நீதிமன்றத்தின் ஊடாக அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் அநுர

அதிரடி நடவடிக்கை ஒன்றுக்கு புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தயாராவதாக இலங்கையின் அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தற்போதைய அமைச்சரவையை கலைத்த பிறகு, புதிய அமைச்சரவைக்கான பொதுத் தேர்தலுக்கு முன்பாக நீதிமன்றத்தின் ஊடாக சட்டரீதியான நடவடிக்கை ஒன்றை அநுர மேற்கொள்ளவுள்ளார் என ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த நீதிமன்ற நடவடிக்கை நடைமுறைப்படத்தப்படும் போது, மகிந்தவின் கீழ் பணியாற்றிய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பொதுக்கடன் மறுசீரமைப்புக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு!

பொதுக்கடன் மறுசீரமைப்பு தொடர்பான எந்தவொரு உடன்படிக்கையிலும் அதிகாரிகள் ஈடுபடுவதைத் தடுக்குமாறு கோரி, அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மக்கள் போராட்டக் கூட்டணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே நேற்று (20.09.2024) உயர் நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் தலையீட்டின் அடிப்படையில் அரசாங்கத்தால் முன்மொழியப்படும் பொருளாதார தீர்வுகள் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் உறுதியான தீர்வுகள் அல்ல தாம் உறுதியாக நம்புவதாக மனுதாரர், தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

வெளியேறு ஐஎம்எப்
எனவே, ‘வெளியேறு ஐஎம்எப்’ இயக்கத்திற்கு தாம் தொடர்ந்து ஆதரவளித்து தலைமைத்துவத்தை வழங்குவதாக முதலிகே தமது மனுவில் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து ஆராய்வு

இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்யக்கோரி பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள வரைபை வாக்கெடுப்புடனோ அல்லது வாக்கெடுப்பின்றியோ நிறைவேற்றுவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஆராயப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமானது.

அன்றைய தினம் உலகளாவிய மனித உரிமைகள் நிலவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் உரை மற்றும் மியன்மார் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கை, அதன்மீதான விவாதம் என்பவற்றைத் தொடர்ந்து இலங்கை விவகாரம் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் உள்ளடக்க நடைமுறைப்படுத்தியதில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் என்பன தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் உரையாற்றினார்.

அதனைத்தொடர்ந்து, உயர்ஸ்தானிகரின் அறிக்கை தொடர்பில் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றியதுடன் உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் இயங்கிவரும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் அவற்றின் அறிக்கைகளைச் சமர்ப்பித்தன.

அவ்வறிக்கைகளில் இலங்கை தொடர்பாக ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை மேலும் இருவருடங்களுக்கு நீடிக்கக்கூடியவகையில் அத்தீர்மானத்தைப் புதுப்பிக்குமாறு பேரவையிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இலங்கை தொடர்பில் 46/1 தீர்மானம், பின்னர் 51/1 ஆகக் காலநீடிப்புச் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த நிலையில், அத்தீர்மானம் இம்மாததத்துடன் முடிவுக்கு வருகிறது.

அதனையடுத்து, புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவருவது பற்றி முன்னர் ஆராயப்பட்ட போதிலும், இலங்கையில் இது தேர்தல் ஆண்டு என்பதால் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மேலும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குக் காலநீடிப்புச் செய்வதற்கான சாத்தியப்பாடு குறித்து பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் ஆராய்ந்து வருகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் பிரிட்டன் தலைமையில் அமெரிக்கா, கனடா, மாலாவி, வட மெசிடோனியா மற்றும் மொன்டெனிக்ரோ ஆகிய இணையனுசரணை நாடுகளின் ஏற்பாட்டில் இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தைக் காலநீடிப்புச் செய்வது குறித்தும், அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் வியாழக்கிழமை (19) பேரவையில் (பக்க அறையில்) ஆராயப்பட்டுள்ளது.

இதில் இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகள், உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச்சபை ஆகியவற்றின் செயற்பாட்டாளர்களுடன் இலங்கையைச்சேர்ந்த செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டிருக்கும் இலங்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தலைப்பிலான முதல் வரைபு குறித்தும், அதனை வாக்கெடுப்புடனோ அல்லது வாக்கெடுப்பின்றியோ நிறைவேற்றுவதற்கான சாத்தியப்பாடு குறித்தும் ஆராயப்பட்டள்ளது.

இதேவேளை, இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட ஆணையை நீடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ள இந்த வரைபில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ளவேண்டியிருப்பின், அத்திருத்தங்களுடன்கூடிய இறுதி வரைபு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் வாரத்தில் வெளியிடப்படும்.

ஜனாதிபதித்தேர்தல் முடிவுகளின் பிரகாரம் இத்தீர்மானத்தை வாக்கெடுப்புடன் நிறைவேற்றவேண்டிய அவசியம் ஏற்படின், இறுதி வரைபை அடிப்படையாகக்கொண்டு சிவில் சமூக அமைப்புக்கள் உறுப்புநாடுகளுடன் வாக்குகளைக்கோரி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும்.

Posted in Uncategorized

பசில் – நாமலின் பிள்ளைகள் நாட்டிலிருந்து வெளியேறிய செய்தி! மொட்டு கட்சி வெளியிட்டுள்ள பகிரங்க அறிவிப்பு!

பசில் ராஜபக்ச நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும் அவர், கட்சியின் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளுக்காக விரைவில் நாடு திரும்புவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச நேற்று அதிகாலை இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளார். அவர் சில வாரங்களுக்கு முன்னர் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படவிருந்தார்.

எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் காரணமாக பசிலுக்கான வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

தான் நாட்டை விட்டு வெளியேறப் போவது தொடர்பில் பசில் ராஜபக்ச ஏற்கனவே கட்சிக்கு அறிவித்திருந்தார். எனினும் அவர் தனது மருத்துவப் பரிசோதனையை தொடர்ந்து, கட்சியின் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விரைவில் நாடு திரும்புவார் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் இரண்டு பிள்ளைகளும் அவரது மனைவியின் குடும்பத்துடன் இன்று இலங்கையை விட்டு வெளியேறியதாகக் கூறப்படும் கூற்றுக்கள் உண்மைக்குப் புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நாமல் ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் கதிர்காமம் விகாரைக்கு சமய அனுஷ்டானங்களுக்காகச் சென்றுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

மட்டக்களப்பில் முன்னாள் எம்.பி மீது தாக்குதல்!

மட்டக்களப்பு கல்குடா தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயானந்தமூர்த்தியின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

வாழைச்சேனையில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று (20.09.2024) இரவு சென்ற இனந்தெரியாத நபர்கள் அவரின் வீட்டின் மீது தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகைகளும் கிழிக்கப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல் நடவடிக்கையை மூவரடங்கிய குழுவினர் முன்னெடுத்ததாக தாக்குதலுக்குள்ளான ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் தாக்குதலுக்குள்ளானவர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தே தன்மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். பிள்ளையானின் ஆதரவாளர்களே தன்னை தாக்கியிருக்ககூடும் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

பேரினவாதிகளுக்கு வாக்களித்து அவர்களை பலப்படுத்த தமிழர்கள் முட்டாள்களில்லை – முன்னாள் தவிசாளர் நிரோஸ்

இலங்கை பொருளாதார ரீதியில் திவாலானமைக்கு தமிழ் மக்கள் மீதான யுத்த செலவீனமும் இனவாதத்தினால் ; தமிழ் மக்களை நாட்டின் அபிவிருத்தியில் பயன்படுத்தத் தவறியமையுமே காரணம் என்ற உண்மையை ஏற்று சிந்திக்காத செயல்படாத பேரினவாதத் தலைவர்களை நோக்கி நாம் இனியும் வாக்களிக்க முடியாது என முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

அச்சுவேலி முரசொலி முன்றலில் இடம்பெற்ற தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்திய பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், தமிழ் மக்களின் வாக்குகள் தமக்குத் தேவை என வெற்றிவாய்ப்புக்காக போட்டியீடுகின்ற வேட்பாளர்கள் முன்டியடிக்கின்றனர். அவர்கள் தமிழ் மக்களிடத்தில் வாக்குகளைக் கேட்கும் போது, கடந்த காலத்தில் தமது அரசியல் நீரோட்டத்தில் எந்தளவு தூரம் இனவாத அணுகுமுறைக்குள் இருந்தனர் என்பதை சிந்தித்து நாட்டின் தலைவராவதற்கு அந்தஸ்தற்றவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று வெற்றி வாய்ப்புள்ளவராகக் கருதப்படும் வேட்பாளர்கள் இலங்கை பொருளாதார ரீதியில் நாடு திவாலான நிலைக்குச் சென்ற போது சிங்கள மக்களிடத்தில் வெளிப்படையாகவே இந்த மோசமான நிலைமை அத்தனைக்கும் சொந்த தாய் நாட்டில் ஒரு தேசிய இனமான தமிழ் மக்கள் மீது அரச இயந்திரத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொடிய யுத்த செலவீனம் காரணம் என்பதை நாட்டிற்கு தெளிவு படுத்தவில்லை. சர்வதேசத்திடம் கடன் வாங்கச் சென்ற அரசு தமிழ் மக்கள் உலக அளவில் புலம்பெயர்வினால் பொருளாதார ரீதியில் முன்னிலையில் உள்ளனர் என்ற அடிப்படையில் அவர்களது முதலீடுகளையும் பங்களிப்பினையும் நாட்டிற்குள் கொண்டு வருவதற்கான உண்மையான முயற்சிகளை எடுக்கவில்லை. தமிழ் மக்கள் அங்கீகரிக்கத்தக்க அரசியல் தீர்வும் தமிழ் மக்களுக்கு போர் மற்றும் போருக்கு பின் முன்னான சூழ்நிலைகளில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்புக் கூறல் இடம்பெற்று இருக்குமாயின் நாங்கள் ஒட்டுமொத்த இலங்கையராக முன்னேறியிருப்போம். இவற்றுக்கு இந்த பேரினவாத பௌத்த சிங்கள மேலாதிக்கத்தில் இருக்கக் கூடிய சிங்கள வேட்பாளர்கள் தயாரில்லை. அந்நிலையில் நாம் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டோம். எமது பிரச்சினைகளை முன்னிறுத்தும் தமிழ் வேட்பாளருக்கே வாக்களிப்போம் என்பதில் உறுதியாக இருப்போம் என முன்னாள் வலிகாமம் கழக்குப் பிரதேச சபைத்தவிசாளரும் ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

வாக்குச் சாவடிகளை அமைப்பதற்கு பாடசாலைகள் மற்றும் பொது இடங்களை வழங்கல்!

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வாக்குச் சாவடிகள் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. பாடசாலைகள் மற்றும் பொது இடங்கள் போன்றவற்றில் இந்த வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

அந்தவகையில் பாடசாலைகள் மற்றும் பொது இடங்களை, வாக்குச் சாவடிகள் அமைப்பதற்காக அந்தக் கிராமத்துக்கு பொறுப்பான கிராம சேவகர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்றையதினம் நாடளாவிய ரீதியில் இடம்பெறுகின்றது.

அதனடிப்படையில் யாழ்ப்பணம் அராலி வள்ளியம்மை வித்தியாலயமானது, வாக்குச் சாவடி அமைப்பதற்காக ஜே/160 கிராம சேவகர் திரு.சிந்துஜனிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

Posted in Uncategorized

கட்சிக்கு தெரியாமல் சஜித்திற்கு எழுதிக் கொடுத்த சுமந்திரனால் வெடித்த புதிய சர்ச்சை!

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஒருபகுதியை இலங்கைத் தமிழரசுக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எழுதி கொடுத்து தமிழ் மக்களை முட்டாள்களாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார் என அமெரிக்க சாஸ்பெரி பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு தேர்தலில் ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த தீர்மானம், முதலில், அக்கட்சியின் முக்கியஸ்தர்களின் பங்கேற்பு இல்லாத நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனால் எடுக்கப்பட்டது. இதன்போது கட்சியின் தலைவர் உட்பட பலர் இந்த தீர்மானம் தொடர்பில் தெளிவின்மையை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

இதனை தொடர்ந்து, பல சர்ச்சைகள் எழுந்தன. இதற்கிடையில், தமிழரசு கட்சியின் தேர்தல் குறித்த இறுதி தீர்மானமானது, ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய்ந்த பின்னரே அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.

இதற்கிடையில், சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தானே எழுதியதாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ள நிலையில், முதலிலேயே தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த போதிலும் மக்கள் மத்தியில் ஒரு நாடகம் நடத்தப்பட்டுள்ளதா என்னும் கேள்வி எழுகின்றது.

பேராசிரியர் கலாநிதி கீத பொன்கலன் தனியார் ஊடகம் ஒன்றின் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Posted in Uncategorized

உயிர் அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டேன்: தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரன்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன் என தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் நான் விலகி விட்டேன் என போலியான பல தகவல்கள் வெளிவந்தாலும் யாரும் இதனை நம்ப வேண்டாம்.

நான் ஒருபோதும் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் பின்வாங்கப் போவதில்லை.

வடக்கு – கிழக்கில் மாத்திரம் பிரசார நடவடிக்கையில் ஈடுப்பட்டாலும் கூட ஏனைய தென் பகுதியிலுள்ள தமிழ்பேசும் மக்கள் விரும்பினால் வடக்கு – கிழக்கு மக்கள் எடுக்கும் முடிவுக்கு தங்களது ஆதரவை பெற்று தாருங்கள்” என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Posted in Uncategorized

இறுதி கட்டத்தில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிக்கைகள்!

இறுதி கட்டத்தில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிக்கைகள்!

ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நிலையத்துக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரமே வாக்கெடுப்பு நிலையத்தினுள் பிரவேசிக்க சட்டத்தினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பு நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள், வாக்கெடுப்பு நிலைய பணியாட்குழுவினர்,வாக்கெடுப்பு நிலைய கடமைகளில் ஈடுபட்டிருக்கும் பொலிஸ் அலுவலர்கள், போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்கள், ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் முகவர்கள்,ஜனாதிபதி வேட்பாளர்களின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள், ஜனாதிபதி வேட்பாளர்களின் பெரும்பாக முகவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஒவ்வொரு வேட்பாளர் சார்பாக முறைப்படி நியமிக்கப்பட்ட வாக்கெடுப்பு நிலைய முகவர்கள், தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதிபெற்ற ஒழுங்கமைப்புகளின் முகவர்கள் உள்நாட்டு/வெளிநாட்டு கண்காணிப்பு மற்றும் தெரிவத்தாட்சி அலுவலரின் அனுமதிபெற்ற அலுவலர்களுக்கும் வாக்கெடுப்பு நிலையத்தினுள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் தேர்தல் ஆணைக்குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.