Author: Yaalavan
வாக்களித்தவுடன் உடனடியாக வீடுகளுக்கு செல்லுங்கள் – மக்களுக்கு விசேட அறிவிப்பு!
எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த பின்னர் உடனடியாக வீடுகளுக்குச் செல்லுமாறும், நாட்டு மக்களிடம் தேர்தல் ஆணைக்குழு கேட்டுள்ளது.
காரணமின்றி வாக்குச் சாவடிகளில் அல்லது அருகில் இருக்க வேண்டாம் என்றும் வாக்காளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எந்தவொரு சந்தர்ப்பத்தில் தேர்தல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.
வாக்களிப்பு நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. வாக்களித்ததன் பின்னர் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை பகிரங்கமாக சொன்னால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
பிரசார நடவடிக்கை
அதேவேளை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அனைத்து தேர்தல் பிரசாரங்களும் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மொட்டுவின் இனவாத அரசியலுக்கு தலைமையாக ரணில்: அநுர பகிரங்கம்!
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் இனவாத செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே தலைமை வகித்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாவனல்லையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கூறுகையில், “சிறிலங்கா பொதுஜன பெரமுன எப்போதும் இனவாத அரசியலையே முன்னெடுக்கின்றது.2015ஆம் ஆண்டு ராஜபக்ஷக்கள் தோல்வியடைந்தனர்.
அவர்கள் பொது மக்களின் கோடிக்கணக்கான சொத்துக்களைக் கொள்ளையடித்திருந்தனர். மக்கள் அதற்கு எதிராக வாக்களித்ததை அடுத்து அவர்கள் தோல்வியைச் சந்தித்தனர்.
2016ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரங்களையடுத்து, தோல்வியடைந்த மகிந்த குழுவினர் மீண்டும் தலை நிமிர்ந்தனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
அதனைத் தொடர்ந்து ஏப்ரல்-21 தாக்குதலின் பின்னர் மகிந்த தரப்பு முழுமையாகத் தலைநிமிர்ந்ததுடன், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.
அதன் பின்னரும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டார்கள், இவ்வாறான சூழலிலேயே நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது.
அதன்பின்னர் வாக்களித்த மக்கள் அவர்களை விரட்டியடித்தார்கள் எனினும் அந்த குழுவினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே தலைமை வகித்து வந்தார்” என்றார்.
தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் பிளவடைந்துள்ள தமிழரசுக்கட்சி : ஜெயசிறில் சங்கடம்!
தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதன் ஊடாக தமிழ் மக்களின் எதிர்கால திட்டங்கள் சிறப்பாக செயற்படும் என காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு முக்கியஸ்தருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக்கட்சியினர் இரண்டாக பிரிந்து நிற்பது வடகிழக்கு தமிழர்களுக்கு சங்கடங்களை தருகின்றது.
தமிழரசுக்கட்சி தலைமைகள் தளம்பல் நிலையில் இருந்தமையினால் உறுப்பினர்கள் பல்வேறு வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து வருகின்றார்கள்.
இவ்வாறு பல உருவங்களாக பிரிவதற்கு தமிழரசுக் கட்சி தலைமைகள் விட்ட பிழையே காரணமாகும்.நாங்கள் இந்த அரசாங்கத்தில் எவரையும் நம்ப விரும்பவில்லை.
இங்கு ஒரு இனப்பிரச்சினை இருக்கின்றது.எமது மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். எனவே எதிர்வரும் தேர்தலில் எமது கோரிக்கையானது சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதும் எமது ஒற்றுமையை உலகிற்கு பறைசாற்றுவதுமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
ரணில் – அநுரவை நம்பி ஏமாறாதீர்கள்! மக்களுக்கு சஜித் எச்சரிக்கை
ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க மற்றும் அநுரகுமார திஸாநாயக்கவை நம்பி ஏமாற வேண்டாம் என்று நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ரணில் விக்கிரமசிங்க கூட்டணியிடம் நாட்டை ஒப்படைப்பதா? இல்லை என்றால் நாட்டைக் கட்டி எழுப்புகின்ற, நாட்டை வெற்றி பெறச் செய்யும் பொதுமக்களின் யுகத்திற்காக ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெறச் செய்வதா? என்ற தீர்மானம் மக்கள் வசமே காணப்படுகின்றது.
இன்று ரணில் மற்றும் அநுர பெரிய டீல் ஒன்றை செய்திருக்கின்றார்கள். அது சஜித் பிரேமதாஸவை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்கின்ற டீல் ஆகும்.
ரணில் மற்றும் அநுர அரசியல் ஜோடி எந்த அளவு டீல் செய்து கொண்டாலும், மக்களை சுபீட்சமான வளமான வாழ்க்கைக்கு கொண்டு செல்வதற்கு மக்களுடனே எமது டீல் காணப்படுகின்றது.” – என்றார்.
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரியநேந்திரனை ஆதரித்து பொதுக்கூட்டம்!
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதி பொது வேட்பாளர் அரியநேந்திரனை ஆதரிக்கும் பொதுக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பொதுக்கூட்டம் நேற்று (16.09.2024) யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், க. அருந்துவபாலன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர்.
பெருந்திரளான மக்கள்
இந்நிகழ்வில், பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த போராளிகள் நலன்புரிச் சங்கம்!
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக போராளிகள் நலன்புரி சங்க தலைவர் பொ.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழர்களின் விடா முயற்சியின் ஒரு பெருந்தெரிவே தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றும் இந்த தொடர் பயணத்தின் அடையாளச் சின்னமே சங்கு என்றும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், குறித்த சின்னம் தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்த போதிலும் தமிழ் தேசியத்தின் மலர்ச்சியான பா. அரியநேத்திரன் திகழ்வதாக போராளிகள் நலன்புரி சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது!
ஜனாதிபதி வேட்பாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஜனசெத பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பத்தரமுல்லே சீலரதன தேரர் மற்றும் அவரது பாதுகாவலர்களை கடுஞ் சொற்களினால் திட்டி தாக்க முற்பட்டதாக ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அனுராதபுரம் புதிய பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் நேற்றையதினம் (15.09.2024) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்றையதினம் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அனுராதபுரம் பண்டுலாகம பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திடீரென காணாமல்போயுள்ள அரச வாகனங்கள்: தீவிரமடையும் விசாரணைகள்!
வடமத்திய மாகாண சபைக்கு சொந்தமான 19 வாகனங்கள் மற்றும் 10 மோட்டார் சைக்கிள்கள் காணாமல்போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் வெளியிடப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
முன்னாள் அமைச்சர்கள், கல்வி அமைச்சு உள்ளிட்ட பல அலுவலகங்களின் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இவ்வாறு காணாமல்போயுள்ளன.
இவ்வாறு காணாமல்போன இந்த 19 வாகனங்களில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்திய கார்கள் மற்றும் ஜீப்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பதிவு சான்றிதழ்களின் படி வடமத்திய மாகாண சபைக்கு சொந்தமான இந்த வாகனங்கள் மாகாண சபையில் காணப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரனை ஆதரித்து மேடையேறிய மாவை!
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேந்திரனை ஆதரித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேடையேறி உரையாற்றியுள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் கூட்டம் கிளிநொச்சியில் நேற்று (16.09.2024) பிற்பகல் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் மேடையேறிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றியுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த மாவை சேனாதிராஜா,
“நாங்கள் இலங்கையில் பல ஆண்டுகளாக இந்த விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். எங்களது எண்ணங்களும் தீர்மானங்களும் அர்ப்பணிப்புகளும் விடுதலைக்காகவே அமைந்திருக்கின்றன.
அரசியல் சூழலில் இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டாலும் எமது இனத்தின் விடுதலையை நாங்கள் மறந்து விட மாட்டோம். எங்களது உயிரை அர்ப்பணிப்பதற்கு எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கின்றோம்.
உதாரணமாக, இந்த நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக சத்தியபிரமாணம் செய்து நாடாளுமன்றத்துக்கு போவது வழக்கம். நாங்கள் எங்களது விடுதலைக்காக எங்கள் உயிரை அர்ப்பணிக்க எந்த நேரத்திலும் தயாராக இருக்கின்றோம்.
இன்று ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட்டிருக்கின்ற பொது வேட்பாளருக்கு நான் என்னுடைய வாக்கை செலுத்துவேன். அதேபோல அனைத்து மக்களும் இந்த பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளருக்கு தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியின் தீர்மான அறிக்கையை வவுனியாவில் நேற்று முற்பகல் நடைபெற்ற கட்சியின் விசேட குழு கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்கள் முன்னிலையில் மாவை சேனாதிராஜா வாசித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.