தமிழ்த் தேசியக்கூட்டணியில் இணையுமாறு தமிழரசுக்கட்சிக்கு அழைப்பு

“இலங்கைத் தமிழரசுக் கட்சி தனியொரு கட்சியாகவே இப்போது இருக்கின்றது. ஆனால், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினராகிய நாங்கள் ஐந்து கட்சிகள் சேர்ந்த ஒரு கூட்டணியாக இருக்கின்றோம். ஆகையினால் தமிழரசுக் கட்சியினரே எமது கூட்டணியில் வந்து இணைந்துகொள்ள வேண்டும் இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ். கட்டப்பிராயில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மதியம் நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள பல்வேறு கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்டு வந்தது போன்று தற்போதும் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள பல்வேறு கட்கள் ஒன்றிணைந்து ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியாகச் செயற்படுகின்றோம்.

கூட்டணியில் ஐந்து கட்சிகள் அங்கம்
இந்தக் கூட்டணியில் தற்போது ஐந்து கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. ஆகையினால் தமிழ் மக்களுக்கு ஐக்கியம் வேண்டும் எனக் கருதுகின்றவர்கள் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் வந்து இணையுமாறு நாங்கள் அழைப்பு விடுத்திருந்தோம்.

எமது இந்த அழைப்புக்குப் பதிலளிக்காத இலங்கைத் தமிழரசுக் கட்சியினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இந்தத் தேர்தலில் மீண்டும் வந்து போட்டியிடுமாறு கூறுயிருக்கின்றனர். அந்த அழைப்பானது உளப்பூர்வமாக இல்லாமல் வெறுமனே ஏனோதானோ என்பது போல் அமைந்திருந்த்து. உண்மையில் தமிழரசுக் கட்சி தனியொரு கட்சியாகவே இப்போது இருக்கின்றது.

ஆனால், நாங்கள் ஐந்து கட்சிகள் சேர்ந்த ஒரு கூட்டணியாக இருக்கின்றோம். ஆகையினால் தமிழரசுக் கட்சியினரே எமது கூட்டணியில் வந்து இணைந்துகொள்ள வேண்டும்.

ஆகவே, தமிழ் மக்களின் ஐக்கியம் குறித்து பேசுகின்ற தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் எமது கூட்டணியில் இணைந்து செயற்பட விரும்புகின்ற பட்சத்தில் எப்போதும் வந்து இணைந்துகொள்ளலாம். தமிழரசுக் கட்சியைப் பொறுத்த வரையில் ஒருமித்த தீர்மானத்தை எடுக்கக்கூடிய நிலைமையில் அவர்கள் இல்லை. அவர்களுக்கு இடையே உள்முரண்பாடு அதிகமாக ஏற்பட்டுள்ளது.

இதனாலேயே அந்தக் கட்சி இப்போது நீதிமன்றமும் சென்றுள்ளது. அவர்களால் ஒருமித்து திட்டவட்டமான தீர்மானமொன்றை எடுக்க முடியாது. இப்போது இருக்கின்ற நிலைமையைப் பார்த்தால் தங்கள் கட்சிக்குள்ளேயே ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தத்தளிக்கின்றனர்.

இவ்வாறு ஒரு கட்சிக்குள்ளேயே சுமுகமான அமைதியான சூழலை ஏற்படுத்தி ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க முடியாதவர்கள் எவ்வாறு பொது இணக்கத்தை ஏற்படுத்த முடியும்.? இதனால் அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட ஆசனம் வழங்கப்படுமா என்பது கூட சந்தேகம் நிலவுகின்றது. ஆகவே, தமது கட்சிக்குள்ளேயே உள்ளக முரண்பாடுகளைத் தீர்த்து முதலில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கட்டும்.

அதன் பின்னர் ஐக்கியம் குறித்து பேசலாம். கூட்டணி குறித்தும் பேசலாம். எனவே, தமிழரசுக் கட்சியினர் தமது கட்சிக்குள்ளேயே பல பிரிவுகளாக இல்லாமல் ஓரணியாக ஒருமித்த தீர்மானத்தை எடுத்து அதனை உளப்பூர்வமாக முதலில் அறிவிக்கட்டும். அதன் பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.” – என்றார்.

Posted in Uncategorized

ரணிலை ஓரங்கட்டுவதில் முனைப்பு காட்டும் சஜித்

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் இந்நாட்டு அரசியல் களத்தில் இருந்து ரணில் விக்ரமசிங்க முற்றாக ஓரங்கட்டப்பட வேண்டுமென்பதில் சஜித் பிரேமதாச தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சி தங்களுடன் கூட்டிணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலி்ல் போட்டியிடுவதாக இருந்தால் கூட்டணியின் தலைவராக சஜித் பிரேமதாசவே நியமிக்கப்பட வேண்டும் என்று சஜித் தரப்பில் இருந்து கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

2024 இல் மேற்கொள்ளப்பட்ட கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றங்களை இரத்து செய்ய உத்தரவு
2024 இல் மேற்கொள்ளப்பட்ட கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றங்களை இரத்து செய்ய உத்தரவு
கூட்டணி பேச்சுவார்த்தை
அது மாத்திரமன்றி கூட்டணியின் செயலாளர் பதவியும் தமக்கே தரப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ருவன் விஜேவர்த்தன மற்றும் தலதா அதுகோரளை ஆகியோர் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ரணில் தரப்புடன் கூட்டிணையாமல் தனித்துப் போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என்பதன் காரணமாக ஐ்க்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் பலரும் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வதிலும் ஆர்வம் கொண்டுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

யாழில் பொது தேர்தலை இலக்குவைத்து கட்டுப்பணம் செலுத்திய 8 சுயேச்சைக் குழுக்கள்

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை 8 சுயேச்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் பதில் அரச அதிபருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.

அதற்கமைய, எதிர்வரும் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களைச் சமர்ப்பிக்க முடியும்.” என்றார்.

Posted in Uncategorized

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையை கண்டுபிடிக்குமாறு கோரும் நாமல்

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை காணாமல் போனமை குறித்து விசாரணை நடத்துமாறு, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, இந்த தாக்குதல்கள் தொடர்பாக இங்கிலாந்தின் செனல் 4 வெளியிட்ட குற்றச்சாட்டுகளை ஆராய்ந்த அறிக்கை காணவில்லை என கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் சிரில் காமினி பெர்னாண்டோ குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பிலேயே நாமல் ராஜபக்ச தமது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் கண்டுபிடிப்புகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை காணாமல் போயுள்ளமை என்பது கவலையளிக்கும் விடயமாகும்.

இது, உண்மையாக இருந்தால், அரசாங்கம் உடனடியாக அதனை கண்டுபிடித்து பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று நாமல் ராஜபக்ச கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களுக்கு எவ்வகையான தீர்வு என ஜனாதிபதி வெளிப்படையாக அறிவிக்க தயங்குவது ஏன் – சபா குகதாஸ் கேள்வி

ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்காவும் அவரது அமைச்சரவையும் நாட்டில் 75 ஆண்டு புரையோடிப் போய் உள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு எப்படியான பொறிமுறை ரீதியான தீர்வு தங்களால் முன்னெடுக்கப்படும் என்பதை உறுதிபட தெரிவிக்காமல் கடந்த கால ஆட்சியாளர் போன்று அரசியல் பேசுவது தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தையே வெளிப்படுத்தியுள்ளது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த காலத்திலும் புதிய அரசியல் அமைப்பின் மூலம் தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்படும் என கூறிய ஆட்சியாளர் தமிழ் மக்களை ஏமாற்றியதுடன் இலங்கைத் தீவின் பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கும் வெளி நாடுகளின் அதீத தலையீடுகளுக்கும் வழி வகுத்தனர் இதனை இலகுவில் மறந்துவிட முடியாது.

இலங்கைத் தீவு முன்னேக்கி பயணிக்க வேண்டும் என்றால் மாற்றம் அவசியம் என நீங்கள் உட்பட பலரும் பேசுகின்றனர். அப்படியான சிஸ்டம் சேஞ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் மூலமே நிலையானதாக ஏற்படும் இந்த உண்மையை ஏற்றுக் கொண்டால் தமிழர்களுக்கு எப்படியான தீர்வு வழங்க தயாராக இருக்கின்றீர்கள் என்ற வெளிப்படுத்தல் அவசியம்.

எனவே புதிய சமஷ்டி அரசியல் அமைப்பின் மூலமே தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்க முடியும் அப்படியான மனோநிலை ஜனாதிபதி அநுர குமாரவிடம் தெளிவாக இருந்தால் மட்டுமே உண்மையான மாற்றம் வெளிப்படும் மாறாக வெறும் வார்த்தைகளாக தந்திரேபாய அரசியலாக இருக்குமாயின் தற்போதைய பழைய அரசியலமைப்பின் சித்தாந்தம் ஆட்சியில் இருக்குமாயின் வெளிநாடுகளின் சதி வலையில் சிக்கி சீரழியும் நிலை உருவாகும் தமிழர்களை வார்த்தையால் அரவணைப்பது கடினம் என்ற கடந்த கால வரலாற்றை விளங்கி செயலில் காட்டினால் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வுடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

சொந்த நலனுக்காக அரசியல்வாதிகளிடம் டீல் : சத்தமின்றி காய் நகர்த்தும் சுமந்திரன்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது சொந்த நலனுக்காக அனைத்து அரசியல்வாதிகளிடையேயும் டீல் போட்டுகொண்டு இருப்பதாக பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் பாலா மாஸ்ரர் கடுமையாக சாடியுள்ளார்.

குறித்த விடயத்தை தனியார் ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை தாண்டி தனக்கு என்ன வேண்டும் மற்றும் தனக்கு என்ன பதவி வேண்டும் என்பதில் மாத்திரமே சுமந்திரனுக்கு அக்கறை.

அத்தோடு, சிங்கள மக்களுக்கு சுமந்திரனிடம் பேசுவது என்பது நம்பிக்கைக்குரியது.

ஒரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரிடம் கலந்துரையாடுவதை விட சிங்கள மக்களுக்கு இவரிடம் கலந்துரையாடுவது இலகுவாக இருக்கும் நிலையில்தான் இவர் உள்ளார்.

இந்தநிலையில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் கட்டாயம் சுமந்திரனை நிராகரிப்பார்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

காரணம், சுமந்திரன் முழுக்க முழுக்க தமிழ் தேசிய நீக்கத்தை செய்தவர்” என அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

கொழும்பு துறைமுக மனிதப்புதைகுழியில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

கொழும்புத் துறைமுகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மனிதப்புதைகுழி அகழ்வாராய்ச்சியில் இதுவரை எட்டு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அகழ்வாராய்ச்சியை மேற்பார்வையிடும் ஆலோசகரான சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

இவற்றில் இரண்டு எலும்புக்கூடுகள் ஏற்கனவே தோண்டி எடுக்கப்பட்டு தற்போது பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாம் கட்ட அகழாய்வு எதிர்வரும் 17ஆம் திகதி தொடங்கவுள்ளது எச்சங்களின் தோற்றம் மற்றும் சூழல் பற்றிய கூடுதல் தகவல்களைக் கண்டறிய அதிகாரிகள் தொடர்ந்து கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வருகின்றனர்.

புதைகுழி தொடர்பான அகழ்வு
இந்தப் பாரிய புதைகுழி தொடர்பான அகழ்வு மற்றும் விசாரணைகள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி சுனில் ஹேவகே மற்றும் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியல் ராஜ் சோமதேவ ஆகியோரின் தலைமையில் இடம்பெற்று வருகின்றன.

கடந்த ஜூலை 13ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்துக்குச் செல்லும் புதிய அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளுக்காக நிலத்தைத் தோண்டும்போது கொழும்புத் துறைமுகத்தில் அமைந்துள்ள பழைய செயலக வளாகத்தில் முதன்முறையாக மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

நீதிமன்றத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நீதிவான் பண்டார இலங்கசிங்க முன்னிலையில் கடந்த செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வியாழக்கிழமை அந்த இடத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

Posted in Uncategorized

ஆயுதப் படைகளை மேம்படுத்துவதற்கு திட்டமிடுகிறதா அநுர அரசு!

பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு ஆயுதப்படைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பிற்கு பல ‘வழக்கத்திற்கு மாறான’ அச்சுறுத்தல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர், முப்படைகள் தொழில் ரீதியாக தரமுயர்த்துவது உட்பட அனைத்து அம்சங்களிலும் அபிவிருத்தி செய்யப்படும் என மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் கடந்த வார இறுதியில் கண்டி தலதா மாளிகைக்குச் சென்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்கொந்தாவிடம், ஆயுதப்படைகளின் செயற்பாடுகளை அபிவிருத்தி செய்வது என்பதன் அர்த்தம் என்னவென ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இந்த கடமையை செய்வதற்கு அவசியமான காரணங்கள் அனைத்தையும் நாம் கண்டறிந்துள்ளோம்.

எமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான அனைத்து வகையான அச்சுறுத்தல்களையும் நாம் கண்டறிந்துள்ளோம்.

ஆகவே என்னுடைய தலைமையின் கீழ் நாட்டு மக்கள், பொது மக்கள் அளெசகரியங்களை எதிர்கொள்ளும் அனைத்து முறைகளிலும் ஏற்படும் சம்பிரதாயபூர்வமல்லாத அச்சுறுத்தல்கள் நிறையவே இருக்கின்றன.

புதுக்குடியிருப்பிலுள்ள உணவகங்களில் திடீர் சோதனை
புதுக்குடியிருப்பிலுள்ள உணவகங்களில் திடீர் சோதனை
நவீன தொழில்நுட்பம்

அந்த சம்பிரதாயபூர்வமல்லாத அச்சுறுத்தல்களுக்கு முடிந்தவரை விரைவாக நிவாரணமளித்து முப்படையினருக்கும் காணப்படும் இயலுமையை மேலும் முன்னேற்றமடையச் செய்து அவர்களின் அர்ப்பணிப்பின் அடிப்படையில் அந்த பணியை நிறைவு செய்வதே எமது அரசின் எதிர்பார்ப்பு.

ஆயுதப்படைகளை தொழில்சார் மட்டத்திற்கு கொண்டு வருவதற்கு தாம் செயற்படவுள்ளோம்.

இராணுவத்தின் அனைத்து பக்கத்திலும் நவீன தொழில்நுட்பம், பயிற்சி, பயற்சிப் பெற வேண்டிய வாய்ப்பு, தொழில் ரீதியாக உயர் நிலைக்குச் கொண்டுச் செல்வதற்கான அனைத்து காரணங்களையும் கண்டறிந்து முறையான வகையில் செயற்படுவதே எமது எதிர்பார்ப்பு“ என்றார்.

Posted in Uncategorized

யானை சின்னத்தில் களமிறங்க தயாராகும் ரணிலின் ஆதரவாளர்கள்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யானை சின்னத்தில் அல்லது வேறு ஒரு சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாக அரசியல் தரப்புக்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

அதேவேளை, எரிபொருள் கொள்கலன் சின்னத்தை பெற்றுக்கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் கருத்து கோரப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானம் அறிவிக்கப்பட்ட பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் குறித்த தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இடம்பெற்ற கலந்துரையாடல்
எதிர்வரும் தேர்தலில் தாங்கள் போட்டியிடும் சின்னம் மற்றும் கூட்டணி தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கொழும்பு ப்ளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் கூடி ஆராய்ந்துள்ளனர்.

இதன்போது, எரிவாயு கொள்கலன் சின்னத்தை பெற்றுக்கொள்ள முடியாவிட்டால், அவர்கள் பெரும்பாலும் யானை சின்னத்தில் அல்லது வேறு பொதுவான சின்னத்தில் போட்டியிடுவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

எதிர்கால அரசாங்கத்துடன் புரிந்துணர்வுக்கு தயாராகும் டக்ளஸ்!

ஆயுதம் ஏந்திய அனுபவம் கொண்ட புதிய ஜனாதிபதியால் உருவாக்கப்படவுள்ள எதிர்கால அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கான தகுதியாக தமது குழு தகுதியானது என தமிழ் துணை இராணுவக் குழுவின் தலைவர் ஒருவர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் என்ற அடிப்படையில் நல்ல புரிந்துணர்வு இருப்பதாக முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

“தேர்தல் முடிந்த பின்னர், அந்த வெற்றிக்கு பின்னர் ஆட்சியில் இருக்கின்றவர்களோடு கலந்துரையாடி, ஏனென்றால் அவர்களும் உங்களுக்குத் தெரியும் ஒரு ஆயுத போராட்டத்தின் ஊடாகத்தான் இன்று தேசிய நீரோட்டத்தில் ஜனநாயக வழிக்கு வந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.

அதேபோல் நாங்களும் ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டோம். கொள்கை எனப் பார்க்கையில் அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் கொள்கையில் வேறுபாடுகள் இல்லை.

அதாவது அவர்கள் ஒரு இடதுசாரி பாரம்பரியத்தில் வந்தவர்கள். ஈபிடிபியும் ஒரு இடதுசாரி பாரம்பரியத்தில் வந்தது. அந்த வகையில் எங்களுக்கு இடையில் ஒரு புரிந்துணர்வு இருக்கின்றது.” என்றார் டக்லஸ்.

டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் ஆகியோர் மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த 2004 இல் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்தனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் பின்னர் புதிய அரசாங்கத்துடன் இணையும் சாத்தியம் குறித்தும் ஈபிடிபி தலைவர் அதிக நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர், இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து ஈபிடிபியின் வீணை சின்னத்தின் வெற்றியின் பின்னர் நிச்சயம் அது நிறைவேறும் என்பதை கூறிக்கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டக்ளஸ் தேவானந்தா 1994 பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் பல அரசாங்கங்களில் அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.

பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசாங்க அச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21ஆம் திகதி கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized