Author: Yaalavan
இறுதித் தீர்மானத்தை வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி : உடன்பாட்டுக்கு சிறீதரன் மறுப்பு!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கவுள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சி இறுதித் தீர்மானத்தை எடுத்துள்ளது.
வவுனியாவில் இன்று (16.09.2024) காலை கட்சியின் அரசியல் பிரதிநிதிகள் மத்தியில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்துள்ளார்.
கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் தமது கட்சி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், அந்தக் கருத்தில் தமக்கு எள்ளளவும் உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் எவரும் முன்வராத பின்னணியில் தமிழ் மக்களுக்காக நின்ற தமிழ் பொதுவேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரணில் நாடாளுமன்றை கலைத்தால் ஏற்படப்போகும் ஆபத்து!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றை கலைத்தால் அது பெரும் ஆபத்தாக முடியும் என தேசிய மக்கள் சக்தி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி (NPP) ஊடக சந்திப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் புதிய ஜனாதிபதி நாட்டை ஆட்சி செய்ய அரசியலமைப்பில் ஏற்பாடுகள் உள்ளதாகவும் அது மக்களுக்கும் நாட்டுக்கும் பாதகமான விளைவுகளை உருவாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாதகமான விளைவுகளை உருவாக்கும்
எனினும், ஜனநாயக கட்டமைப்பிற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஜனாதிபதிக்கான அதிகார பரிமாற்றம் மக்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தாமல் ஜனநாயக ரீதியாக நடைபெற வேண்டும் என்று அவர் கூறினார்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஜனாதிபதி செப்டம்பர் 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைப்பார் என பிரதமர் சூசகமாக வெளியிட்ட விடயம் தொடர்பாக பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தை கலைக்க அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளதாகத் தெரிவித்த குமாரப்பெரும, இந்த தருணத்தில் அவ்வாறு செய்தால் அது மிகவும் நேர்மையற்ற செயலாகும் என்றார்.
“அரசியலமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதி எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும். புதிய ஜனாதிபதிக்கு இதுபோன்ற சூழ்நிலையில் பல விதிகள் உள்ளன. எனினும் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு ஜனநாயக ரீதியாக அதிகாரம் வழங்கப்பட வேண்டும். மக்கள் அதனால் பாதகமாக பாதிக்கப்படக் கூடாது, அவ்வாறு நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தால், அது அவர் நாட்டுக்கும் மக்களுக்கும் செய்யும் மிகவும் நேர்மையற்ற செயலாகும்” என அவர் தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுடன் சஜித்துக்கு டீல்: தலதா அத்துகோரல பகிரங்கம்!
சஜித் பிரேமதாஸ தனியார் தொலைக்காட்சி அலைவரிசையுடன் என்ன டீல் செய்துள்ளார் என்பதை உடனடியாக மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல சவால் விடுத்துள்ளார்.
சஜித் டீல் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என எதிர்கட்சித் தலைவர் பிரேமதாச கூறினாலும், இரத்தினபுரியில் இடம்பெற்ற ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ”அராஜகங்களுக்கு முடிவுகட்டிய ஒரேயொரு தலைவர் ரணிலே! எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே தெரிவு செய்யப்படுவார் என்பதை இந்த மேடையில் பகிரங்கப்படுத்துகின்றேன்.
2022 இல் நாட்டை ஏற்ற போது ஐக்கிய மக்கள் சக்தி நகைத்தனர். ஐ.எம்.எப் பேச்சுவார்த்தைகள் தோற்கும் என்றனர். கடன் கிடைக்காது என்றனர். 6 மாதம் செல்ல முன் மீண்டும் வீழ்ச்சியடையும் என்றனர்.
ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றனர். தேர்தலை நடத்த மாட்டார் என்றனர். எதிரணி சொன்ன அனைத்துமே இன்று பொய்யாகியுள்ளது.
இயலும் என அனைத்தையும் செய்து காட்டியுள்ளார். எஞ்சிய 50 வீத செயற்பாடுகளையும் நிறைவு செய்வதற்காகத் தான் அவர் ஆட்சியைக் கேட்கிறார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இணையும் அனைவருக்கும் பதவி கொடுக்கின்றனர். அவர்களால் எதுவும் செய்ய முடியாது.” என தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக புதைகுழி அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது வெகுஜன புதைகுழியான கொழும்பு துறைமுக புதைகுழியில் முதற்கட்ட அகழ்வு பணிகள் எட்டு நாட்களுக்கு பின்னர் இடைநிறுத்தப்பட்ட நிலையில் குறைந்தது இரண்டு பேரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
செப்டெம்பர் 5ஆம் திகதி வியாழன் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு வெகுஜன புதைகுழியின் அகழ்வுப் பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது குறைந்தது மேலும் நான்கு மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தலைநகரின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள கொழும்பு துறைமுக பழைய செயலக வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட பாரிய புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு மனித எலும்புக்கூடுகளில் ஒன்றின் மண்டை ஓட்டை கண்டுபிடிக்காத நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் 25ஆம் திகதி அழ்வினை மீள ஆரம்பிக்கவுள்ளதாக அகழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
அகழ்வு நாட்களில் மீட்கப்பட்ட சிறிய எலும்புத் துண்டுகள் தற்போது கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் குறிபபிட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பாரிய புதைகுழி தொடர்பான விசாரணைகள் விசேட சட்ட வைத்திய அதிகாரி சுனில் ஹேவகே மற்றும் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோரின் தலைமையில் இடம்பெற்று வருகின்றன.
ஜூலை 13, 2024 அன்று, கொழும்பு துறைமுகத்திற்குச் செல்லும் புதிதாக நிர்மாணிக்கப்படும் அதிவேக வீதியின் நிர்மாணிப் பணிகளுக்காக பூமியைத் தோண்டும் போது கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள பழைய செயலக வளாகத்தில் முதன்முறையாக மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, நீதவான் நீதிபதி பண்டார இலங்கசிங்க முன்னிலையில் 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி வியாழக்கிழமை குறித்த இடத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய் பதிக்க நிலத்தை தோண்டும் வேளையில் ஜூன் 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைகளின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டது.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஜூலை 15, 2024 அன்று நிறைவுக்கு கொண்டுவரப்பட்டபோது 52 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருந்தன.
நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட நிபுணர் அறிக்கையின்படி, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் தொண்ணூறுகளில் முறைசாரா முறையில் அங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இலங்கை பொருளாதாரத்தில் சடுதியாக ஏற்படும் மாற்றங்கள்!
இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் ஏற்றுமதி வருமானம் மற்றும் இறக்குமதி செலவு அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஏற்றுமதி வருமானம் 5.6 சதவீதமும், இறக்குமதி செலவு 9.1 சதவீதமும் அதிகரித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் எரிபொருளுக்காக அதிகளவில் இறக்குமதி செலவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி
அதன்படி, கடந்த 7 மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்காக 2 ஆயிரத்து 548 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் முன்னெதிர்வு கூறப்பட்டதை விடவும் மிகவேகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, இவ்வருடம் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான முதலாம் காலாண்டில் 5.3 சதவீதமாக பதிவான மொத்த உள்நாட்டு உற்பத்தி, இரண்டாம் காலாண்டில் 4.7 சதவீதமாக பதிவாகி பொருளாதாரத்தில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்து பிரித்தானிய தமிழ் தேசிய அமைப்புக்களினால் ஊர்திப் பேரணி!
புதிய ஜனாதிபதியுடன் நெருக்கமாக தயாராகும் அமெரிக்கா!
இலங்கை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியுடன் நெருக்கமாக செயற்படுவதற்கு அமெரிக்கா எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை அவர் தமது எக்ஸ் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளார்.
நியாயமான தேர்தல்
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதிப்படுத்துவது இலங்கையில் ஜனநாயகத்திற்கு எடுக்கப்படக்கூடிய மிக முக்கியமான நடவடிக்கையாகும்.
சர்வதேச ஜனநாயக தினமான இன்றைய தினத்தில், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள், நீதி போன்ற வலுவான மற்றும் நிலையான ஜனநாயகத்தின் கொள்கைகளை நாங்கள் கொண்டாடுகிறோம்.
தேர்தல்கள் மூலம் தங்கள் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு கருத்து இருப்பதை உறுதிசெய்கிறோம்.
இலங்கை மக்களால் தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.
ஏற்கனவே இலங்கையில் குறித்த நாடுகளின் நலன்சார்ந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற நிலையிலேயே இந்த அவதானிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப்பொது வேட்பாளருடன் முக்கிய கலந்துரையாடலில் மாவை!
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப்பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நேரில் சென்று சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்ப் பொது வேட்பாளரின் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தேர்தல் கள நிலவரம்
இதன்போது ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
மேற்படி சந்திப்பில் தற்போதைய தேர்தல் கள நிலவரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது என்று தெரியவந்துள்ளது.
ட்ரம்பை குறிவைத்து மீண்டும் துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்!
அமெரிக்காவின் (US) முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் மீது நேற்று மீண்டும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்செய்தியினை அமெரிக்காவின் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, புளோரிடாவில் வெஸ்ட் பாம் கடற்கரை அருகே உள்ள ட்ரம்புக்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்துக்கு வெளியே இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது, ட்ரம்ப் அந்த மைதானத்தில் இருந்துள்ள நிலையில் அங்கிருந்த இரண்டு நபர்களுக்கு இடையே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, ட்ரம்ப், அவ்விடத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறான ஒரு தாக்குதல் முயற்சி இடம்பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் ட்ரம்ப் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவருடைய வலதுகாதில் காயம் ஏற்பட்டது.