Category: செய்திகள்
வட்டுக்கோட்டை சந்திக்கு அருகாமையில் விபத்து – முதியவர் வைத்தியசாலையில் அனுமதிப்பு!
இன்று காலை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை சந்தியில் இருந்து சித்தங்கேணி செல்கிற பக்கமாக அண்ணளவாக 150 மீற்றர்கள் தூரத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, குறித்த இடத்தில் வலது பக்கத்தில் உள்ள கிளை வீதிக்கு திரும்ப முற்பட்ட வேளை அதே திசையில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிளின் சாரதியும், அவருக்கு பின்னால் அமர்ந்திருந்து தலைக்கவசம் இன்றி பயணித்த முதியவரும் காயமடைந்தனர். முதியவர் சம்பவ இடத்தில் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்!
எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தவகையில் வாக்காள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் யாவும் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் இன்று நாடுபூராகவும் ஆரம்பமாகின.
அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் தபால் ஊழியர்களால் வாக்காளர் அட்டைகளை வீடுவீடாக சென்று விநியோகிக்கப்படுகிறது.
பொதுமகனிடம் கையூடு வாங்க முற்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம்!
பொதுமகனிடம் கையூட்டு வாங்க முற்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் கிளிநொச்சி விவேகானந்தா நகர் பகுதியைச் சேர்ந்த நபர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகர் இவ்வாறு இருவரையும் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளார்.
குறித்த பொதுமகனிடமிருந்து 5000 ரூபா பணம் பெற இருவரும் முயற்சித்துள்ளனர். இது தொடர்பாக விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும், குறித்த இருவரையும் நேற்று முதல் பணியிலிருந்து இடைநிறுத்துமாறும் பொலிஸ் அத்தியட்சகர் உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த இருவரும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமஸ்டிக்கோரிக்கையை தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்க முடியுமா..! சபா குகதாஸ் பகிரங்க சவால்
ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டிக்கோரிக்கையை உள்ளடக்க முடியுமா என ரெலோ அமைப்பின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ், மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கு சவால் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுர குமார திஸாநாயக்க போட்டியிடுகின்ற நிலையில் அவரது யாழ். மாவட்ட அமைப்பாளரான இராமலிங்கம் சந்திரசேகரன் தமிழ் மக்களிடம் பொய்களைக் கூறி வாக்கு கேட்க ஆரம்பித்துவிட்டார் என்றார்.
அதேவேளை, நாம் தமிழ் மக்களின் பொது வேட்பாளரை ஆதரித்துள்ளோம் அது தொடர்பில் மக்களிடம் தெளிவாகவே கூறியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
சீன திட்டங்களை தமிழ் மக்கள் ஆரோக்கியமாக பார்க்கவில்லை: சபாகுகதாஸ் தெரிவிப்பு
வடக்கு – கிழக்கின் தமிழர் பகுதிகளில் சீன (China) அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் திட்டங்களை தமிழ் மக்கள் ஆரோக்கியமான திட்டமாக பார்க்கவில்லை என ரெலோ அமைப்பின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சபா குகாதாஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்றையதினம் (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அண்மையில் சீன தூதுவரை சுமந்திரன் மற்றும் சாணக்கியன் சென்று சந்தித்திருந்தார்கள். அவர்களது சந்திப்பு தற்போதைய சூழ்நிலையில் ஒரு ஆபத்தான சந்திப்பாக பார்க்கும் நிலையில் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஏனெனில், தற்போது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை மட்டும் வழங்கப்படுகின்ற நிலையில் ஜனாதிபதியை தீர்மானிப்பதில் வல்லரசுகளின் ஆதிக்கங்களே அதிகமாக காணப்படுகின்றன.
கடந்த தேர்தல்களிலும் வல்லரசுகளின் ஆதிக்கம் இலங்கையில் பிரயோகிக்கப்பட்ட நிலையில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சீன தூதுவரை சந்தித்தது தற்போதைய சூழ்நிலையில் ஏற்புடையதல்ல.
வடக்கு – கிழக்கு தமிழர் பகுதிகளில் சீன அரசாங்கத்தினால் பொருத்து வீட்டு திட்டம் மற்றும் கடற்தொழிலாளர்களுக்கு அரிசி என்பன வழங்கப்பட்டது. குறித்த திட்டங்களை மக்கள் தமக்கான ஆரோக்கியமான திட்டங்களாகப் பார்க்கவில்லை.
