பொது தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி ஆரம்பம்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அதிபதி கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம், தற்போதைக்கு வேட்பாளர் விண்ணப்பப் படிவம், வேட்பு மனுக்கள் உள்ளிட்ட படிவங்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அச்சிடும் பணிகளுக்கான செலவுத் தொகை இதுவரை உத்தேச மதிப்பீடு செய்யப்படவில்லை என்றும் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

எனினும், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் 14ஆம் திகதிக்கு ஒருவார காலத்துக்கு முன்னதாக அச்சிடும் பணிகளை பூர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குச் சீட்டு, உத்தியோகபூர்வ வாக்கு அறிவித்தல் பத்திரங்கள் உள்ளிட்ட இன்னும் சில படிவங்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னரே ஆரம்பிக்கப்படும் என்றும் கங்கா லியனகே மேலும் தெரிவித்துள்ளார்.

மதுபான அனுமதிப்பத்திரங்கள் பெற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிடும் அரசாங்கம்!

மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டவர்களின் பெயர் பட்டியல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

300 இலட்சம் ரூபாய் முதல் 400 இலட்சம் ரூபாவுக்கு மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை விற்பனை செய்தவர்கள் உள்ளனர்.அவர்களின் விபரங்கள் எம்மிடம் உள்ளன.

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் நடத்தப்படும்.

அத்துடன் அவ்வாறான சகல தரப்பினர் தொடர்பான விபரங்களும் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் ” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

சஜித்தின் பின்னடைவிற்கு ஜேவிபி தான் காரணமா?

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 45,30902 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவியமைக்கு தேசிய மக்கள் சக்தி மாத்திரமே காரணம் இல்லை என தமிழ் கவிதாசிரியர் ஜெயபாலன் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் ஊடகத்தின் நேர்காணலில் கலந்து கொண்டு, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர், “எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது தந்தையை போல அத்தனை கிளர்ச்சி ரீதியில் செயற்படவில்லை.

மேலும், சஜித் பிரேமதாச, 3 சதவீத வாக்கு நிலையில் இருந்த தேசிய மக்கள் சக்தி, அரகலய போராட்டத்திற்கு பிறகு வளர்ச்சி அடைந்திருந்ததை அறிந்திருக்கவில்லை.

அவ்வாறு தெரிந்திருந்தால், சஜித், ரணிலுடன் சேர்ந்து, தேர்தலில் போட்டியிட்டிருப்பதுடன், ஒருவர் ஜனாதிபதியாகவும் மற்றையவர் பிரதமராகவும் பதவி வகித்திருக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

நாடாளுமன்றத் தேர்தல் திகதி அரசமைப்புக்கு முரணானதா – மறுக்கின்றார் தேர்தல் ஆணையாளர்!

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த அறிவிக்கப்பட்டுள்ள திகதி அரசமைப்புக்கு முரணானது என சமூக ஊடகங்களில் வெளியாகும் கருத்துக்களைத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க மறுத்துள்ளார்.

“நாடாளுமன்றத் தேர்தலை நடத்த எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி ஏற்ற திகதி அல்ல. ஏனெனில் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் 5 வார கால இடைவெளி இருக்க வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.” என்று பலர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இதற்கு விளக்கமளித்த தேர்தல்கள் ஆணையாளர்,

“நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஒக்டோபர் 4 –11 வரை ஆகும்.

வேட்புமனுத் தாக்கல் செய்ய ஆரம்பிக்கும் திகதி உட்பட 5 வார இடைவெளி இருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகின்றது.

எனவே, தேர்தலுக்கு நவம்பர் 14 ஆம் திகதி சரியானது.” என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட எம்.பிக்கள் எண்ணிக்கையில் குறைவு – தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவடைந்துள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இதுவரை 7 ஆக இருந்த நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் மூலம் 6 பேர் மட்டுமே தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்புமனுவில் உள்ளடக்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு வெளியிடப்பட்ட பட்டியலிலேயே யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 இல் இருந்து 6 ஆகக் குறைவடைந்தமை தெரியவந்துள்ளது.

Posted in Uncategorized

மாவையிடம் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு விடுத்துள்ள கோரிக்கை

“நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக நாடாளுமன்றத் தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட வேண்டும். இதுவே மக்கள் விருப்பம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள்.

இந்த கோரிக்கையை நிறைவேற்றும் நோக்குடன் நான் செயற்படவுள்ளேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். தெல்லிப்பழை, மாவிட்டபுரத்தில் அவரது இல்லத்தில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் நிர்வாகிகள் இன்று (நேற்று) புதன்கிழமை நேரில் வந்து என்னுடன் கலந்துரையாடினார்கள்.

இனத்தின் விடுதலை
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகக் கொள்கையுடன் பயணித்த தமிழ்க் கட்சிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்டு வந்ததை நினைவுகூர்ந்த அவர்கள், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், எதிர்காலத்திலும் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காக மீண்டும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்றும், ஒன்றுபட்டு போட்டியிட்டு வெற்றியீட்ட வேண்டும் என்றும், இதற்கு மக்கள் பூரண ஆதரவை தெரிவித்து வருகின்றார்கள் என்றும் தெரிவித்தார்கள்.

அவ்வாறான கருத்தை நீண்ட நாட்களாகவும், அண்மைக்காலத்திலும் என்னிடம் வேண்டுகோளாக விடுக்கப்பட்டதை நான் கவனமாக அவதானித்து வந்துள்ளேன் . ஆகையால், இந்தக் கோரிக்கையை அவர்களிடமும் தெரிவித்தேன்.

நாங்கள் ஒன்றுபட்டு செயற்பட்டதால் ஏற்பட்ட நன்மைகளையும், இனத்தின் விடுதலைக்கான முன்னேற்றத்தையும் நான் நன்கு அறிந்திருந்தேன். இவர்களுடன் பகிர்ந்திருந்தேன் .

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற முறையில் நாங்கள் எதிர்காலத்திலும் தமிழினத்தின் விடுதலைக்காகவும், தமிழ்த் தேசத்துக்காகவும் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டியதை நானும் வலியுறுத்திக் கூறினேன் .

இந்த வேண்டுகோளை இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத்திடம் ஏற்கனவே கூறியுள்ளேன். இந்தச் சந்திப்பையும் கொண்டு சென்று இந்த ஒற்றுமைக்காகச் செயற்படவுள்ளேன்.

இத்தகைய ஒற்றுமை முயற்சி தொடர்பில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சித் தலைவர்களுடனும், பல்கலைக்கழக மாணவ சமுதாயத்திடமும், அமைப்புகளுடனும் பேச்சுகள் நடத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒன்றிணைந்து செயற்படவுள்ளேன். அதற்கான முயற்சிகளை உடனேயே ஆரம்பிக்கவுள்ளேன்.” – என்றார்.

Posted in Uncategorized

சஜித் தரப்பு முக்கியஸ்தர்கள் மூவர் கட்சியை விட்டு வெளியேற தீர்மானம்!

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் மூவர் கட்சியை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளனர்.

முக்கியமான மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு கட்சியை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளனர்.

இந்த மூவரும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் ரணிலுடன் இணைந்து செயற்படுவது குறித்து தொடர்ச்சியாக பேசியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கடுமையான விமர்சனங்கள்
ஜனாதிபதி தேர்தலின் பின்னரும் இந்த யோசனையை முன்வைத்த மூவருக்கு எதிராகவும் எழுந்த கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்குக் கூட வேட்பு மனு வழங்கக் கூடாது என இந்த மூவருக்கு எதிராகவும் கட்சியின் சிலர் எதிர்ப்பு வெளியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

அநுர குமாரவுக்கு அளிக்கப்பட்டுள்ள கால அவகாசம்!

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் அரசாங்கத்தை முன்னெடுக்க முடியாவிட்டால் ஆட்சியை பொறுப்பேற்றுக்கொள்ளத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் மேடைகளில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சிறையில் அடைத்தல், கள்வர்களை பிடித்தல், அரச ஊழியர்களின் சம்பளங்களை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி தொடர்பில் ஆரோக்கியமான எண்ணத்தைக் தாம் கொண்டிருப்பதாகவும் அவர் தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

ஏதேனும் சந்தர்ப்பத்தில் அவர்களினால் ஆட்சியை முன்னெடுக்க முடியாவிட்டால் அந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றுக்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அநுர விடுத்துள்ள அதிரடி உத்தரவு!

மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கியுள்ளார்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு மதுபான விற்பனை நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

தமக்கு ஆதரவு வழங்கிய தரப்பினருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் அண்மைக்காலத்தில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை அனுமதி பத்திரங்களை ரத்துச் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அநுரவின் அதிரடி: வட மாகாண ஆளுநராக முன்னாள் அரச அதிபர் வேதநாயகம்!

வடக்கு மாகாண ஆளுநராக யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி முன்னிலையில் அவர் இன்று (25) ஆளுநராகப் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சில அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக இவர் ஓய்வு பெறுவதற்கு 3 மாத காலம் இருந்தபோது தனது பதவியிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized