சொகுசு வாகனத்திற்கான 53 லட்சம் ரூபாய் நட்டஈட்டை செலுத்திய முன்னாள் எம்.பி

விபத்து இடம்பெற்று இரண்டு வருடங்களின் பின்னர் தான் பயன்படுத்திய சொகுசு வாகனத்திற்கான நட்டஈட்டை அண்மையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் செலுத்தியுள்ளார்.

இது தொடர்பில் விளக்கமளித்த மேல் மாகாண சபையின் செயலாளர் தம்மிக்க கே. விஜேசிங்க,

மேல் மாகாண சபைக்கு சொந்தமான சொகுசு வாகனத்தை பயன்படுத்திய போது விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் விதான கடந்த 24ஆம் திகதி மாகாண சபைக்கு 53.38 இலட்சம் ரூபாவை செலுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் விதான கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இருந்த போது அவரது பாவனைக்காக இந்த வாகனம் வழங்கப்பட்டது.

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் பயன்படுத்திய சொகுசு காரே இவ்வாறு சஹான் பிரதீப் விதானவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு பெறப்பட்ட இந்த அதி சொகுசு கார் 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பத்தரமுல்லை பெலவத்தை இசுருபாயவிற்கு அருகில் விபத்துக்குள்ளானது.

அந்த வாகனத்திற்காக சுமார் 13 மில்லியன் ரூபா காப்புறுதிப் பலன்களாகப் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த வாகனத்தை திருத்துவதற்கு தேவையான எஞ்சிய பணத்தை மேல் மாகாண சபையை வழங்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் விதான கோரிய போதிலும், எஞ்சிய பணத்தை மேல்மாகாண சபை செலுத்த மறுத்ததாக செயலாளர் தம்மிக்க கே. விஜேசிங்க தெரிவித்தார்.

Posted in Uncategorized

தென்னிலங்கைக்கு அடகு வைக்கப்பட்ட தமிழரசு கட்சியின் வீட்டு சின்னம்- ரெலோ சுரேந்திரன் காட்டம்!

தமிழ் தேசியத்தை சிங்கள வேட்பாளருக்காக விலை பேசிய தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்றாக போட்டியிட விரும்பவில்லை ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்றையதினம்(27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கூட்டமைப்பாக அனைவரும் ஒன்றிணைந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வருமாறு விடுத்த அழைப்பு தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் மக்களை வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்தமை எல்லோரும் அறிந்த விடயம் .

தமிழ் மக்கள் சார்ந்து அவர்களின் கோரிக்கையை பிரதிபலிக்கும் முகமாக தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து களம் இறங்கிய போது தமிழரசு கட்சியைச் சார்ந்த சுமந்திரன், சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என பகிரங்கமாக பிரச்சாரம் செய்தார்.

சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞானத்தில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் சாதகமான அம்சங்கள் இருப்பதாக கூறி தமிழ் தேசியத்தை தென்னிலங்கை கட்சிக்கு அடகு வைத்தார்.

தேர்தல் முடிவுகள் மாறி அமைந்தன சஜித் பிரேமதாசா தேர்தலில் தோற்றார் தமிழ் மக்கள் தோற்கடிக்கப்படவில்லை.

சுமந்திரன் தற்போது ஜனாதிபதி அநுர தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தருவார் என பல்டி அடித்து பேசி வருகிறார் அது அவரின் இயல்பான குணம்.

ஆகவே, தென் இலங்கைக்கு அடகு வைக்கப்பட்ட தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்பதோடு தமிழ் தேசியம் சார்ந்து பயணிப்பவர்கள் சங்குச் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையை விட்டு தப்பியோட தயாராகும் அரச அதிகாரிகள்!

மதுவரி திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக திணைக்கள உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் காரணங்களுக்காக சட்டத்திற்கு முரணாக மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதிகாரியே நாட்டை விட்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், அவர் தொடர்பான பல மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து ஏற்கனவே கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மதுபான அனுமதிப்பத்திரங்கள் பெற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிடும் அரசாங்கம்
மதுபான அனுமதிப்பத்திரங்கள் பெற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிடும் அரசாங்கம்
சட்டத்திற்கு எதிராக மோசடி
கலால் சட்டத்திற்கு முரணாக மதுபான உரிமம் வழங்குவது தொடர்பாக மதுக்கடை உரிமையாளர்களால் உயர் நீதிமன்றத்தில் மதுவரி திணைக்களத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த அதிகாரி தனது விருப்பத்திற்கேற்ப வரம்பற்ற மதுபான உரிமங்களை வழங்க லஞ்சம் பெற்றுள்ளதாக மதுவரி திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போலி பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் மோசடி மூலம் அரசாங்கத்திற்கு வரிப்பணம் நஷ்டம் ஏற்பட்டமை தொடர்பில் எதிர்வரும் விசாரணைகளில் இருந்து தப்பிக்கவே இவ்வாறு நாட்டை விட்டு செல்ல தயாராகி வருவதாக மதுவரி திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Posted in Uncategorized

பாடசாலைகளுக்கு அரசியல்வாதிகள் : பிரதமர் விடுத்த கண்டிப்பான உத்தரவு!

அரசியல்வாதிகளை தமது பாடசாலை நிகழ்வுகளுக்கு அழைப்பதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று(26) வலியுறுத்தியுள்ளார்.

கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், அரசியல்வாதிகளை பாடசாலைகளுக்கு அழைப்பதன் மூலம் மாணவர்களின் கல்வியில் கவனம் சிதறி பாடசாலை சூழலை அரசியலாக்கும் அபாயம் ஏற்படும் என தெரிவித்தார்.

ஆசிரியர் பணியிட வெற்றிடம்
ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்திய அவர், பொதுமக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையில் செயல்முறை முறையாக நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மாணவர்களின் மனநலம் குறித்து உரையாற்றிய அவர், தற்போதைய தலைமுறையினர் கணிசமான சவால்களை எதிர்கொள்கின்றனர், இதில் கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவை மாணவர்களிடையே மன அழுத்தத்தை அதிகரித்துள்ளன.

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு
அண்மைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவுக்கு விரைவான மற்றும் நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

இந்த விடயம் தொடர்பில் சுயாதீன அறிக்கை ஒன்றின் அவசியத்தை அவர் வலியுறுத்தியதுடன், தாமதமான அனைத்து பரீட்சை பெறுபேறுகளையும் உடனடியாக வெளியிடுமாறு பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவுறுத்தினார்.

Posted in Uncategorized

பாரிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் திலித் ஜயவீர

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பாரிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சியில் திலித் ஜயவீர ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரபல வர்த்தகரான திலித் ஜயவீர, அண்மைக் காலத்தில் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது மட்டுமன்றி மௌபிம ஜனதா கட்சி என்றொரு கட்சியின் தலைவராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் கட்சியின் சார்பில் அவர் போட்டியிட்ட நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பாரிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்கி இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

தொடர்ச்சியான கலந்துரையாடல்
அதற்காக ஏனைய கட்சிகளில் உள்ள மக்கள் செல்வாக்கு உள்ள அரசியல்வாதிகளுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சிக்கு புதிய சின்னம் ஒன்றைப் பெற்றுக் கொள்வது குறித்தும் அவர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

நாடாளுமன்றத் தேர்தலில் பெண் வேட்பாளர்கள் : தேசிய மக்கள் சக்தி தீர்மானம்

நாடாளுமன்றத் தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் பிரகாரம் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியலின் ஊடாக 22 தேர்தல் மாவட்டங்களிலும் பெண் வேட்பாளர்கள்

அதற்கு மேலதிகமாக எதிர்வரும் பொதுத்தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் மக்கள் செல்வாக்கு மிக்க வேட்பாளர்களை உள்ளடக்கி பலமான அணிகளை களமிறக்க தேசிய மக்கள் சக்தி உத்தேசித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு பின்னடைவு ஏற்பட்ட மாவட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

மேலும், அங்குள்ள வாக்காளர்களைக் கவரும் வகையில் புதிய திட்டங்களை முன்னெடுக்கவும் கட்சியின் செயற்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : வெளிவரும் அதிர்ச்சி தகவல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை அரச புலனாய்வுப் பிரிவினர் தவறாக வழிநடத்தியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரியவினால் எழுதப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய முன்னாள் சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர, 21 ஏப்ரல் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ஒரு பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான புதிர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை புலிகள் மீது பழி போட்ட இராணுவ புலனாய்வுப்பரிவு
2018 ஆம் ஆண்டு வவுணதீவில் இரண்டு காவல்துறையினர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகளை தவறாக வழிநடத்த இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட முயற்சியையும் அபேசேகர நினைவு கூர்ந்தார்.

வவுணதீவு படுகொலையை விடுதலைப் புலிகளே மேற்கொண்டதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அப்போதே ஆலோசனை வழங்கியதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில் இரண்டு காவல்துறையினரின் கொலையும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையது அல்ல, சஹரான் ஹாசிமுடன் தொடர்புடையது என்று தெரியவந்துள்ளது என்று அபேசேகர கூறினார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் தொடரும் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் தாம் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அபேசேகர குறிப்பிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், தனது சார்பில் நீதிமன்றத்தில் இலவசமாக முன்னிலையான சட்டத்தரணிகளுக்கு, குறிப்பாக பிரபல சட்டத்தரணி விரான் கொரியாவுக்கு நன்றி தெரிவித்தார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய நிர்வாகம் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நீதியை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் இருப்பதாக அபேசேகர தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கைக்கான சேவையை அதிகரிக்கும் விமான நிறுவனம்!

Cathay Pacific விமான சேவை நிறுவனம் 2024-2025 குளிர்காலப்பகுதியில் இலங்கை மற்றும் ஹொங்கொங் இடையே விமான சேவைகளை அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

Cathay Pacific ஆனது 2024-2025 ஆம் ஆண்டிற்கான புதிய குளிர்கால கால அட்டவணையை அறிவித்துள்ளது.

வாரத்திற்கு மூன்று முதல் நான்கு விமானங்கள்
இதன்படி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) மற்றும் ஹொங்கொங் இடையே வாரத்திற்கு மூன்று முதல் நான்கு விமானங்கள் வரை அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி 2 முதல் மார்ச் 1, 2025 வரை இந்த செயற்பாடு நடைமுறைக்கு வருகிறது. மார்ச் 2 முதல் மார்ச் 30, 2025 வரை வாரத்திற்கு ஐந்து திரும்பும் விமானங்களுக்கு சேவையை மேலும் மேம்படுத்த விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிரீமியம் எக்கனமி மற்றும் எக்கனமி கேபின்களுடன் வணிக வகுப்பில் பிளாட்பெட்களைக் கொண்ட ஏர்பஸ் ஏ330 விமானத்தைப் பயன்படுத்தி விமானங்கள் இயக்கப்படும்.

Posted in Uncategorized

சஜித்தின் பின்னடைவிற்கு ஜேவிபி தான் காரணமா?

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 45,30902 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவியமைக்கு தேசிய மக்கள் சக்தி மாத்திரமே காரணம் இல்லை என தமிழ் கவிதாசிரியர் ஜெயபாலன் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் ஊடகத்தின் நேர்காணலில் கலந்து கொண்டு, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர், “எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது தந்தையை போல அத்தனை கிளர்ச்சி ரீதியில் செயற்படவில்லை.

மேலும், சஜித் பிரேமதாச, 3 சதவீத வாக்கு நிலையில் இருந்த தேசிய மக்கள் சக்தி, அரகலய போராட்டத்திற்கு பிறகு வளர்ச்சி அடைந்திருந்ததை அறிந்திருக்கவில்லை.

அவ்வாறு தெரிந்திருந்தால், சஜித், ரணிலுடன் சேர்ந்து, தேர்தலில் போட்டியிட்டிருப்பதுடன், ஒருவர் ஜனாதிபதியாகவும் மற்றையவர் பிரதமராகவும் பதவி வகித்திருக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

நாடாளுமன்றத் தேர்தல் திகதி அரசமைப்புக்கு முரணானதா – மறுக்கின்றார் தேர்தல் ஆணையாளர்!

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த அறிவிக்கப்பட்டுள்ள திகதி அரசமைப்புக்கு முரணானது என சமூக ஊடகங்களில் வெளியாகும் கருத்துக்களைத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க மறுத்துள்ளார்.

“நாடாளுமன்றத் தேர்தலை நடத்த எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி ஏற்ற திகதி அல்ல. ஏனெனில் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் 5 வார கால இடைவெளி இருக்க வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.” என்று பலர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இதற்கு விளக்கமளித்த தேர்தல்கள் ஆணையாளர்,

“நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஒக்டோபர் 4 –11 வரை ஆகும்.

வேட்புமனுத் தாக்கல் செய்ய ஆரம்பிக்கும் திகதி உட்பட 5 வார இடைவெளி இருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகின்றது.

எனவே, தேர்தலுக்கு நவம்பர் 14 ஆம் திகதி சரியானது.” என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized