சஜித்தின் பிரசார கூட்டத்தில் பெரும் குழப்பம்!

கல்முனையில் இடம்பெற்ற சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) பிரசார கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவுப் ஹக்கீம் ஆகியோரின் அணியினர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது, நேற்று (14.09.2024) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தின் போது, வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டவர்கள் தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

ரணில் – அநுர கும்பலின் சூழ்ச்சி: சஜித்தின் குற்றச்சாட்டு!

ஐக்கிய மக்கள் சக்தியைத் தோற்கடிக்க ரணில் – அநுர கும்பல் இரவு பகல் பாராது சூழ்ச்சி செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் முன்னெடுக்கப்பட்ட பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“இந்த நாடு மீண்டும் அபிவிருத்தியை நோக்கிய யுகத்துக்குச் செல்வதற்கும் தொழிற்சாலைகள் உருவாகி, தொழில் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மக்களின் வறுமை நீங்கி மூலைமுடுக்கு, கிராமங்கள், நகரங்கள், விருத்தியடைந்து நாடு அபிவிருத்தி அடைகின்ற வேலைத்திட்டத்துக்கும் ரணில் – அநுர கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள்.

ரணில் – அநுர கும்பல் இரவு பகல் பாராது ஐக்கிய மக்கள் சக்தியைத் தோல்வியடையச் செய்ய வேண்டும் என்று சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இந்தச் சூழ்ச்சிக்குள் நாட்டு மக்கள் சிக்கிக்கொள்ள மாட்டார்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.

கட்டுக்கட்டாக பைல்களைத் தூக்கிச் சென்ற ஒரு குழுவினர் திருடர்களை பிடிப்போம் என்று கூறினாலும், ஐக்கிய சட்டத்தரணிகள் சக்தி உயர்நீதிமன்றத்தை நாடி நாட்டை வங்குரோத்தடையச் செய்த ராஜபக்சக்களுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்து தீர்வைப் பெற்று, அவர்கள் நீதிமன்றத்தின் முன் குற்றவாளிகள் என வெளிக்கொணர்ந்தது.

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு பின்னர் இந்தத் தீர்வின் ஊடாக நட்ட ஈட்டைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கையில் 48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்க தீர்மானம்?

ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்க தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைகின்றது.

இந்தநிலையில், 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் எவ்வித தேர்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கபடாத நிலையில் சமூக ஊடகங்களில் சேறு பூசுவதை நிறுத்துவதற்காக குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் சமூக ஊடக வலையமைப்பை சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் திட்டத்தை கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் பிரச்சாரம் செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ள போதிலும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக ஊடக குழுக்களுடன் கலந்தாலோசித்த பின்னர் அமைதியான காலத்தில் தேர்தல் பிரசாரம் மற்றும் அவதூறு பரப்புரைகளை நிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஜனாதிபதியானால் வட – கிழக்கிற்கு பொலிஸ், காணி அதிகாரம் இல்லை : பொன்சேகா தெரிவிப்பு!

நான் ஜனாதிபதியானால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குப் பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வழங்கமாட்டேன் என ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சுயாதீன வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இலங்கை, இந்திய ஒப்பந்தத்துக்கு தெற்கு மக்களின் ஆசீர்வாதம் இருக்கவில்லை. அது பலவந்தமாகத் திணிக்கப்பட்டதொன்றாகும்.

அதனால்தான் வடக்கு – கிழக்கு இணைப்பு, பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் என்பன நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஐக்கியமான நாடு குறித்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட விதத்தை நானும் அனுமதிக்கவில்லை. ஒப்பந்தம் வந்தபோது நான் இராணுவத்தில் இருந்தேன். ஒப்பந்தம் பலவந்தமாகத் திணிக்கப்பட்டதை ஏற்க முடியாது.

13 வழங்கப்படும் எனச் சஜித் கூறுகின்றார். அதேபோல் ஐக்கியமான நாடு பற்றி சஜித் மற்றும் அநுர ஆகியோர் கதைக்கின்றனர்.

ஆனால், ஒற்றையாட்சி எனும் நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன். நான் ஜனாதிபதியாகும் பட்சத்தில் மாகாணங்களுக்குப் பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கமாட்டேன்.

ஆனால், 13 ஐ விடவும் அதிகாரங்களைப் பகிர்ந்து மக்கள் சமத்துவத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கலாம். அவ்வாறானதொரு நிலை ஏற்படும் வரை மேற்படி அதிகாரங்களை வழங்க முடியாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

முக்கிய அமைச்சு பதவி வகிக்கும் அரசியல்வாதியை கைது செய்ய நடவடிக்கை!

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்படும் அமைச்சர் ஒருவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சருக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக இருந்த போதும், அவரின் கைது நடவடிக்கை, கடும் அழுத்தம் காரணமாக தடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்ச்சைக்குரிய அமைச்சர் ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை சந்தித்து, கைது செய்வதை தடுக்குமாறு கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

போதிய ஆதாரங்கள்
விசாரணையின் போது கைது செய்வதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு சட்டத்தை ஏமாற்றிய போதிலும் கைது செய்யப்பட்டு 7 மாதங்களின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் சத்தியபிரமாணம்

திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக ஜனாப் ஃபயாஸ் ரசாக்கும் பிரதம நீதிவான் நீதிமன்ற நீதவானாக ஜீவராணி கருப்பையாவும் நேற்று சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

குறித்த சத்தியபிரமாணங்கள், நேற்று (13.09.2024) மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் செய்து கொள்ளப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா 12.09.2024 அன்று நீதிச்சேவை ஆணைக்குழுவினால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்திற்கு புதிய நியமனம் வழங்கப்பட்டது.

பணியிடை நிறுத்தத்தின் பின்னணி

திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, புல்மோட்டை 3ம் வட்டாரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்று நடமாடியதால் 119 எனும் அவசர இலக்கத்திற்கு மக்கள் தகவல் வழங்கியுள்ளனர். குறித்த சம்பவம் 04.09.2024 அன்று இரவு இடம்பெற்றது .

இதனை தொடர்ந்து புல்மோட்டை பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று கார் நிறுத்தப்பட்ட இடத்திற்கு சென்ற வேளையில் அங்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றதில் வழக்குகள் உள்ள ஒரு பெண்ணின் வீட்டில் திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இருந்ததாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

பதற்றமடைந்த நிலையில் மக்கள் அங்கு ஒன்று கூடியதால் பொலிஸார் பாதுகாப்புடன் குறித்த நீதிபதியை பின் பக்கத்தினால் வெளியேற்றி அனுப்பியதாக புல்மோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார் .

குறித்த சிவில் சமூகத்தை சேர்ந்த வழக்குகளுடன் சம்பந்தப்பட்ட பெண் ஒருவரின் வீட்டுக்கு நீதிபதி இரவு நேரத்தில் செல்ல முடியுமா என மக்கள் சந்தேகிக்கின்றனர்.

மேலும் குறித்த நீதிபதியின் அரச வாகனமும், குறித்த பெண்ணின் வேலையாள் ஒருவரினால் செலுத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த வாகனத்தை பொலிஸார் மீட்டு குறித்த நீதிபதியிடம் பொலிஸார் ஒப்படைத்து பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

விடுதலைப் போராட்ட மௌனிப்பிற்கு பின்னர் தமிழ் மக்கள் எடுத்த சிறந்த தீர்மானம்!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டுமென தமிழ் மக்கள் எடுத்த தீர்மானமானது 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மௌனிப்பிற்கு பின்பு எடுக்கப்பட்ட சிறந்த தீர்மானமென யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை யாழ்ப்பாணம் அச்சுவேலியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “2009 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை எமது இனம் ஒரு தலைமையின் கீழ் எழுச்சி பெற்றிருந்தது.

தமிழீழ விடுதலை புலி
உலகத்தின் எந்த தமிழினமாக இருப்பினும் ஒரு தலைவரின் கீழ் சுயமரியாதையுடன் இருந்தவர்கள், 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மௌனிப்பிற்கு பின்பு எங்களின் அரசியல் பலம் சிதைக்கப்பட்டது.

இந்தநிலையில், 2024 ஆம் ஆண்டு ஒவ்வொரு கூறுகளாக பிரிக்கப்பட்டு கட்சியினுள்ளேயே பல மோதல் என்கின்ற அவலநிலையில் நாம் இருக்கும் சந்தர்ப்பத்தில் தமிழினத்தை ஒரு நிலையில் கொண்டு வருவதற்கு வாய்ப்பாக தமிழ் பொது கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு பொலிஸாரால் தடை!

யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கக் கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு யாழ்ப்பாணம் காவல்துறையினரால் யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ். நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் இடம்பெறும் நிகழ்வைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளன.

இந்தநிலையில், யாழ்ப்பாணம் காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தத் தடை விதிக்கக் கோரி யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் காவல்துறையினர் நேற்று (13.09.2024) வெள்ளிக்கிழமை மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறும் என்றும், அன்றைய தினம் மனுவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் மன்றில் முன்னிலையாக வேண்டும் என்றும் மன்று கட்டளையிட்டுள்ளது.

Posted in Uncategorized

தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட மக்கள் மீது தாக்குதல்!

மொனராகலையில் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது குப்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேர்தல் பிரசார நடவடிக்கையை முடித்துக் கொண்டு பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த போது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொனராகலையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்களே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தல் போட்டியாளர்களிடம் கிழக்கு மக்கள் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை
ஜனாதிபதி தேர்தல் போட்டியாளர்களிடம் கிழக்கு மக்கள் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை
முறைப்பாடுகள்
இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரை 3,828 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,295 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 2,425 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

Posted in Uncategorized

ஒற்றையாட்சி அரசியல் அமைப்பின் சட்டகத்திற்குள் ஜனாதிபதி தேர்தல்

தெற்கிலிருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிங்கள , பௌத்த தேசியத்தின் மேலாண்மையை வலியுறுத்தியே பிரசார மேடைகளை அலங்கரிக்கிறார்கள் என வட கிழக்கு மாகாணங்களுக்கான நீதிக்கும் சமாதானத்துக்குமான குருக்கள் துறவியர் ஒன்றியத்தின் சார்பாக அருட்பணி கிறிஸ்தோபர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து (13) ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலுக்கு நாடு தயாராகிக்கொண்டிருக்கிறது.இந்த ஜனாதிபதி தேர்தல் பற்றிய அல்லது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பற்றிய அரசியல் அறிவு, அவர்களது தனி-கூட்டு அரசியல் இறந்த கால வரலாற்றுடன் தான் எமக்கு முன்னுள்ள தெரிவாக முன்வைக்கப்பட்டுள்ளது.

இது எவ்வளவு நம்பிக்கை தருவதாக இருக்கிறது என்பதை அடிக்கோடிட்டு காட்ட வேண்டிய தேவையில்லை.இந்த ஜனாதிபதி தேர்தலும் ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்குள் உள்ள சட்டகத்திற்குள் இருந்தே நடாத்தப்படுகின்றது என்ற உண்மையை கூறாமல் இருக்க முடியாது.

ஜனநாயக முறைமை
தற்போது உள்ள ஜனநாயக முறைமை எண்களைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது என்ற உண்மை பொது அறிவுக்கு உட்பட்டது. வாக்குகளின் எண்ணிக்கையை மையப்படுத்திய ஜனாதிபதி ஜனநாயக தெரிவில் ஈழத்தமிழ் மக்களுடையதும் ஏனைய சிறுபான்மை இனக் குழுக்களினதும் வாக்குகள் செல்வாக்கு செலுத்துவது வரையறுக்கப்பட்டுள்ளது.

தெற்கிலிருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிங்கள , பௌத்த தேசியத்தின் மேலாண்மையை வலியுறுத்தியே பிரசார மேடைகளை அலங்கரிக்கிறார்கள்.

ஈழத்தமிழ் மக்களுடைய கூட்டு அரசியல் வேணாவாவையும் தமிழின அழிப்பையும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற அரசியல் கோட்பாட்டுச் சூழலில் தெற்கில் இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒன்றுபட்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் தமிழின அழிப்புக்கு நீதி கோருவதை மறுப்பதோடு இல்லாமல் ஸ்ரீலங்காவின் படைக் கட்டுமானம் சிங்கள தேச விடுதலைக் கட்டுமானத்தில் ஆற்றிய பங்களிப்பை கதா நாயக சொல்லாடலுக்கு கட்டமைக்கிறார்கள்.

தமிழர் தாயகம் தொடர்ந்து ஈழ தமிழ்த்தேசிய நீக்கத்துக்குள் வலிந்து தள்ளப்பட்டு கொண்டே இருக்கிறது.இது வெவ்வேறு வடிவங்களை, பரிமாணங்களை கொண்டுள்ளது.

சிங்கள – பௌத்த மயமாக்கல்
உதாரணமாக ஈழத்தமிழர் ஒருங்கிணைந்த தாயகத்தை துண்டாடல், தமிழர் தாயகத்தில் இராணுவ மயமாக்கச் செறிவை அதிகரித்தல்,ஈழத்தமிழர் தாயகம் தொடர்ந்து அடக்குமுறைக்கு உட்பட்ட தேசமாகவே உள்ளது.ஈழத்தமிழர் நிலங்கள் வலிந்து பறிக்கப்படுகின்றன.

சிங்கள – பௌத்த மயமாக்கல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒட்டு மொத்தத்தில் ஈழத் தமிழர் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இவ்வாறான அரசியல் சூழமைவில் அரசியல் அறம் தெரிவாக தமிழ்ப் பொது வேட்பாளர் ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக நமக்கு முன் நிறுத்தப்பட்டுள்ளார்.

இம்முக்கியமான காலகட்டத்தில் தமிழ் மக்களின் தெரிவு, ஈழத்தமிழரின் அரசியல் வேணவாவை வலுப்படுத்தும் என்பது எமது ஆழமான நம்பிக்கை என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized