மட்டக்களப்பில் முன்னாள் எம்.பி மீது தாக்குதல்!

மட்டக்களப்பு கல்குடா தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயானந்தமூர்த்தியின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

வாழைச்சேனையில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று (20.09.2024) இரவு சென்ற இனந்தெரியாத நபர்கள் அவரின் வீட்டின் மீது தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகைகளும் கிழிக்கப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல் நடவடிக்கையை மூவரடங்கிய குழுவினர் முன்னெடுத்ததாக தாக்குதலுக்குள்ளான ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் தாக்குதலுக்குள்ளானவர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தே தன்மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். பிள்ளையானின் ஆதரவாளர்களே தன்னை தாக்கியிருக்ககூடும் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

Posted in Uncategorized

பேரினவாதிகளுக்கு வாக்களித்து அவர்களை பலப்படுத்த தமிழர்கள் முட்டாள்களில்லை – முன்னாள் தவிசாளர் நிரோஸ்

இலங்கை பொருளாதார ரீதியில் திவாலானமைக்கு தமிழ் மக்கள் மீதான யுத்த செலவீனமும் இனவாதத்தினால் ; தமிழ் மக்களை நாட்டின் அபிவிருத்தியில் பயன்படுத்தத் தவறியமையுமே காரணம் என்ற உண்மையை ஏற்று சிந்திக்காத செயல்படாத பேரினவாதத் தலைவர்களை நோக்கி நாம் இனியும் வாக்களிக்க முடியாது என முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

அச்சுவேலி முரசொலி முன்றலில் இடம்பெற்ற தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்திய பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், தமிழ் மக்களின் வாக்குகள் தமக்குத் தேவை என வெற்றிவாய்ப்புக்காக போட்டியீடுகின்ற வேட்பாளர்கள் முன்டியடிக்கின்றனர். அவர்கள் தமிழ் மக்களிடத்தில் வாக்குகளைக் கேட்கும் போது, கடந்த காலத்தில் தமது அரசியல் நீரோட்டத்தில் எந்தளவு தூரம் இனவாத அணுகுமுறைக்குள் இருந்தனர் என்பதை சிந்தித்து நாட்டின் தலைவராவதற்கு அந்தஸ்தற்றவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று வெற்றி வாய்ப்புள்ளவராகக் கருதப்படும் வேட்பாளர்கள் இலங்கை பொருளாதார ரீதியில் நாடு திவாலான நிலைக்குச் சென்ற போது சிங்கள மக்களிடத்தில் வெளிப்படையாகவே இந்த மோசமான நிலைமை அத்தனைக்கும் சொந்த தாய் நாட்டில் ஒரு தேசிய இனமான தமிழ் மக்கள் மீது அரச இயந்திரத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொடிய யுத்த செலவீனம் காரணம் என்பதை நாட்டிற்கு தெளிவு படுத்தவில்லை. சர்வதேசத்திடம் கடன் வாங்கச் சென்ற அரசு தமிழ் மக்கள் உலக அளவில் புலம்பெயர்வினால் பொருளாதார ரீதியில் முன்னிலையில் உள்ளனர் என்ற அடிப்படையில் அவர்களது முதலீடுகளையும் பங்களிப்பினையும் நாட்டிற்குள் கொண்டு வருவதற்கான உண்மையான முயற்சிகளை எடுக்கவில்லை. தமிழ் மக்கள் அங்கீகரிக்கத்தக்க அரசியல் தீர்வும் தமிழ் மக்களுக்கு போர் மற்றும் போருக்கு பின் முன்னான சூழ்நிலைகளில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்புக் கூறல் இடம்பெற்று இருக்குமாயின் நாங்கள் ஒட்டுமொத்த இலங்கையராக முன்னேறியிருப்போம். இவற்றுக்கு இந்த பேரினவாத பௌத்த சிங்கள மேலாதிக்கத்தில் இருக்கக் கூடிய சிங்கள வேட்பாளர்கள் தயாரில்லை. அந்நிலையில் நாம் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டோம். எமது பிரச்சினைகளை முன்னிறுத்தும் தமிழ் வேட்பாளருக்கே வாக்களிப்போம் என்பதில் உறுதியாக இருப்போம் என முன்னாள் வலிகாமம் கழக்குப் பிரதேச சபைத்தவிசாளரும் ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

வாக்குச் சாவடிகளை அமைப்பதற்கு பாடசாலைகள் மற்றும் பொது இடங்களை வழங்கல்!

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வாக்குச் சாவடிகள் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. பாடசாலைகள் மற்றும் பொது இடங்கள் போன்றவற்றில் இந்த வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

அந்தவகையில் பாடசாலைகள் மற்றும் பொது இடங்களை, வாக்குச் சாவடிகள் அமைப்பதற்காக அந்தக் கிராமத்துக்கு பொறுப்பான கிராம சேவகர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்றையதினம் நாடளாவிய ரீதியில் இடம்பெறுகின்றது.

அதனடிப்படையில் யாழ்ப்பணம் அராலி வள்ளியம்மை வித்தியாலயமானது, வாக்குச் சாவடி அமைப்பதற்காக ஜே/160 கிராம சேவகர் திரு.சிந்துஜனிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

Posted in Uncategorized

கட்சிக்கு தெரியாமல் சஜித்திற்கு எழுதிக் கொடுத்த சுமந்திரனால் வெடித்த புதிய சர்ச்சை!

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஒருபகுதியை இலங்கைத் தமிழரசுக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எழுதி கொடுத்து தமிழ் மக்களை முட்டாள்களாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார் என அமெரிக்க சாஸ்பெரி பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு தேர்தலில் ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த தீர்மானம், முதலில், அக்கட்சியின் முக்கியஸ்தர்களின் பங்கேற்பு இல்லாத நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனால் எடுக்கப்பட்டது. இதன்போது கட்சியின் தலைவர் உட்பட பலர் இந்த தீர்மானம் தொடர்பில் தெளிவின்மையை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

இதனை தொடர்ந்து, பல சர்ச்சைகள் எழுந்தன. இதற்கிடையில், தமிழரசு கட்சியின் தேர்தல் குறித்த இறுதி தீர்மானமானது, ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய்ந்த பின்னரே அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.

இதற்கிடையில், சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தானே எழுதியதாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ள நிலையில், முதலிலேயே தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த போதிலும் மக்கள் மத்தியில் ஒரு நாடகம் நடத்தப்பட்டுள்ளதா என்னும் கேள்வி எழுகின்றது.

பேராசிரியர் கலாநிதி கீத பொன்கலன் தனியார் ஊடகம் ஒன்றின் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Posted in Uncategorized

உயிர் அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டேன்: தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரன்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன் என தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் நான் விலகி விட்டேன் என போலியான பல தகவல்கள் வெளிவந்தாலும் யாரும் இதனை நம்ப வேண்டாம்.

நான் ஒருபோதும் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் பின்வாங்கப் போவதில்லை.

வடக்கு – கிழக்கில் மாத்திரம் பிரசார நடவடிக்கையில் ஈடுப்பட்டாலும் கூட ஏனைய தென் பகுதியிலுள்ள தமிழ்பேசும் மக்கள் விரும்பினால் வடக்கு – கிழக்கு மக்கள் எடுக்கும் முடிவுக்கு தங்களது ஆதரவை பெற்று தாருங்கள்” என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Posted in Uncategorized

இறுதி கட்டத்தில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிக்கைகள்!

இறுதி கட்டத்தில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிக்கைகள்!

ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நிலையத்துக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரமே வாக்கெடுப்பு நிலையத்தினுள் பிரவேசிக்க சட்டத்தினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பு நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள், வாக்கெடுப்பு நிலைய பணியாட்குழுவினர்,வாக்கெடுப்பு நிலைய கடமைகளில் ஈடுபட்டிருக்கும் பொலிஸ் அலுவலர்கள், போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்கள், ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் முகவர்கள்,ஜனாதிபதி வேட்பாளர்களின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள், ஜனாதிபதி வேட்பாளர்களின் பெரும்பாக முகவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஒவ்வொரு வேட்பாளர் சார்பாக முறைப்படி நியமிக்கப்பட்ட வாக்கெடுப்பு நிலைய முகவர்கள், தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதிபெற்ற ஒழுங்கமைப்புகளின் முகவர்கள் உள்நாட்டு/வெளிநாட்டு கண்காணிப்பு மற்றும் தெரிவத்தாட்சி அலுவலரின் அனுமதிபெற்ற அலுவலர்களுக்கும் வாக்கெடுப்பு நிலையத்தினுள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் தேர்தல் ஆணைக்குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

சஜித் வெற்றி பெற்றால் சுமந்திரனுக்கு அமைச்சு பதவி: பகிரங்கப்படுத்திய மூத்த சட்டத்தரணி

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஒருவேளை தேர்தலில் வெற்றிபெற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு அவர் நிச்சயம் அமைச்சுப்பதவியை வழங்குவார் என மூத்த சட்டத்தரணியான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக நேற்றையதினம் (18.09.2024) பிரசாரத்தில் ஈடுபட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

“சிலவேளை, சுமந்திரனுக்கு அமைச்சுப்பதவி வழங்குவதை மக்கள் எதிர்ப்பதற்கு வாய்ப்புள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால் அமைச்சுப் பதவிக்கு சமனான பதவி அவருக்கு வழங்கப்படும்.

அவருக்கு அமைச்சரை விட அதிகமான சலுகைகள் வழங்கப்படும். அதனால் தான் சுமந்திரன் சஜித்தை ஆதரிக்கின்றார்” எனத் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!

தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்காக விசேட தொடருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் விசேட தொடருந்துகளை இயக்குவதற்கு தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை ஜனாதிபதி தேர்தல் அன்று(21.09.2024) தொடருந்து நேர அட்டவணை வழமை போன்று நடைமுறைப்படுத்தப்படும் என தொடருந்து பிரதி பொது முகாமையாளர் நந்தன இண்டிபோலகே தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கு அடுத்த நாள், 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நீண்ட தூர தொடருந்துகள் சேவையில் ஈடுபடும் எனவும், குறுகிய தூர தொடருந்துகளில் சில குறைப்புக்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இறுதிக்கட்டத்தில் இந்திய தூதரகத்தில் இருந்து அவசர தொலைபேசி அழைப்புக்கள்!

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ள நிலையில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்குள் இந்தியாவின் இறையான்மை கேள்விக்குறியாகும் என்ற அச்சத்தில் சஜித் பிரேமதாசவை வெற்றியடைய வைக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைய, இந்தியா தனது பலத்தை நிரூபிக்க 10 றோ அதிகாரிகளை வடமாகாணத்தில் களமிறக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதாவது இந்தியா தனக்கு சாதகமான வேட்பாளரை மிக துள்ளியமாக ஆராய்ந்து இறுதிக்கட்டத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவினை வெளியிட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவிற்கான ஆதரவு நாளுக்கு நாள் குறைவடைந்து வரும் நிலையில் ஜே.வி.பிக்கான ஆதரவு படலத்தை எஞ்சியுள்ள இரண்டு தினங்களில் உடைக்க தீவிரமாக மூன்று தளபதிகளை களத்தில் இறக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த பின்னணியில் 20 ஆம் திகதி முக்கிய பாய்ச்சல் நடவடிக்கையொன்றினை ரணில் விக்ரமசிங்க நகர்த்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் களநிலவரம் தொடர்பில் இலங்கையின் அரசியல் ஆய்வாளர் எம்.எம் .நிலாம்டீன் ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவ்வாறு தகவல் வெளியிட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியில் யார் மீது யார் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது?

தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் மீண்டும் ஒன்றிணைந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக செயற்படவேண்டும் என்பதே எமது விருப்பம் என வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

ஆனால் இனி அது கனவாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில் நேற்றையதினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“தமிழரசுக் கட்சி கட்டுக்கோப்பான கட்சி. அதை யாரும் மாற்ற முடியாது. தேர்தல் காலத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை முன்வைப்பார்கள்.

அதனை கட்சி கூடி பேசி முடிவை அறிவிக்கும். அது கட்சியின் முடிவு. அதில் உடன்பாடு இல்லாத தனிநபர்கள் சில முடிவுகளை எடுக்கும் நிலை உருவாகிறது.

அவ்வாறே இந்த தேர்தல் நேரத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழரசுக் கட்சிக்கு கொள்கை இருக்கிறது.

அது நிலையாக இருக்கும். கட்சி ரீதியில் சுமந்திரன் மீதும் தவறு இருக்கும். ஏனையவர்கள் மீதும் தவறு இருக்கும் அது பேசிக்கொள்ளலாம்.

கட்சி நிலையாக இருக்கும். கருத்துச் சொல்வதற்கு சுதந்திரம் இருக்கு. அதன் அடிப்படையில் அவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.” என்றார்.

Posted in Uncategorized