்ந்து இருக்கிறது.

இந்த முக்கியமான காலப்பகுதியில் இலங்கைத் தமிழரசு கட்சியின் நேற்றைய மத்திய குழு கூட்டத்தில் வெவ்வேறு காரணங்களுக்காக பிரிந்து சென்றிருக்க கூடிய அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்கும் வகையில் ஒற்றுமைக்கான அழைப்பை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு அறிவித்திருப்பதை நாம் வரவேற்கிறோம்.

அந்த வகையில் ஆளுமையுள்ள, ஊழலுக்கு எதிரான தமிழ்த் தேசிய சிந்தனையுடன் இளைஞர்களுக்கான சரியான வகிபாகங்களை வழங்கி புதிய அரசியல் வியூகங்களை வகுத்து செயற்பட தமிழரசு கட்சி தயாராக இருக்குமாக இருந்தால் அதன் ஒற்றுமைக்கான அழைப்பை தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை சாதகமாக பரிசீலிக்க தயாராகவள்ளதாக தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அரச அதிகாரிகள் குறித்து கடுமையான நிலைப்பாட்டை வெளியிட்ட புதிய அரசாங்கம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அரச அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டால், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கத்தயங்கப் போவதில்லை என பிரதமர் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் அஸ்கிரிய பீடாதிபதியை தரிசனம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனை தெரிவித்துள்ளார்.

எங்கள் ஆட்சியில் யாரேனும் குற்றம் சாட்டப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம். நாங்கள் ஏற்கனவே நேர்மறையான மாற்றங்களைச் செய்து வருகிறோம். இதுபோன்ற மாற்றங்கள் தொடரும். குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் சிலர் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளியில் இருந்து அரச ஊழியர்களை அழைத்து வர முடியாது. இருப்பவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து நியமனங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

மொட்டு கட்சி பொய்யாக கூட்டணி அமைக்காது : சாகர காரியவசம்

மொட்டு கட்சி பொய்யாக கூட்டணிகளை அமைக்காது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பு மனுக்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

வேட்பு மனு தயாரிப்பு தொடர்பில் இரண்டு குழுக்கள் நிறுவப்பட்டுள்ளது.கீழ் மட்ட குழுவினால் தீர்மானங்களை எடுக்க முடியாத நிலையில் உயர் மட்ட குழுவின் உதவி பெற்றுக்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுஜன முன்னணியின் தேசியவாத கொள்கை
தேசியவாத முகாம்களை ஒன்றிணைத்து இந்த தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகவும், இணக்கப்பாடில்லா தரப்புக்களுடன் இணைந்து பொய்யாக கூட்டணிகள் அமைக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன முன்னணியின் தேசியவாத கொள்கைகளுக்கு இணங்கக்கூடிய தரப்புக்கள் மட்டும் கூட்டணியில் இணைந்து கொள்ள முடியும் எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

புதிய ஜனாதிபதியின் செயலாளருக்கு ரணில் கடிதம்

புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் செயலாளருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பாதுகாப்பு குறித்து கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது பாதுகாப்பிற்காக பாதுகாப்பு பிரிவொன்றை ஸ்தாபிக்குமாறு கோரி ரணில் விக்கிரமசிங்க இந்த கடிதத்தினை அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்படி, அந்த கடிதத்தில் ரணில் விக்ரமசிங்க கோரிய பாதுகாவலர்களின் எண்ணிக்கை 163 ஆகும். மேலும், 15 சமையல்காரர்கள், 6 மருத்துவ அதிகாரிகள், 30 குடைகள், ஒரு கணினி மற்றும் பிரிண்டர் ஆகியவையும் கோரப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை அகற்றுவதாக தற்போதைய ஜனாதிபதி உறுதியளித்துள்ள சூழலில், ரணில் விக்ரமசிங்க இந்த கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized