குறைக்கப்பட்டது அமைச்சர்களின் சலுகை: தொடர் நகர்வுகளில் அநுர

அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல அரச வாகனங்கள் புதிய நிர்வாகத்திற்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளன.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசாங்க அமைச்சு அதிகாரிகள் வாகனங்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.

எதிர்கால நடவடிக்கை
குறித்த வாகனங்கள் தொடர்புபட்ட அமைச்சுக்களிலும், கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலக வளாகத்திலும் நிறுத்தப்பட்டுள்ளன.

இதன் படி, புதிய ஆட்சியின் பின்னர் வாகனங்களை திருப்பி அனுப்புமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதை அடுத்து வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுவதால், எஞ்சும் வாகனங்களை ஜனாதிபதி என்ன செய்வார், எதிர்காலத்தில் அவை எவ்வாறு ஒதுக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஜனாதிபதி – மத்திய வங்கியின் ஆளுநர் இடையே விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவும் கலந்து கொண்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தியா – சீனாவுடனான உறவு நிலை குறித்து ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
இந்தியா – சீனாவுடனான உறவு நிலை குறித்து ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
பொருளாதார நிலைமை
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (24.09.2024) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் பல விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் சங்கம்!

மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள உயர் பதவியின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் ஜனாதிபதிக்கு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

சட்டத்தின் ஆட்சி, நீதித்துறையின் சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கும், நல்லாட்சி யுகத்தை ஏற்படுத்துவதற்கும், தண்டனையில்லா கலாசாரத்தை மாற்றுவதற்கும், இலங்கை மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என தாங்கள் நம்புவதாகவும், சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், இனம், மதம் மற்றும் பிற பிளவுபடுத்தும் அடையாளங்கள் பல ஆண்டுகளாக இலங்கை தாய்நாட்டை பாதிக்கின்றன.

இந்தநிலையில், இன வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படும் ஐக்கிய இலங்கைக்கான அடித்தளத்தை ஜனாதிபதி அமைப்பார் என நம்புவதாக சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவிடம் தமது பிரசார செலவுப் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான 21 நாட்களுக்குள் அது தொடர்பான அறிக்கையை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறு 38 வேட்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தேர்தல் ஆணையத்திடம் அறிக்கைகள் வழங்கப்பட்ட பிறகு, அவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்றும், தவறான செலவு அறிக்கைகள் இருந்தால், சரிபார்க்கக்கூடிய ஆவணங்களுடன் பொலிஸில் யார் வேண்டுமானாலும் முறைப்பாடு செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறுகிறது.

வாக்காளர் ஒருவருக்கு செலவிடும் தொகை
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒரு வாக்காளர் ஒருவருக்கு செலவிடும் தொகை 109 ரூபா என தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி, (17,140,354) வாக்காளர்களுக்கு ஒரு வேட்பாளர் பிரசாரச் செலவுக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச வரம்பு 186 கோடி ரூபாய். அந்த தொகையில் 60 சதவீதம் அதாவது 112 கோடி ரூபாயை வேட்பாளரால் பிரசாரச் செலவுகளாகவும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியால் பிரசாரச் செலவாகச் செலவிடக்கூடிய தொகை 40 சதவீதமாகவும் இருக்குமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு!

இந்த வாரம் ஆர்ப்பாட்டங்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டத்தை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு பொலிஸார் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, யாரையும் துன்புறுத்தாமல் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் குழுவாக கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதி பதவியேற்றுள்ள நிலையில் அரசியலிலும், அரசியல் பதவிகளும் பல மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையிலே அமைதியாக செயற்படுமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அநுரகுமார திஸாநாயக்கவுக்கு IMF வாழ்த்துக் கடிதம்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமைத்துவம் இலங்கையின் எதிர்கால ஸ்திரத்தன்மை, செழிப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பாதுகாப்பதற்கு உதவும் எனசர்வதேச நாணய நிதியம் கருத்து வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்

புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், IMF இலங்கையுடன் பல வருடங்களாக கொண்டுள்ள சிறந்த ஈடுபாட்டை பெரிதும் மதிக்கின்றது என கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

அநுர அரசாங்கத்தில் வடக்கு மாகாணத்துக்கு தமிழ் ஆளுநர் நியமனம்
அநுர அரசாங்கத்தில் வடக்கு மாகாணத்துக்கு தமிழ் ஆளுநர் நியமனம்
இலங்கையின் அபிவிருத்தி
சர்வதேச நாணய நிதியம் ஒரு உறுதியான பங்காளியாக இருப்பதாகவும், இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சீர்திருத்த இலக்குகளை அடைவதற்கு, சர்வதேச நாணய நிதியம் ஆதரவளிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடிகளில் ஒன்றான இலங்கையை மீட்சிக்கான பாதையில் கொண்டு செல்ல உதவிய கடின வெற்றிகளை கட்டியெழுப்புவதற்கு அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து பணியாற்ற சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் வெளிக்காட்டியுள்ளார்..

சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர நன்மை பயக்கும் உறவை ஆழப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் எந்நேரமும் கலைக்கப்படலாம் – சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்ற அநுர

புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்றத்தை எந்நேரமும் கலைப்பதற்குத் தயாராகி விட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பாக சட்டமா அதிபரிடமும் பிற சட்டத்துறை வட்டாரங்களிடமும் நேற்று (23.09.2024) பகல் அவர் ஆலோசனை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமாயின் அதற்குரிய நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.

அதற்காக நாடாளுமன்றத்தை ஒரு தடவை கூட்ட வேண்டும் என்றும் சில தரப்புகள் தெரிவித்தாலும் சட்டரீதியாக அது தேவையற்றது என ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட ஒதுக்கீட்டை நேரடியாக வழங்கும் அதிகாரம் அரசமைப்பின் 150 ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு உண்டு என சட்டத்துறை வட்டாரங்கள் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளன.

நாடாளுமன்றத்தில் அநுரவிற்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், நாடாளுமன்றத்தை தற்போது கூட்டுவது அவர் நிறுவக்கூடிய அரசைத் தோற்கடிக்கச் செய்யும் வாய்ப்பைத் தரும்.

இதனால், நாடாளுமன்றத்தை கூட்டாமலேயே அதனை கலைத்துவிடும் ஆலோசனையை சட்ட வல்லுநர்கள் அவருக்கு வழங்கியுள்ளனர்.

மேலும், நாடாளுமன்றத்தில் அநுரவின் இடத்திற்கு நியமிக்கப்படவுள்ள புதிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு சமாதான நீதிவான் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்ததும் நாடாளுமன்றக் கலைப்பை ஜனாதிபதி முன்னெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்த லக்ஷ்மன் நிபுண ஆராச்சி அந்த வெற்றிடத்துக்கு நியமிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அநுரகுமாரவிடம் அரியநேத்திரன் விடுத்துள்ள கோரிக்கை!

புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும், தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அவர் முன்வர வேண்டும் எனவும் தமிழ் பொதுக் கட்டமைப்பின் கீழ் போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளர் பாக்கியச்செவ்லம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று (23.09.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டு இன்றைய தினம் பதவி ஏற்கின்றார். அவருக்கு வேட்பாளர் என்ற சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அநுரவின் வெற்றியால் அமெரிக்க – இந்திய புலனாய்வு துறைக்கு காத்திருந்த ஏமாற்றம்
அநுரவின் வெற்றியால் அமெரிக்க – இந்திய புலனாய்வு துறைக்கு காத்திருந்த ஏமாற்றம்
நாடாளுமன்ற தேர்தல்
பொது கட்டமைப்பாக சிவில் அமைப்புகளும் தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்து புது வேட்பாளராக என்னை நிறுத்தி மக்கள் மத்தியில் ஆதரவனைப் பற்றி இரண்டு இலட்சத்துக்கு அதிகமான வாக்குகளை எனக்கு வழங்கியிருக்கின்றார்கள். அதற்கு இந்த மக்களுக்கு முதற்கண் நன்றியினை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதனடிப்படையில் என்றும் இல்லாதவரை இலங்கை வரலாற்றில் ஒரு தமிழர் என்கின்ற வகையில் அதிகூடிய வாக்குகளை பெற்று தமிழ் தேசியம் தொடர்ச்சியாக இறுதிப்பதற்காக மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள்.

அதில் இரண்டாவதாக நாங்கள் பார்க்க வேண்டி இருப்பது இணைந்த வடக்கு கிழக்கில் மக்கள் உறுதியாக இருக்கின்றார்கள். இணைந்த வடக்கு கிழக்கு தான் தமிழர்களின் அரசியல் தீர்வு என்பதனை இந்த தேர்தல் வெளிக்காட்டி இருக்கின்றது.

ஜனாதிபதி தேர்தலில் பிரிந்து இருந்தாலும் கருத்து முரண்பாடுகள் காரணமாக சில பிரசாரங்களை மேற்கொண்டாலும் கூட இனிவரும் காலங்களில் அந்த முரண்பாடுகளை தவிர்த்து நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு குடையின் கீழ் ஒரு அணியில் ஒரு சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இணையும் ரணில் – சஜித் – நாடாளுமன்ற தேர்தலுக்கு புதிய கூட்டணி!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை கூட்டப்பட்ட கட்சி கூட்டத்திலேயே இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு அழைப்பு விடுக்கவுள்ளனர்.

மேலும், இந்த தீர்மானம் இரண்டு கட்சிகளும் இணைய வேண்டும் என்ற மக்களின் வேண்டுகோளுக்கிணங்க மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனவிற்கு எதிராக கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

ரணில் மீது ஐரோப்பிய தேர்தல் குழு குற்றச்சாட்டு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பிரசாரத்தின் போது, சட்டத்தை மீறியதாக, ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

2024 ஜனாதிபதித் தேர்தல் குறித்த, தமது பூர்வாங்க அறிக்கையை ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணிக்குழு வெளியிட்டுள்ளது.

பொதுத்துறை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, சமூக நலத்திட்டங்கள், வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் மற்றும் சிறு வணிகங்களுக்கான பண உதவித் திட்டங்கள் என்பன, தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டன.

அத்துடன், இந்த விடயங்களுக்கு அரச ஊடகங்களில் சாதகமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பிரசாரப் பேரணிகளில் அரச மற்றும் உள்ளூர் அதிகாரிகள் பங்கேற்றனர் என்றும் கண்காணிப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஸ்பெயினின், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணியின் பிரதான கண்காணிப்பாளருமான நாச்சோ சான்செஸ் அமோர் (Nacho Sánchez Amor), இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் ஆணையகம், தேர்தலின் அனைத்து முக்கிய கட்டங்களிலும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்து சுதந்திரமாகவும் உறுதியுடனும் செயன்முறையை நடத்தியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் குழு, எதிர்கால தேர்தல்களை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் உட்பட இறுதி அறிக்கையை வரும் மாதங்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Posted in Uncategorized