ஆகவே, மக்களின் விருப்பங்களை அறியாதும் எமது கலாசாரங்களை பின்பற்றாத வீட்டு திட்டங்களை வழங்கும் சீன அரசாங்கம் மக்களை கருத்தில் கொள்ளாது தமது பூலோக அரசியலை தக்க வைத்துக்கொள்வதற்காக செய்யும் வேலை திட்டமாகவே பார்க்க முடிகிறது” என கூறியுள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது நாங்கள் ஜனாதிபதியாக வரமுடியும் என்ற அடிப்படையில் எழுந்த விடயம் அல்ல ரெலோ செயலாளர் பா.உ கோவிந்தன் கருணாகரம் ஜனா)
தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது நாங்கள் ஜனாதிபதியாக வரமுடியும் என்ற அடிப்படையில் எழுந்த விடயம் அல்ல. அதற்கப்பால் எங்களது பிரச்சனைகளை தேசத்திற்கும், சர்வதேசத்திற்கும் கொண்டு செல்வதுடன், கொண்டு செல்லப்படும் கோரிக்கைகள் முற்று முழுதாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.
இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய ஒரே ஒரு பேசுபொருளாக இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் 25க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தாலும், வடக்கு கிழக்குத் தமிழ் மக்களை மையமாக வைத்து ஒட்டுமொத்த தமிழர்களுக்குமாக தமிழ்ப் பொது வேட்பாளராக மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறப்பினர் பா.அரியநேத்திரன் அவர்களின் பெயர் குறிப்பிட்டிருக்கின்றது.
தற்போது உண்மையிலேயே தமிழ் பொது வேட்பாளர் தேவை என்ற நிலைமை உருவாகியிருக்கின்றது. அது கடந்த காலங்களிலே இந்த நாட்டை மாறி மாறி ஆண்ட அரசாங்கங்களினாலும், 1978ம் ஆண்டு நிறைவேற்று ஆட்சிமுறை கொண்டுவரப்பட்டதில் இருந்து ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஆறு ஜனாதிபதிகளும் தமிழ் மக்களது பிரச்சனைகளை ஏறெடுத்தும் பார்க்காமல் மக்களுக்கு பிரச்சினை இருக்கின்றது என்பதைக் கூட கணக்கெடுக்காத நிலையிலேயே தமிழ்ப் பொது வேட்பாளர் தேவை என்ற நிலைப்பாடு மக்கள் மத்தியிலே தோற்றம் பெற்றது. இந்நிலைப்பாடு தமிழ் மக்களது பிரச்சனை தீர்க்கப்படவில்லை, தற்போதும் தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாகவே இங்கு நடத்தப்படுகின்றார்கள் என்பதையும், 2009க்கு முன்னர் தமிழ்த் தேசியக் கட்சிகள் தமிழ் மக்கள் ஒன்றாக இருந்ததைப் போன்று தற்போதும் ஒன்றாக நின்று தமிழ் மக்களின் பிரச்சனைகளை வெளிக்கொணர வேண்டும் என்ற அடிப்படை உணரப்பட்டே தோற்றம் பெற்றது.
இதனூடாக தென்னிலங்கையிலே ஜனாதிபதியாக வர ஆசைப்படும் வேட்பாளர் எங்களுடன் பேரம்பேசுகின்ற ஒரு நிலைப்பாடு உருவாகலாம் என்ற நோக்கமும் இதனுள் உண்டு. பெரும்பாலும் சிங்களப் பகுதிகளிலே நான்கு பேருக்கிடையில் ஒரு போட்டி நிலவக் கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது. இதில் வெல்லக கூடிய வேட்பாளர்கள் எங்களுடன் பேசுவதற்கான காலமும் தற்போது இருக்கின்றது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் இருக்கின்ற நிலையில் எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு, பரிசீலிப்பதற்கான நியாயமான தீர்வான்றை இவர்கள் முன்வைப்பார்களாயின் நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்வது உகந்ததாக இருக்கும் என்பதே என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடாகும்.
ஏனெனில் தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது நாங்கள் ஜனாதிபதியாக வரமுடியும் என்ற அடிப்படையில் எழுந்த விடயம் அல்ல. அதற்கப்பால் எங்களது பிரச்சனைகளை தேசத்திற்கும், சர்வதேசத்திற்கும் கொண்டு செல்வதுடன், கொண்டு செல்லப்படும் கோரிக்கைகள் முற்று முழுதாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கம். அந்த அடிப்படையில் எங்கள் கோரிக்கைளை நிறைவேற்றுவதற்கு வேட்பாளர்களில் எவராவது பரிசீலிப்பார்களாக இருந்தால், அதற்கான உத்தரவாதங்களைத ருவார்களாக இருநதால், தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்திய தரப்பினரை பேசுவதற்கு அழைத்தால் அவர்களுடன் பேச வேண்டிய தேவைப்பாடும் எங்கள் மத்தியில் இருக்கின்றது.
அவ்வாறு எங்கள் கோரிக்கைகள் நியாயமாகப் பரிசீலிக்கப்படாதவிடத்து, தமிழ் மக்களாகிய நாங்கள் ஒற்றுமையாக இருந்து இன்னும் சிங்களத் தரப்பிலே ஜனாதிபதியாக வருபவர்கள் எங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தயாராக இல்லை என்ற விடயத்தை உறுதியாக வெளி உலகத்திற்குச் சொல்வதற்கும், எமது ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்கும் இது ஒரு சந்தர்ப்பமாக இருக்கும். இந்த நிலையில் நாங்கள் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற நிலைப்பாட்டை முன்னெடுத் விடயம் சரியானது என்பதை நியாயப்படுத்தக் கூடிய சூழ்நிலையும் இங்கு உருவாகும் என்று தெரிவித்தார்.
காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் நாமலிடம் சபா குகதாஸ் கேள்வி
காணி, பொலிஸ் அதிகாரங்களுக்கு வாக்கெடுப்பு நடாத்த தயாரா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் (Namal Rajapaksha) தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார். சபா குகதாஸ் (Saba Kugadas) கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் இன்றையதினம் (01.08.2024) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும்,
பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வடக்கு மாகாண இளைஞர்களில் ஒரு பகுதியினர் காணி, பொலிஸ் அதிகாரங்கள் தேவையில்லை என கைவிட்டுள்ளனர் என கூறியதுடன் பெரமுன ஒரு போதும் மாகாணங்களுக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்காது எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழர்களை ஏமாற்றியதன் விளைவு
நாமலின் தந்தை மகிந்த ராஜபக்ச யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவிற்கு பதின்மூன்று பிளஸ் வழங்குவேன் என உத்தரவாதம் கொடுத்ததை யுத்த முடிவின் பின்னர் பதின்மூன்று பிளஸ் பிளஸ் என பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடாத்தியதையும் அவர் மறந்திருக்கமாட்டார்.
மகிந்த ராஜபக்ச தமிழர்களை ஏமாற்றியதன் விளைவை 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கற்றுக் கொண்டதை மறந்து விடமாட்டார்.
வடக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்களின் வாக்களிப்பின் உச்சம் 2013ஆம் ஆண்டு புள்ளடி மூலம் காட்டப்பட்டது.
வாக்கெடுப்பு
அதன் வெளிப்பாடு தமக்கான காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்பது தான் என நாமல் ராஜபக்ச நினைவில் கொள்ள வேண்டும்.
காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் நாமலிடம் சபா குகதாஸ் கேள்வி | Saba Kugadas Question To Namal
2019ஆம் ஆண்டு ஐனாதிபதித் தேர்தலில் மொட்டுச் சின்னத்திற்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் கொடுத்த தீர்ப்பை உலகமே அறியும்.
தமிழ் மக்களை பிரித்தாளும் எண்ணங்களை கை விட்டு முடிந்தால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வேண்டுமா? வேண்டாமா? என்று ஒரு வாக்கெடுப்பை நாமல் நடாத்த வேண்டும்” – என்றுள்ளது.
அடக்குமுறைகளை பரிகாரமின்றியே தமிழ் மக்கள் நாட்டில் வாழ்கின்றனர் – கறுப்பு யூலை நினைவேந்தலில் நிரோஸ்
கறுப்பு யூலை தமிழ் மக்கள் மீது இன ரீதியிலான திட்டமிடப்பட்ட அரச பயங்கரவாதம் பிரயோகிக்கப்பட்ட ஓர் வன்முறையாகும். இவ்வாறான ஏற்றுக்கொள்ள முடியாத துரதிஸ்ட நிலைமைகள் நாட்டின் வழமையாக இருந்துள்ள போதும் அவற்றுக்கு அரசு பொறுப்புக்கூறல் மற்றும் மீள நிகழாமை பொறிமுறையை உறுதிப்படுத்தாமையினால் தமிழ் மக்கள் ஆகிய நாம் உள்நாட்டில் மனக்கசப்புடனும் அதிர்ப்தியுடனும் அடக்குமுறையை சகித்தே வாழ்கின்றோம். இவ்வாறு ரொலோவின் தலைமைக்குழு உறுப்பினரும் முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.
தந்தை செல்வா கேட்போhர் கூடத்தில் ஜனநாயகத்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சனிக்கிழமை நடைபெற்ற கறுப்பு யூலை நினைவேந்தலில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் பல இனக் கலவரங்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள போதும் கறுப்பு யூலை இனக்கலவரம் சர்வதேச கவனத்தினை ஈர்த்ததாகக் காணப்பட்டது. அது முமையாக அரச திட்டமிடலிலேயே இடம்பெற்றது. அரசின் முழுக் கட்டுப்பாட்டில் காணப்பட்ட வெலிக்கடைச் சிறைக்குள் எமது இயக்கத்தின் தாபகத் தலைவர் தங்கத்துரை, தளபதிகளான குட்டிமணி, ஜெகன் உள்ளிட்ட தலைவர்களை நாம் ஆகுதியாக்கியுள்ளோம். அவர்கள் போன்ற செயல்வீரமும் அர்ப்பணிப்பும் தியாகமும் மிக்க தலைவர்களை எமது கட்சி மாத்திரம் இழக்கவில்லை. மாறாக தமிழ்த் தேசியமே இழப்பினைச் சந்தித்தது. தமது மரணத்தில் தம் கண்களை கொடையளித்து தமது கண்கள் மலரும் விடுதலை பெற்ற தாயகத்தை காணும் என கனவு கண்ட தலைவர்கள் கண்கள் பிடுங்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இவ்வாறாக தலைவர்கள் உள்ளிட்ட 53 பேரை அரச அனுசரனையில் கடும் சித்திரவதைகளுக்குள்ளாக்கி படுகொலை செய்தனர்.
வன்முறைகள் வாயிலாக டயர்கள் பேட்டு எரித்து மூவாயிரம் தமிழர்களை அழித்தனர். 25 ஆயிரம் பேரை காயப்படுத்தினர். 50 ஆயிரம் பேரை உள்ளாட்டில் சொத்துக்களை சூறையாடியும் கொன்றும் இடம்பெயர்ந்தோராக்கினர்.
இந்தச் சம்பவங்கள் அரசின் உயர்மட்ட திட்டமிடலிலேயே நடந்தன. அதற்கு உதாரணமாக, வன்முறைக்கு இரு வாரங்களுக்கு முன் (193 யூலை 11) லண்டனைத் தளமாகக் கொண்ட டெய்லி டெலிகிராப் பத்திரிகைக்கு பேட்டியளித்த அரசுத்தலைவர் ஜெயவர்த்தனா, தமிழ் மக்கள் விடயத்தில் தமக்குக் கவனம் கிடையாது. அவர்களுக்கு எது நடந்தாலும் சிங்கள மக்கள் மகிழ்வார்கள் என்று அரச பொறுப்புணர்வுத் துறப்பினை வெளிப்படுத்தினார். நடந்த சம்பவங்களை கண்காணிப்புக்கு உட்படுத்திய பன்னாட்டு நீதித்துறை வல்லுநர்கள் ஆணையம் (International Commission of Jurists, ICJ) நடைபெற்றவற்றை இனப்படுகொலை என சுட்டிக்காட்டியது.
இவ்வாறாக உள்நாட்டிலேயே எண்ணற்ற அநியாயங்களை எதர்கொண்டவர்களாக அவற்றுக்கான நீதிக்கு பல தசாப்தங்கள் கடந்தும் கிடைக்கப்பெறாது போராடும் ஓர் இனமாக நாம் வாழ்கின்றோம் என்பதே இன்றைய யதார்த்தம் என தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.
தமிழ் பொது வேட்பாளர்- தமிழ் கட்சிகள் உடன்படிக்கையில் கைச்சாத்து!
தமிழ்த் தேசியக் கட்சிகளிற்கும், தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது இன்று முற்பகல் 12 மணி அளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று கைச்சாத்திடப்பட்டது.
சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகளினதும் ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தரப்பிலிருந்து பொது வேட்பாளரை நிறுத்துவதற்குக் கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.
அது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமே இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடிய கட்சிகள் தமிழ் மக்களது கோரிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சியாகக் குறித்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.
மேலும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான திகதிகள் அறிவிக்கப்படும்போது பொது வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள்
இவ் உடன்படிக்கையில் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களும் பல்வேறு சிவில் அமைப்புக்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச் சபையின் சார்பில் அதன் முக்கியஸ்தர்களும் கையொப்பம் வைத்துள்ளதோடு 7 தமிழ்க் கட்சிகளும் 7 சிவில் சமூக பிரதிநிதிகளும் கையொப்பம் இட்டுள்ளனர்.
இதில் தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஐனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் ஆகிய ஏழு கட்சிகளும் அங்கம் பெற்றுள்ளன.
குறித்த உடன்படிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தான் ஆகியோரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பொ. ஐங்கரநேசன், சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா, ஜனநாயக போராளிகள் சார்பில் சி.வேந்தன் உள்ளிட்ட அரசியல்வாதிகளும், அரசறிவியல்துறை பேராசிரியர் கே.ரி கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி அ.யோதிலிங்கம், அரசியல் விமர்சகர் யதீந்திரா மற்றும் அரசியல் விமர்சகர் நிலாந்தன் உள்ளிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கையொப்பம் இட்டனர்.