மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட மன்னார் சதோச மனித புதைகுழி அகழ்வு பணி!

மன்னார் நகர மையப்பகுதியில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சதோச மனித புதைகுழி அகழ்வு பணியானது மீண்டும் இவ்வாரம் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் முதற்கட்டமாக தடய பொருட்களை பிரித்தெடுக்கும் நடவடிக்கை மற்றும் புதைகுழியை சூழ உள்ள பகுதியை ஸ்கேன் மற்றும் அகழ்வு செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.

குறிப்பாக மன்னார் சதோச வளாகத்திற்கு அருகில் இராணுவ முகாம் அமைந்திருந்த பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடம் அமைந்துள்ள பகுதியிலும் அகழ்வு பணிகள் நேற்றையதினம்(9) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த அகழ்வு பணி தொடர்பான செயற்பாடுகளையோ, ஸ்கான் செயற்பாடுகளையோ புகைப்படம் எடுக்க, காணொளியாக பதிவு செய்யவோ மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

முன்னதாகவே மனித புதைகுழி அகழ்வு பணியை செய்தி சேகரிக்க பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக குறித்த அகழ்வு பணி தொடர்பான உண்மையான விடயங்களை அறிக்கையிடவும் அகழ்வு செயற்பாடுகளை ஆவணப் படுத்தவும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், புதிய நீதிபதியினால் தற்போது அகழ்வு பணியையோ அல்லது புதைகுழி தொடர்பிலான ஏனைய செயற்பாடுகளையோ கணொளியோ புகைப்படமே எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அகழ்வு தொடர்பிலும், புதைகுழி வழக்கு தொடர்பிலான செயற்பாடுகள் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக முன்னிலையாகும், சட்டத்தரணிகள் குரல் பதிவுகளை வழங்க மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு இணக்கம்

ஜெனீவாவின் ஐக்கிய நாடுகள மனித உரிமைகள் பேரவையில் நேற்று (09) ஒருமித்த கருத்துடன் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை உட்பட பல நாடுகள் தமது கருத்துக்களை தெரிவித்ததை அடுத்து வாக்கெடுப்பின்றி இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்போது, கருத்துரைத்த சீன தரப்பு, இலங்கையின் குறித்த தீர்மானங்களை தாம் எதிர்ப்பதால், இது ஒருமித்த கருத்தாக இருக்க முடியாது என்று கூறியுள்ளது. எவ்வாறாயினும், தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு கோரப்படவில்லை, அத்துடன், ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான இந்த தீர்மானமானது, உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆணை மற்றும் மனித உரிமைகள் பேரவையின் 51 – 1 தீர்மானத்தில் கோரியுள்ள அனைத்து பணிகளையும் ஒரு வருடத்திற்கு நீடிக்கிறது.

இதன்படி, சபையின் ஐம்பத்தெட்டாவது அமர்வில் வாய்மொழிப் புதுப்பிப்பு மற்றும் அதன் அறுபதாவது அமர்வில் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் முன்னேற்றம் பற்றிய விரிவான அறிக்கையை, ஊடாடும் உரையாடலில் விவாதிக்குமாறு, மனித உரிமைகள் பேரவை கோரியுள்ளது.

எனினும், இந்த தீர்மானத்தை நிராகரிப்பதாகவும் ஆனால், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதாகவும் இலங்கை குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை அமைப்பது என்பது, அதன் ஆணைக்கு புறம்பான செயல் என்றும் இலங்கை தெரிவித்துள்ளது.

எனவே, 51 – 1 தீர்மானத்தின் ஆணையை நீடிக்கக் கோரி சபையில் முன்வைக்கப்பட்ட வரைவுத் தீர்மானத்தை நிராகரிப்பதாக இலங்கை அறிவித்துள்ளது.

Posted in Uncategorized

கடன் பெற்றுக்கொண்டாலும் விரயமாக்கமாட்டோம் : புதிய அரசாங்கம் அறிவிப்பு!

கடன் பெற்றுக்கொண்டாலும் அவற்றை விரயமாக்கப்போவதில்லை என புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

திறைசேரி உண்டியல்கள் மற்றும் பிணைமுறிகள் மூலம் கடன் பெற்றுக்கொண்டாலும் அவை உரிய முறையில் செலவிடப்படும் என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பெற்றுக்கொண்ட கடன்களை செலுத்தவும், அரசாங்கத்தின் செலவுகளை ஈடு செய்யவும் இவ்வாறு கடன் பெற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டில் நிதியின்றி பணம் அச்சிடப்படவோ அல்லது திறைசேரி உண்டியல்கள் மூலம் புதிய கடன்கள் பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் என்ற ரீதியில் தேவைக்கு ஏற்ற வகையில் திறைசேரி பத்திரங்களும், பிணைமுறிகளும் வெளியிடுவதாகவும், இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் கடன் வெளிப்படைத்தன்மையுடன் செலவிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மாறாக கடந்த அரசாங்கங்களைப் போன்று விரயமாக்கப்படமாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

யாழில் வேட்புமனுவை தாக்கல் செய்தது ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி!

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தது.

நேற்று காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும், முதன்மை வேட்பாளருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் வேட்புமனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்போது ஏனைய கட்சிகளின் முக்கியஸ்தர்களும் உடனிருந்தனர்.

தேசத்தின் திரட்சியாக சங்கு சின்னம் வெல்லும் – சுரேன் தெரிவிப்பு

தமிழ் தேசியத்தின்பால் பயணிக்கின்ற மக்களின் திரட்சியாக சங்குச் சின்னம் பாராளுமன்றத் தேர்தலில் அதிகப்படியான ஆசனத்தை பெற்று வெற்றி பெறும் என ரெலோ அமைப்பின் ஊடகப்பேச்சாளரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளரும்ன சுரேன் குருசுவாமி தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் சங்குச் சின்னத்தில் தமிழ் தேசியத்தின் திரட்சிக்காக பொது வேட்பாளர் களம் இறக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் அவருக்கு அமோக ஆதரவை வழங்கினார்கள்.

அந்த ஆதரவை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சங்க சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் சங்கு சின்னத்தில் களமிறங்கியுள்ளோம்.

ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தமிழ் மக்களுக்கான மாற்றம் கிடையாது, அதனை அரசாங்கம் ஜெனிவா தொடர்பில் வெளியிட்ட கருத்து தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது.

இலங்கை அரசாங்கம் ஜெனிவா தீர்மானத்தை நிராகரிக்கிறோம், உள்நாட்டு பொறிமுறை மூலமே பிரச்சனைகளுக்கான தீர்வு என தெரிவித்திருக்கின்ற நிலையில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு சிதறடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியத்தின் பால் பயணிக்கின்ற கட்சிகள் ஒன்றிணைந்து சங்குச் சின்னத்தில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி எமது பலத்தை காட்டியுள்ளோம்.

அதே சங்கு சின்னத்தில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக ஓரணியில் பயணிக்கின்ற தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து சங்கு சின்னத்தில் களமிறங்கி உள்ளது.

சங்குச் சின்னம் தமிழ் தேசிய உணர்வுடன் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பயணிக்கும் சின்னமாக காணப்படுகின்ற நிலையில் சங்குச் சின்னத்தை அமோக வெற்றி பெறச் செய்வதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பயணத்தை தொடர முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

தமிழர் விவகாரத்தில் கடந்தகால ஆட்சியாளரின் நிகழ்ச்சி நிரலை  தொடர்கிறது அநுர அரசு – சபா குகதாஸ் சாடல்!

தற்போது நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது போன்ற தோற்றப்பாடுகளை காட்டினாலும் தமிழர் விவகாரத்தில் கடந்த கால ஆட்சியாளர்கள் முன்னெடுத்த நிகழ்ச்சி நிரல்களை தொடர்வதாகவே அநுர அரசின் அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன எனவே தமிழர்களை பொறுத்த வரை ஆட்சி மாற்றம் அல்ல ஆள் மாற்றமே தென்னிலங்கையில் ஏற்பட்டதாக உணர முடிகின்றது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஐ.நா தீர்மானத்தை நிராகரிக்கும் அநுர அரசு பாராளுமன்ற ஆட்சியை கைப்பற்றினால்  ஊழல்வாதிகளை தண்டிக்க வாய்ப்பில்லை  காரணம் தமிழின அழிப்புக்கும் ஊழலுக்கும் ஒரே தரப்புத் தான் கடந்த காலத்தில் காரணமாக இருந்தனர்.
உள்ளக பொறிமுறை பாதிக்கப்பட்ட மக்களால் நிராகரிக்கப்பட்ட விடயம்  அத்துடன் உள்ளக பொறிமுறை மூலம் நீதி வழங்குதல் அல்லது விசாரணை என்பது ஏமாற்று நாடகம்.
யுத்தக் குற்ற ஆதாரங்கள் சேகரித்தல் விடையத்தை நிராகரிப்பதாக விஐித ஹேரத்  கூறுவது ஏன்? ராஜபக்ச அரசு போல அநுர அரசும் அச்சம் கொள்வதற்கான காரணம் என்ன? இறுதி யுத்தத்திற்கு சகல வழிகளிலும் முழுமையான ஆதரவை ராஜபக்ச அரசுக்குள் மறைந்திருந்து வழங்கியதன் மூலம் யுத்தக் குற்ற ஆதாரங்கள் எதிர்காலத்தில் விசாரணைக்கு வருமாயின் தங்களுக்கும் பாதகமாக அமைந்துவிடும் என்ற நோக்கில் முன்னைய ஆட்சியாளரின் நிகழ்ச்சி நிரலை தொடர்கின்றனர் எனவே ஆட்சி மாற்றம் எதிர்காலத்தில் தமிழர்களுக்கு எதுவித மாற்றங்களையும் செய்ய மாட்டாது என்பதை ஐ.நா தீர்மானத்தை நிராகரிக்கும் செயல் கட்டியம் கூறுகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.
Posted in Uncategorized

அதிக சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்திய மாவட்டங்கள்!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் இம்முறை அதிக சுயேட்சைக் குழுக்கள் களம் இறக்கப்பட்டு கட்டுப் பணம் செலுத்தியுள்ளன.

இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் 37 சுயேட்சைக் குழுக்களும், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தலா 22 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளன.

இதேபோன்று வன்னி மாவட்டத்தில் 21 சுயேட்சைக் குழுக்களும், திருகோணமலை மாவட்டத்தில் 17 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளன.

அதிக சுயேட்சைக் குழுக்கள்
இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களிலும் அதிக சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்திய மாவட்டங்களாகவும் வடக்கு, கிழக்கு காணப்படுகின்றது.

இதேநேரம் சுயேட்சையாகப் போட்டியிடுவோர் கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்னமும் காணப்படுவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.

இலங்கையில் அதிக மக்கள் தொகை கொண்ட கொழும்பு மாவட்டத்தில் 17 சுயேட்சைக் குழுக்களும், கம்பஹா மாவட்டத்தில் 12 சுயேட்சைக் குழுக்களுமே கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

விக்னேஸ்வரன் கூட்டணியில் குழப்பம் – இழுபறியில் வெளியான வேட்பாளர் பட்டியல்

நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரம் இறுதியாகியுள்ளது.

சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்குள் அண்மையில் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன.

கட்சியில் வி. மணிவண்ணனுக்கு முன்னுரிமையளிப்பதாகத் தெரிவித்து அந்தக் கட்சியின் மூத்தவர்கள் பலர் அதிருப்தியடைந்து, கட்சி செயற்பாட்டிலிருந்து ஒதுங்கி விட்டனர்.

இதைத் தொடர்ந்து வி.மணிவண்ணன் தரப்பே வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது.

அந்தவகையில், கட்சியின் வேட்பாளர் பட்டியலில் வி.மணிவண்ணன், வ.பார்த்தீபன், செல்டன் (யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் பயிற்சியாளர்), சிற்பரன், ஜெனிட்டன் (கோப்பாய் – விளையாட்டு உத்தியோகத்தர்)

உமாகரன் இராசையா, மிதிலைச்செல்வி (முன்னாள் தமிழரசுக் கட்சி மகளிர் அணி உறுப்பினர்), கோகிலவாணி (கிளிநொச்சி), சாவகச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்றின் பிராந்திய முகாமையாளர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சஜித் பிரேமதாசவின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸார் தகவல்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக வெளியான தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த தேர்தலின் போது முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததாக தகவல் கிடைத்தது. எனினும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளில் அது தொடர்பான தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூடுதல் பாதுகாப்பு
இவ்வாறான நிலையில் சஜித் பிரேமதாசவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்பதால், கூடுதல் படையணிகள் திரும்பப் பெறப்பட்டதாகவும், ஆனால் அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு வழங்கப்பட்ட அதிகாரிகளை திரும்ப அழைக்கும் போது, ​​சபாநாயகர், பிரதி சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்படவில்லை. தேர்தல் நேரத்தில் வழங்கப்பட்ட கூடுதல் அதிகாரிகளின் எண்ணிக்கையே குறைக்கப்பட்டதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்
முன்னாள் ஜனாதிபதியின் 317 அதிகாரிகளின் நீக்கம் தொடர்பில் தவறான செய்திகளே வெளியானது. அவரது பாதுகாப்பு நீக்கப்படவில்லை. பொலிஸ் விசேட அதிரடிப்படையை சேர்ந்த 50 பேர் உட்பட அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பாதுகாப்பு நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்து அதற்கேற்ப செயற்படுவதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஆளும் கட்சியை சேர்ந்த சிலர் அதிருப்தியில்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த சிலர் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சியில் சந்தர்ப்பம் கிடைக்காதவர்களே இவ்வாறு அதிருப்தி அடைந்துள்ளனர்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்கு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இவ்வாறான பின்னணியில் போட்டியிட சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பலருக்கு சந்தர்ப்பம்
கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் அதற்கு முன்னரும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக அயராது உழைத்தவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

எனினும் பலர் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருவதனால் பலருக்கு சந்தர்ப்பம் மறுக்கப்பட உள்ளது.

இதனால் கட்சிக்கு ஆதரவான பலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 11ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு நண்பகல் 12.00 மணியுடன் பூர்த்தியாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized