அம்பாறை – சங்குச் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுகம்

அம்பாறை – சங்குச் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுகம் இன்று (16) இடம் பெற்றது!

சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் இன்று (16) காரைதீவு கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.

இதில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ரெலோ , ஈ.பி.ஆர்.எல்.எப், புளட், ஈரோஸ் ஜனநாயக முன்னணி ,ஜனநாயக போராளிகள் அமைப்பு ஆகிய கட்சிகளின் அம்பாறை மாவட்ட தலைவர்கள் ,முக்கியஸ்த்தர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அம்பாறை இணைப்பாளர் கென்றி மகேந்திரன் தலைமையில் இடம் பெற்ற இக் கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் இடம் பெற்றதுடன் ,வேட்பாளர்கள் கட்சி முக்கியஸ்த்தர்களின் உரைகளும் இடம் பெற்றன.

வேட்பாளர்களும் இலக்கங்களும்
இலக்கம் – 01 கதிர்காமத்தம்பி வேலுப்பிள்ளை
இலக்கம் 02 கிருஸ்ணபிள்ளை லிங்கேஸ்வரன்
இலக்கம் 03 தியாகராசா கார்த்திக்
இலக்கம் 04 பாலசுந்தரம் பரமேஸ்வரன்
இலக்கம் 05 ராஜகுமார் பிரகாஜ்
இலக்கம் 06 சபாபதி நேசராசா
இலக்கம் 07 சிந்தாத்துரை துரைசிங்கம்
இலக்கம் 08 சுப்ரமணியம் தவமணி
இலக்கம் 09 செல்லத்தம்பி புகனேஸ்வரி
இலக்கம் 10 சோமசுந்தரம் புஸ்ப்பராசா

Posted in Uncategorized

மட்டக்களப்பு மாவட்டத்தில் 49 வேட்பு மனுக்கள் ஏற்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் உட்பட 56 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் ஒரு கட்சி 6 சுயேச்சைகுழுக்கள் உட்பட 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், 22 கட்சிகள் 27 சுயேச்சைக்குழுக்கள் உட்பட 49 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், 392 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக மட்டு அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமானஜே.ஜே. முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பழைய கச்சேரி மண்டபத்தில் நேற்று (11) வெள்ளிக்கிழமை தேர்தல் வேட்புமனு தொடர்பாக இடம் பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 449,686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் 442 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறும்.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை பாரம் எடுக்கப்பட்டது. இதில் 23 கட்சிகள் 33 சுயேச்சைக்குழுக்கள் உட்பட 56 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவற்றில் 1 கட்சி 6 சுயேச்சைக்குழு உட்பட 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதுடன் 22 கட்சிகள் 27 சுயேச்சைக் குழுக்கள் உட்பட 49 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது என அவர் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த 2020 ஆம் ஆண்டு தேர்தலில் மாவட்டத்தில் 5 பிரதிநிதிகளை தேரந்தெடுப்பதற்கு 16 கட்சிகளும் 22 சுயேச்சைக்குழுக்களைச் சேர்ந்த 304 வேட்பாளர்கள் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

2024 பொதுத் தேர்தல் : தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள 2024 பொதுத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களில் 690 குழுக்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில்74 நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதிக எண்ணிக்கையிலான அரசியல் குழுக்கள்
ஏதேனும் அநீதிகள் இடம்பெற்றுள்ளதாக உணர்ந்தால் அந்த குழுக்கள் நீதிமன்றத்திற்கு செல்ல முடியும் .

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான அரசியல் குழுக்கள் போட்டியிடுவதுடன், அதன் எண்ணிக்கை 64 ஆகும். மொனராகலை மற்றும் பொலன்னறுவை தேர்தல் மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையிலான அணிகள் போட்டியிடுவதுடன், அங்கு தலா 15 அணிகள் போட்டியிடுகின்றன.

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று (11) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது.

எதிர்காலத்தில் விருப்பு வாக்கு இலக்கங்கள் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஜனாதிபதி அநுரவிற்கு சமந்தா பவர் அளித்த உறுதிமொழி!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் நிருவாகி சமந்தா பவருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (11) இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது.

பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதி மற்றும் சமந்தா பவர் ஆகியோருக்கு இடையில் கருத்துப் பரிமாறப்பட்டதுடன், எதிர்காலத்தில் இலங்கைக்கும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அரசாங்கம் முன்வைத்த கொள்கை அறிக்கைக்கும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் கொள்கைகளுக்கும் இடையிலான ஒற்றுமையை இதன்போது சுட்டிக்காட்டிய சமந்தா பவர், மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் முழு ஆதரவு வழங்கப்படும் என்றும் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளை விரிவுபடுத்தவும் அதேபோன்று சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும் இந்தச் செயற்பாடுகள் உதவும் எனவும் சமந்தா பவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Posted in Uncategorized

வன்னியில் அறுவரை தெரிவு செய்ய 423 பேர் களத்தில்!

நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 47 கட்சிகள் மற்றும் சுயேட்சைகுழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், 4 குழுக்களின் விண்ணப்பங்கள் நிராகரிகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபரும் தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலருமான சரத்சந்திர தெரிவித்தார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்று (11) மதியம் 12 மணி அளவில் நிறைவுக்கு வந்திருந்தது.

அந்தவகையில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இம்முறை வன்னி தேர்தல் மாவட்டத்தில் 24 அரசியல் கட்சிகளும் 27 சுயேட்சைக் குழுக்கள் என மொத்தமாக 51 குழுக்கள் வேட்பு மனுக்களை கையளித்திருந்தன.

அவற்றில் 2 அரசியல் கட்சிகள் மற்றும் 2 சுயேட்சை குழுக்களினது விண்ணப்பங்கள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படாத காரணத்தினால் தேர்தல் அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக எங்கள் மக்கள் சக்தி மற்றும் சிறிரெலோ கட்சியின் ப. உதயராசா போட்டியிடவிருந்த ஜனநாயக தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளின் வேட்பு மனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் 47 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார்.

இதேவேளை 2024 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்தலில் 6 நாடாளுமன்ற ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் 423 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறைக்கப்பட்டுள்ள அரச வாகனங்கள் : காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு!

அரசாங்கத்தினால் பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்படும் வாகனங்கள் ஏதேனும் ஒரு இடத்தில் மோசடியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ மறைத்து வைக்கப்பட்டு பாழடைந்த நிலையில் விடப்பட்டால் அது தொடர்பில் தெரிவிக்க 1997 என்ற விசேட தொலைபேசி இலக்கத்தை இலங்கை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, 24 மணி நேர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை தலைமையகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த தகவலை வழங்குபவர்களின் அடையாளத்தை முழுமையாக பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், அடையாளத்தை வெளியிட வேண்டிய அவசியமில்லை எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

எவரேனும் தவறான தகவல்களை வழங்கினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

வீடொன்றுக்கு அருகிலிருந்து மற்றுமொரு அரச வாகனமும் கைப்பற்றப்பட்டது.
வீடொன்றுக்கு அருகிலிருந்து மற்றுமொரு அரச வாகனமும் கைப்பற்றப்பட்டது.

இந்த முன்முயற்சி, பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதையும் அரச சொத்துக்களை சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய சுட்டிக்காட்டினார்.

இதேவேளை மறைத்து விடப்பட்ட நிலையில் இரண்டு அரச வாகனங்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

யாழில் 6 ஆசனங்களுக்காக 396 வேட்பாளர்கள் களத்தில்!

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 23 அரசியல்கட்சிகளும் 23 சுயேட்சை குழுக்களும் தங்களுடைய வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் அவற்றை பரீசிலித்ததன் அடிப்படையில் 2 சுயேட்சைக் குழுக்களுடைய வேட்பு மனுக்கள் சரியான காரணங்கள் குறிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் 2024 தொடர்பாக பெயர் குறித்த நியமனப்பத்திரங்கள் தொடர்பான முடிவுகளை அறிவித்த போதே யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் நேற்று இதனை தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 23 அரசியல் கட்சிகளும் 23 சுயேட்சை குழுக்களும் தங்களுடைய வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

அதற்கமைய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 6 ஆசனங்களுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களாக 396 பேர் போட்டியிடவுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இம்முறை 5 இலட்சத்து 93 ஆயிரத்து 187 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

மகிந்தவின் தோட்டத்தில் சட்டவிரோத செயற்பாடு!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவுக்கு சொந்தமான தோட்டமொன்றில் சட்டவிரோதமான முறையில் இரண்டு வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்படுவதாக பல்வேறு தரப்புகளில் இருந்தும் தகவல்கள் கசிந்துள்ளன.

மகிந்த ராஜபக்‌சவின் தங்காலை, வீரகெடிய வீதியில் உள்ள தோட்டத்திலேயே இரண்டு யானைகள் இவ்வாறு பராமரிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

குறித்த இரண்டு யானைகளும் இலங்கையின் வளர்ப்பு யானைகள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பதுடன், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வழக்கொன்றையும் பதிவு செய்திருந்தது.

எனினும் குறித்த யானைகள் இரண்டும் சன்னஸ் பத்திரம் (அரசாங்க அன்பளிப்பு) மூலம் மகிந்த ராஜபக்‌சவுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து, அந்த வழக்கு நீர்த்துப்போகச் செய்யப்பட்டது.

எனினும் குறித்த இரண்டு யானைகளும் சட்டவிரோதமாகவே மகிந்த ராஜபக்‌சவின் பராமரிப்பில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Posted in Uncategorized

தமிழரசு கட்சியில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படுகின்றது – சரவணபவன் ஆதங்கம்!

நாங்கள் இலங்கை தமிழரசு கட்சியில் இருந்துதான் வந்தோம். அங்கே ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு கொண்டு வருகின்றது என முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு தனி நபரின் ஆதிக்கத்தினால் இலங்கை தமிழர் கட்சியில் இருந்து பலர் வெளியேறியுள்ளார்கள். இறுதியில் தலைவரும் பதவியை இராஜினாமா செய்துள்ளார். நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்களும் கட்சியில் இருந்து விலகி உள்ளார்.

யார் யார் கட்சியில் இருந்து விலகினார்கள் என பார்ப்போமேயானால், 2010 ஆம் ஆண்டிலிருந்து அடுக்கிக் கொண்டே செல்லலாம் எத்தனைபேர் விலகியுள்ளார்கள் என்று. எல்லோரும் தொடர்ச்சியாக யாழ். மண்ணில் இருந்தவர்கள். ஆனால் யாழில் இல்லாத ஒருவருடைய ஆதிக்கம் மேலோங்கி, அந்தக் கட்சியானது ஜனநாயக கட்சி என்று சொல்ல முடியாத நிலையில் செயற்படுகின்றது.

உண்மையில் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு எமக்கு விருப்பமில்லை. ஆனாலும் தவிர்க்க முடியாத சூழ்நிலையால் வெளியே வந்து எமது ஜனநாயக ரீதியிலான பலத்தை காட்ட வேண்டிய தேவை எமக்குள்ளது. மக்களை ஒன்றுசேர்க்க வேண்டியிருக்கிறது.

எல்லோரையும் உள்வாங்கி, எல்லோருக்கும் சமபங்கு கொடுத்து, நாங்கள் செயற்பட வேண்டிய ஒரு சூழ்நிலையில் இருக்கின்றோம். நாங்கள் தற்போது ஒரு சுயேட்சையாக தேர்தலில் களமிறங்கினாலும் அது நாளடைவில் ஒரு கட்சியாக பரிணமிக்கும்.

வருங்காலத்தில் இளைஞர்களை அனைத்து விதத்திலும் பயிற்றப்படுத்தி, மாகாண சபையோ அல்லது பிரதே சபையோ அனைத்திலும் இந்த இளைஞர்கள் ஒரே வழியில் நின்று இந்த கட்சியை வழிநடத்த வேண்டும். இதன்போது நிச்சயமாக வெற்றி கிடைக்கும். ஜனநாயகம் தழைக்க வேண்டும், சர்வதிகாரம் தோற்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

மீனவர்களின் பிரச்சினைக்கான தீர்வுகளுக்கு எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய இடம் – சுரேந்திரன் தெரிவிப்பு!

வடக்கில் உள்ள ஒன்றரை இலட்சம் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் தீர்வினை பெற்றுக் கொடுபாபோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

நேற்றையதினம் அராலியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார், அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொடர்ந்தும் தமிழ் தேசியத்திலே பயணித்துக் கொண்டிருக்கின்ற மக்கள் தென் இலங்கை வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் தேசியத்தை உறுதி செய்ய முடியும் என்ற தவறான கருத்தை கடந்து மாதம் தமிழ் மக்களிடையே பரப்பி திரிந்தவர்களை மக்கள் நிராகரித்து, ஒட்டுமொத்தமாக தமிழ் தேசியத்தின் எழுச்சியை நீங்கள் முன்னெடுத்து செல்வதற்கு, சங்கு சின்னத்தில் களமிறங்கியுள்ள ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ் தேசத்தின் திரட்சியையும், இன விடுதலை வேட்கையையும், சமாந்தரமாக எங்களது அபிவிருத்தியையும் உறுதி செய்ய முடியும் என நாங்கள் இங்கே உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

அதுபோல வடக்கு மாகாணத்தில் பிரதான தொழிலாக கருதப்படுகின்ற, ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட கடல் தொழிலாளர்கள் அனுபவிக்கின்ற பாரிய பிரச்சினைகளை நாங்கள் நிச்சயமாக தீர்த்து வைப்போம்.

குறிப்பாக 1996 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் பதினாறு தொழில்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. அந்த தொழில்கள் இலஞ்சம், ஊழல், புறந்தள்ளல், தங்களுடைய சுய விருப்பு வெறுப்புகளுக்காக அந்தத் தொழில்களை அனுமதித்துக் கொண்டு, எமது மீனவர்களது வாழ்வாதாரத்தை நாசமாக்கி கொண்டிருக்கின்றதை தடை செய்வதற்கு வழி வகுப்போம்.

அதேபோல 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட, இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வருகை தருகின்ற இழுவைமடி படகுகளை தடை செய்கின்ற சட்டத்தையும் இந்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து நடைமுறைப்படுத்தவும், எங்களுடைய மீனவர்கள் எதிர்கொள்கின்ற வாழ்வாதாரப் பிரச்சினைகளையும், நீண்ட கால பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பதற்காக நாங்கள் தொடர்ந்தும் பாடுபடுவோம், இது நமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் முக்கியமான ஒரு விடயமாக இருக்கும் என்பதை நாங்கள் உறுதி கூறுகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.