சஜித் வெற்றி பெற்றால் சுமந்திரனுக்கு அமைச்சு பதவி: பகிரங்கப்படுத்திய மூத்த சட்டத்தரணி

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஒருவேளை தேர்தலில் வெற்றிபெற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு அவர் நிச்சயம் அமைச்சுப்பதவியை வழங்குவார் என மூத்த சட்டத்தரணியான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக நேற்றையதினம் (18.09.2024) பிரசாரத்தில் ஈடுபட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

“சிலவேளை, சுமந்திரனுக்கு அமைச்சுப்பதவி வழங்குவதை மக்கள் எதிர்ப்பதற்கு வாய்ப்புள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால் அமைச்சுப் பதவிக்கு சமனான பதவி அவருக்கு வழங்கப்படும்.

அவருக்கு அமைச்சரை விட அதிகமான சலுகைகள் வழங்கப்படும். அதனால் தான் சுமந்திரன் சஜித்தை ஆதரிக்கின்றார்” எனத் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!

தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்காக விசேட தொடருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் விசேட தொடருந்துகளை இயக்குவதற்கு தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை ஜனாதிபதி தேர்தல் அன்று(21.09.2024) தொடருந்து நேர அட்டவணை வழமை போன்று நடைமுறைப்படுத்தப்படும் என தொடருந்து பிரதி பொது முகாமையாளர் நந்தன இண்டிபோலகே தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கு அடுத்த நாள், 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நீண்ட தூர தொடருந்துகள் சேவையில் ஈடுபடும் எனவும், குறுகிய தூர தொடருந்துகளில் சில குறைப்புக்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்டத்தில் இந்திய தூதரகத்தில் இருந்து அவசர தொலைபேசி அழைப்புக்கள்!

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ள நிலையில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்குள் இந்தியாவின் இறையான்மை கேள்விக்குறியாகும் என்ற அச்சத்தில் சஜித் பிரேமதாசவை வெற்றியடைய வைக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைய, இந்தியா தனது பலத்தை நிரூபிக்க 10 றோ அதிகாரிகளை வடமாகாணத்தில் களமிறக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதாவது இந்தியா தனக்கு சாதகமான வேட்பாளரை மிக துள்ளியமாக ஆராய்ந்து இறுதிக்கட்டத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவினை வெளியிட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவிற்கான ஆதரவு நாளுக்கு நாள் குறைவடைந்து வரும் நிலையில் ஜே.வி.பிக்கான ஆதரவு படலத்தை எஞ்சியுள்ள இரண்டு தினங்களில் உடைக்க தீவிரமாக மூன்று தளபதிகளை களத்தில் இறக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த பின்னணியில் 20 ஆம் திகதி முக்கிய பாய்ச்சல் நடவடிக்கையொன்றினை ரணில் விக்ரமசிங்க நகர்த்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் களநிலவரம் தொடர்பில் இலங்கையின் அரசியல் ஆய்வாளர் எம்.எம் .நிலாம்டீன் ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவ்வாறு தகவல் வெளியிட்டுள்ளார்.

Posted in Uncategorized

தமிழரசுக் கட்சியில் யார் மீது யார் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது?

தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் மீண்டும் ஒன்றிணைந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக செயற்படவேண்டும் என்பதே எமது விருப்பம் என வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

ஆனால் இனி அது கனவாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில் நேற்றையதினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“தமிழரசுக் கட்சி கட்டுக்கோப்பான கட்சி. அதை யாரும் மாற்ற முடியாது. தேர்தல் காலத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை முன்வைப்பார்கள்.

அதனை கட்சி கூடி பேசி முடிவை அறிவிக்கும். அது கட்சியின் முடிவு. அதில் உடன்பாடு இல்லாத தனிநபர்கள் சில முடிவுகளை எடுக்கும் நிலை உருவாகிறது.

அவ்வாறே இந்த தேர்தல் நேரத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழரசுக் கட்சிக்கு கொள்கை இருக்கிறது.

அது நிலையாக இருக்கும். கட்சி ரீதியில் சுமந்திரன் மீதும் தவறு இருக்கும். ஏனையவர்கள் மீதும் தவறு இருக்கும் அது பேசிக்கொள்ளலாம்.

கட்சி நிலையாக இருக்கும். கருத்துச் சொல்வதற்கு சுதந்திரம் இருக்கு. அதன் அடிப்படையில் அவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.” என்றார்.

Posted in Uncategorized

சமந்தா பவரை தொலைபேசியில் அழைத்து உதவி கோரிய ரணில்!

அமெரிக்காவில் உள்ள சமந்தா பவரை தொலைபேசியில் அழைத்து இலங்கைக்கு தேவையான வசதிகளை செய்து தர ஏற்பாடு செய்தவர் ரணில் விக்ரமசிங்கவே என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

மினுவங்கொடையில் இடம்பெற்ற ரணிலால் இயலும் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

மக்களுக்கு விசேட அறிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை
“நாடு வீழ்ச்சியடைந்தபோது, நாட்டைப் பொறுப்பேற்க எந்தத் தலைவரும் முன்வரவில்லை. அதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வந்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பொருளாதாரத்தை நல்லதொரு நிலைக்கு கொண்டுவந்தார்.

அமெரிக்காவில் உள்ள சமந்தா பவரை தொலைபேசியில் அழைத்து இலங்கைக்கு தேவையான வசதிகளை செய்து தர ஏற்பாடு செய்தார்.

இவ்வருட ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் இத்தகைய சர்வதேச உறவுகளைக் கொண்ட வேட்பாளர் யாரும் இல்லை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றது இந்த நாட்டு மக்களின் அதிஷ்டம். அதன் பலனை இன்று மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

இன்று நாம் சர்வதேச ரீதியில் முன்னோக்கிச் செல்லும் போது, இரண்டரை வருடங்களில் இலங்கை எவ்வாறு மீட்கப்பட்டது என்று அந்த அந்த மக்கள் கேட்கின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கைக்கு செய்த விடயங்களே, பங்களாதேஷுக்கு இன்று தேவை என்று உலக வல்லரசுகள் கூட கூறுகின்றன.

எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்” என்றார்.

Posted in Uncategorized

அரசியல் அந்தகர்களே தமிழ்ப் பொதுவேட்பாளரை எதிர்க்கிறார்கள் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு

தமிழ்ப் பொதுவேட்பாளரைத் தென்னிலங்கை அரசியல்வாதிகள் எதிர்ப்பதன் காரணம் வெளிப்படையானது. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க, அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையே மும்முனைப் போட்டி நிகழுகின்ற நிலையில் அவர்களுக்குத் தமிழ்ப் பொதுவேட்பாளர் இடையூறாக இருக்கிறார்.

ஆனால் தமிழ்த் தேசியம் பேசுகின்ற சிலரும் தமிழ்ப் பொதுவேட்பாளர் மீது வசைபாடுகின்றனர். யானை பார்த்த அந்தகர்களைப் போன்று, தமிழ்ப் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பதன் தார்ப்பரியங்களை முழுமையாகப் புரிந்துகொள்ளாத அரசியல் அந்தகர்களாக இவர்கள் இருக்கிறார்கள் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து இணுவில் அண்ணா சனசமூகநிலைய முன்றலில் நேற்று செவ்வாய்க்கிழமை (17.09.2024) இடம்பெற்ற பரப்புரைக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ்ப் பொதுவேட்பாளர் இந்தியாவின் ஆலோசனையின் பேரில் நிறுத்தப்பட்டிருப்பதாக இந்த அரசியல் அந்தகர்கள் விமர்சிக்கின்றார்கள். எதற்கெடுத்தாலும் இந்தியாவைக் குற்றம் சாட்டும் மனோநிலையில் உள்ள அரசியல் அந்தகர்களின் விமர்சனமே இது. இதுவரையில் இந்தியா தமிழ்ப் பொதுவேட்பாளருக்குச் சாதகமான கருத்துகள் எதனையும் எங்கும் தெரிவித்திருக்கவில்லை. மாறாக, கொழும்பு அரசியலில் தலையீடு செய்ய விரும்பும் எந்தவொரு வெளிநாட்டு அரசியல் சக்திக்கும் பொதுவேட்பாளர் என்பவர் இடையூறாகவே அமைவார்.

தமிழ்ப் பொதுவேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை வெல்ல வைப்பதற்காகவே நிறுத்தப்பட்டுள்ளார் என சஜித் பிரேமதாசாவுக்கு வாக்குக் கேட்டுத் திரியும் தமிழ் அரசியல் வாதிகள் விமர்சிக்கிறார்கள்.

ரணில் விக்கிரமசிங்காவுக்கு ஆதரவாகச் செயற்படுவதாயின் இந்த அரசியல்வாதிகளைப் போன்றே ரணிலிடம் பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு பொதுவேட்பாளரை நிறுத்தாமல் நேரடியாகவே அவருக்குப் பிரச்சாரத்தை செய்திருக்கமுடியும்.

தமிழ்ப் பொதுவேட்பாளர் யாரோ ஒருவரின் வெற்றி வாய்ப்பைப் பாதிப்பார். அதற்காக யாரோ ஒருவரின் சார்பில் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பார் என்று கூறுவது அபத்தமானது. தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இக்காலகட்டத்தின் ஒரு தவிர்க்க முடியாத முடிவு.

எவரது தூண்டுதலில் பேரிலும் எடுத்த முடிவு அல்ல இது. தமிழ்த் தேசியக் கட்சிகளும் பொது அமைப்புகளும் நீண்டகாலமாக ஆராய்ந்து தமிழ்த் தேசிய அரசியலை வீறுடன் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக எடுத்த ஓர் உறுதியான முடிவு இது. ஆகவே தமிழ் மக்கள் இந்த விமர்சனங்களை எல்லாம் கருத்திற் கொள்ளாது சங்குச் சின்னத்துக்கு வாக்களித்து பொதுவேட்பாளர் என்ற கோட்பாட்டை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

தமிழர்கள் தேசமாக ஒன்றிணைய சங்கு சின்னத்திற்கு புள்ளடி இடுவோம் – சபா குகதாஸ்!

செப்டெம்பர் 21 இலங்கை சனாதிபதித் தேர்தலில் ஈழத் தமிழர்களாகிய நாம் தேசமாக ஒன்றிணைந்து தமிழ்ப் பொது வேட்பாளரின் சின்னமான சங்குக்கு நேரே புள்ளடி இட்டு ஒற்றுமையை பலப்படுத்துவோம் என ரெலோவின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தென்னிலங்கை பிரதான வேட்பாளர்களின் வாக்குறுதிகள் தேர்தல் விஞ்ஞாபனங்கள் கடந்த காலங்களை போன்றே தேர்தல் முடிவுற காற்றோடு காற்றாக பறந்து விடும் இதுதான் உண்மை எனவே தொடர்ந்து ஏமாறும் தரப்பாக இல்லாமல் தேசிய இனப்பிரச்சினை இன்றுவரை தீர்க்கப்படவில்லை என்பதை ஜனநாயக புள்ளடியில் காட்டுவோம்.
தென்னிலங்கை சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்கள் அதிகார கதிரையில் அமர்வதற்கான போட்டியிலும் ஒற்றையாட்சி மனோ நிலையிலும் குறியாக உள்ளனர் தேசிய இனப்பிரச்சினையை தீர்க்கப்பட்டால் மட்டுமே நாடு முன்னோக்கி செல்லும் என்ற உண்மையை புரிந்தும் அதற்கான தீர்மானங்கள் எதுவும் இன்றி வெறுமனே பூகோள நாடுகளின் நிகழ்ச்சி நிரலிலே களத்தில் இறங்கியுள்ளனர் சிங்கள வேட்பாளர்கள் ஆகவே தமிழ் மக்கள் தமது அபிலாசையை முன் நிறுத்தி அதன் பேரப்பலத்தை உறுதி செய்ய சங்குக்கு வாக்களிப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பதற்றமடைய வேண்டாம்! நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரை

ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள் குறித்து பதற்றமடைவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் காலத்தில் சமூக அமைதியை பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அவர் ஐக்கியத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மதத்தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல் செயற்பாட்டாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

நாங்கள் அனைவரையும் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு அமைதியான சூழலிற்கு பங்களிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அனைத்து பிரஜைகளும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வது தேர்தல் வேட்பாளர்களின் கௌரவத்திற்கும்,தேர்தல் நடைமுறைக்கும் அவசியமான விடயம்.

இதேவேளை தேர்தல் வன்முறைகள் இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து எங்களிற்கு எந்த தகவலும் கிடைக்கிவில்லை.

வன்முறைகள், அமைதியின்மை குறித்த பல தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதவை, அதனை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அரச புலனாய்வின் முக்கிய தகவல்! பெரும் பாய்ச்சலுக்கு தயாராகும் ரணில்

ஜனாதிபதித் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று முதலாம் இடத்தை பெறுபவர் 40 வீதமான வாக்குகளையும் இரண்டாவது இடத்தை பெறுபவர் 35 வீதமான வாக்குகளையும் பெற உள்ளதாக அரச புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இரண்டாம் இடத்தில் இருந்தாலும் இவை அனைத்தையும் மீறி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெரும் பாய்ச்சலுக்கு தயாராகுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்ற அலை உருவாகி வருகின்றது.

இதேவேளை, தபால் மூல வாக்களிப்பில் அதிகளவான வாக்குகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே வழக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், அதிகளவான இளைஞர்கள் மாற்றத்தை எதிர்ப்பார்த்து அநுரகுமார திஸாநாயக்கவிற்கு வாக்களிக்க தீர்மானித்துள்ளார்கள்.

Posted in Uncategorized

ரணிலால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபயவே பலி : அநுர பகிரங்கம்

மோசடி, ஊழல் மற்றும் துஷ்பிரயோகம் அற்ற அரசாங்கத்தை அமைப்பதற்கு தமக்கு வாக்களிக்குமாறு தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க மக்களை வலியுறுத்தியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன் அரசியல் ஸ்திரத்தன்மையை விரைவில் உருவாக்கும் என்றும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு புதிய சகாப்தத்தின் மாற்றத்தை நோக்கி, நாட்டை முன் நகர்த்துவதற்காக செப்டம்பர் 21 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தை கைப்பற்றுகிறது என்று திஸாநாயக்க கூறியுள்ளார்.

இதேவேளை, தற்போதைய பொருளாதார நெருக்கடியானது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உருவாக்கப்பட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே விக்ரமசிங்கவினால் ஏற்பட்ட நெருக்கடிக்கு பலியாகியதாகவும் அநுரகுமார தெரிவித்துள்ளார்.

சர்வதேச இறையாண்மை பத்திரத்திலிருந்து இலங்கை 15.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாகவும், மகிந்த ராஜபக்ச காலத்தில் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே பெறப்பட்டதாகவும், மீதி 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ரணில் விக்ரமசிங்கவின் நான்கு வருட நல்லாட்சி அரசாங்கத்தின் போது பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், கோட்டாபய பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர், ரணில் கடனை செலுத்துவதை நிறுத்திவிட்டு, சேமிக்கப்பட்ட டொலரில் எரிபொருள் மற்றும் எரிவாயுவை கொள்வனவு செய்ததாக அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized