மொட்டு கட்சி பொய்யாக கூட்டணி அமைக்காது : சாகர காரியவசம்

மொட்டு கட்சி பொய்யாக கூட்டணிகளை அமைக்காது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பு மனுக்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

வேட்பு மனு தயாரிப்பு தொடர்பில் இரண்டு குழுக்கள் நிறுவப்பட்டுள்ளது.கீழ் மட்ட குழுவினால் தீர்மானங்களை எடுக்க முடியாத நிலையில் உயர் மட்ட குழுவின் உதவி பெற்றுக்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுஜன முன்னணியின் தேசியவாத கொள்கை
தேசியவாத முகாம்களை ஒன்றிணைத்து இந்த தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகவும், இணக்கப்பாடில்லா தரப்புக்களுடன் இணைந்து பொய்யாக கூட்டணிகள் அமைக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன முன்னணியின் தேசியவாத கொள்கைகளுக்கு இணங்கக்கூடிய தரப்புக்கள் மட்டும் கூட்டணியில் இணைந்து கொள்ள முடியும் எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

புதிய ஜனாதிபதியின் செயலாளருக்கு ரணில் கடிதம்

புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் செயலாளருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பாதுகாப்பு குறித்து கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது பாதுகாப்பிற்காக பாதுகாப்பு பிரிவொன்றை ஸ்தாபிக்குமாறு கோரி ரணில் விக்கிரமசிங்க இந்த கடிதத்தினை அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்படி, அந்த கடிதத்தில் ரணில் விக்ரமசிங்க கோரிய பாதுகாவலர்களின் எண்ணிக்கை 163 ஆகும். மேலும், 15 சமையல்காரர்கள், 6 மருத்துவ அதிகாரிகள், 30 குடைகள், ஒரு கணினி மற்றும் பிரிண்டர் ஆகியவையும் கோரப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை அகற்றுவதாக தற்போதைய ஜனாதிபதி உறுதியளித்துள்ள சூழலில், ரணில் விக்ரமசிங்க இந்த கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

சாதாரண தர பரீட்சையில் தோற்றியோருக்கான முக்கிய அறிவிப்பு!

சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கமைய ஒக்டோபர் 01 முதல் 15ஆம் திகதி வரை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக நேற்று நள்ளிரவு வௌியாகி இருந்தன.
க்ஷ

தற்போது வௌியாகியுள்ள பெறுபேறுகள் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற விரும்பினால் 1911 அல்லது 011 2 785 922, 0112 786 616, 011 2 784 208 அல்லது 011 2 784 537 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை நாடளாவிய ரீதியில் 452,979 விண்ணப்பதாரர்கள் பங்குபற்றியுள்ளனர். 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் இதில் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் நடைபெற்றது.

Posted in Uncategorized

இஸ்ரேலின் முக்கிய நகரம் மீது தாக்குதல்!

இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள சேப்பாத் நகரின் மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

லெபனானின் பெய்ரட் நகர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்தே, இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பினர் 30 ஏவுகணைகளையாவது அனுப்பியிருக்கலாம் என இஸ்ரேலின் பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர்.

குறித்த ஏவுகணைகளில் சிலது தடுக்கப்பட்டிருந்தாலும் குறைந்தது இரண்டு ஏவுகணைகயேனும் சேப்பாத் நகரை தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பின்
தாக்குதலினால் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு படையினர் நான்கு அணிகளாக செயற்பட்டு வருகின்றனர்.

மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என கருதப்படும் நபர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு பொறுப்பெடுத்துள்ளது.

அத்துடன், லெபனான் மற்றும் காசாவின் மக்களை ஆதரிக்கும் நோக்கிலேயே இந்த தாக்குதலை நடத்தியதாகவும் ஹிஸ்புல்லாக்கள் தெரிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

இலத்திரனியல் கடவுச்சீட்டு குறித்து பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவு

இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்யும் தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால தடையுத்தரவு, ஒக்டோபர் முதலாம் திகதி வரை நடைமுறைக்கு வரும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து 750,000 இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை முறையான கொள்முதல் நடைமுறையை பின்பற்றாமல் கொள்வனவு செய்வதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம், முற்றிலும் சட்டவிரோதமான முறையில் இந்த இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டி ‘எபிக் லங்கா’ தனியார் நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமது லஃபர் தாஹிர், உண்மைகளை பரிசீலித்து, அரசாங்கத்தின் முறையான கொள்முதல் நடைமுறைகளை பின்பற்றாமல் சட்டத்திற்கு முரணான வகையில் இந்த இலத்திரனியல் கடவுச்சீட்டு கையிருப்பை வாங்க முடிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ரிட் மனுவில், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சிலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஐந்து மில்லியன் இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான டெண்டர் நடைமுறையை மீறி செப்டம்பர் 2 ஆம் திகதி இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகவும், அதன் ஒரு பகுதியாக, இரண்டு நிறுவனங்களிடமிருந்து 750,000 மின் கடவுச்சீட்டுகளை வாங்குவதற்கு ஒப்புதல் அளித்ததாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

மனு தொடர்பாக முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிபதி, உரிய அமைச்சரவை தீர்மானத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரை நடைமுறைபடுத்துவதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்ததுடன், அன்றைய தினம் மனுவை மீளப்பெறவும் உத்தரவிட்டுள்ளார்.

Posted in Uncategorized

அரசியலுக்கு விடைகொடுக்க முன்னாள் பெரும்பான்மை எம்.பிக்கள் சிலர் திட்டம்!

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாதிருக்க முன்னாள் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர்.

அரசியல்வாதிகளின் எதிர்கால அரசியல்
தேசிய மக்கள் சக்திக்கான வெற்றி வாய்ப்பு தமது மாவட்டத்தில் அதிகம் என்பதால், போட்டியிட்டாலும் தோல்வி ஏற்படும் எனக் கருதும் சில பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களே, தேர்தலில் இருந்து ஒதுங்குவதற்கு முடிவெடுத்துள்ளனர் என அறியமுடிகின்றது.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தியுடன் இணைவதற்கு ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்த முயற்சியும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க பக்கம் நின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சஜித் அணியும் கதவடைப்பு செய்துள்ளதால் ஒரு சில அரசியல்வாதிகளின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார்!

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தமது 74வது வயதில் காலமானார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இறுதிக் கிரியைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

குமார வெல்கமவுக்கு சுகயீனம் ஏற்பட்டமையினால் மூன்று மாத விடுமுறை வழங்குவதற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1994ஆம் ஆண்டு அவர் நாடாளுமன்றில் அங்கம் வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஆட்சி மாற்றம் காரணமாக பதவி விலக வேண்டியதில்லை – மத்திய வங்கி ஆளுநர்!

ஆட்சி மாற்றம் காரணமாக பதவி விலக வேண்டியதில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அரசாங்கமொன்று மாறியதற்காக சுயாதீனமாக செயற்படும் மத்திய வங்கி ஆளுநரும் நிதிச் சபையும் மாற வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதிச் சபையின் உறுப்பினர்களது தனிப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் பதவி விலகலாம் எனினும் பொதுவாக அவ்வாறு பதவி விலக வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய மத்திய வங்கி சட்டத்தின் கீழ் நிதிச்சபை மற்றும் ஆணையாளர் குறிப்பிட்ட காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பதவிக் காலத்தில் உச்ச அளவில் சேவையை வழங்கும் பொறுப்பு தமக்கு உண்டு என கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்படவுள்ள அதிகாரிகள்! அநுரவின் அடுத்த அதிரடி!

இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களில் கடமையாற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்ப உறவினர்களை திருப்பி அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு நெருக்கமான முக்கியஸ்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் எந்தவொரு நியமனத்தையும் வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளது.

அதன் காரணமாக போதிய தகுதிகள் இன்றி கடந்த காலங்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளைத் திருப்பியழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் அவர்கள் திருப்பி அழைக்கப்பட்டு, அந்த இடங்களுக்கு இராஜதந்திர துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

Posted in Uncategorized

இடைக்கால பாதீட்டை நவம்பரில் கொண்டு வர புதிய அரசாங்கம் திட்டம்!

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையால் 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான இடைக்கால பாதீட்டினை புதிய நாடாளுமன்றம் கூடவுள்ள எதிர்வரும் நவம்பர் மாதத்தில் கொண்டு வருவதற்கு புதிய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார குழுவின் தலைவர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.

அதேநேரம், 2025ஆம் ஆண்டுக்கான முழுமையான பாதீடு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார குழுவின் தலைவர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized