ஒக்டோபர் 5 இல் ஜனாதிபதித் தேர்தல் ! – ஹரின் பெர்ணான்டோ

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 5 ஆம் திகதி இடம்பெறும் என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

காலியில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 5 ஆம் திகதி நிச்சயமாக நடக்கும். அப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

அவர் எப்படி வெல்வார் என்பதை வென்ற பிறகு நான் காண்பிக்கிறோம். ஐ.எம்.எப். தற்போது எமது அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் திருப்தியடைந்துள்ளது.

பலரும், ஐ.எம்.எப். எமக்கு உதவிகளை செய்யாது என நாடாளுமன்றத்தில் கூறினார்கள். நாடாளுமன்றில் ஜனாதிபதியாக தெரிவாக, நான் வாக்களித்த எனது நண்பரும் ஐ.எம்.எப். எமது நாட்டுக்கு உதவிகளை செய்யாது எனக் கூறினார்.

இப்போது ஐ.எம்.எப். எமக்கான கடனுதவிகளை வழங்க முன்வந்தவுடன், எதிர்க்கட்சித் தலைவரினால்தான் இது சாத்தியமானது என்று கூறுகிறார்கள்.

இதிலிருந்தே இவர்கள் அரசியல் ரீதியாக எந்தளவு தெளிவுடன் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

இவர்களிடம் ஆட்சி சென்றால், யாழில் எத்தனை டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டு மைதானங்கள் இருக்கிறது என்று கேட்ட நிலைமை தான் நாட்டுக்கும் ஏற்படும்.

இதுதொடர்பாக மக்கள் சிந்திக்க வேண்டும்” என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு சமஸ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை வழங்க தென்னிலங்கை சக்திகள் தயாரில்லை – சபா.குகதாஸ்

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு சமஸ்டி அடிப்படையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை ஐக்கிய இலங்கைக்குள் ஏற்படுத்தக் கூடிய அரசியல் அமைப்பை உருவாக்க கூடிய நிலைப்பாட்டை தென்னிலங்கை சக்திகள் எவரும் தயாராகவில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரால் இன்றையதினம்(13) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய இனப்பிரச்சினை என்ற விடயத்தை மறைத்து தமிழர்களின் பெரும் தியாகத்தை ஒரே நிகழ்ச்சி நிரலில் சிதைக்க வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகும் பிரதான மூன்று சிங்கள வேட்பாளர்களும் அவர்கள் சார்ந்த அணியும் ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்கள் அற்ற 13ம் திருத்தத்துக்குள் தமிழர்களை சிக்க வைத்து வாக்குகளை கபளீகரம் செய்து விடலாம் என்ற கனவுடன் யாழ்ப்பாணத்தில் தமது உரையாடலை ஆரம்பித்துள்ளனர்.

தென்னிலங்கையில் பௌத்த சிங்கள நாடு என்ற கோட்பாட்டை பாதுகாப்பதுடன் சமஷ்டி மற்றும் 13ம் திருத்தம் என்பவற்றுக்கான பேச்சுக்கூட எவருடனும் இருக்காது என சிங்கள மக்களுக்கு சத்தியம் செய்யாத குறையாக உரையாடும் அதே தரப்பு வடக்கில் யாழ்ப்பாணத்தில் அதற்கு எதிரான நிலையில் உரையாடுகின்றனர்.

பூகோள நாடுகளுக்கு தமிழர் தரப்பு ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை ஏற்று விட்டார்கள் என்ற விம்பத்தை உருவாக்கவும் அதன் மூலம் கடந்த கால உயர்ந்த பட்ச கோரிக்கைகளில் இருந்து கீழ் இறங்கி விட்டனர் என்ற நிலையை வெளியில் காட்டவும் சிங்கள பேரினவாதம் வேறுபட்ட முகாங்களில் இருந்தாலும் தமிழர் விடயத்தில் ஒரே நிகழ்ச்சி நிரலில் நகருகின்றனர்.

தேசிய இனப்பிரச்சினைக்கு சமஸ்டி அடிப்படையிலான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை ஐக்கிய இலங்கைக்குள் ஏற்படுத்தக் கூடிய அரசியல் அமைப்பை உருவாக்க கூடிய நிலைப்பாட்டை தென்னிலங்கை சக்திகள் எவரும் கொண்டிருக்க வில்லை என்ற மனோநிலை யாழில் நடைபெறும் சந்திப்புக்கள் உறுதி செய்துள்ளன.

தமிழர் தரப்பு நிதானமாக சிந்தித்து உறுதியான முடிவுகளை எடுக்கவிட்டால் விலை மதிப்பிட முடியாத தியாகங்கள் கரைந்து போய்விடும் எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் நடாத்தப்பட வேண்டும்; எமது உரிமைகளைப் பறிக்க எவருக்கும் அதிகாரமில்லை – பேராயர் மல்கம் ரஞ்சித்

“சர்வசன வாக்கெடுப்பை நடத்தி இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குத் தாமே ஆட்சிசெய்ய முடியுமா என்று பார்க்க பட்டத்தைப் பறக்கவிட்டுப் பார்க்கிறார்கள். அதனை ஒருபோதும் ஏற்க முடியாது. அரசியலமைப்பொன்று இருக்கிறது. அதன் பிரகாரம் ஐந்து வருட ஆட்சி நிறைவின் பின்னர் கட்டாயம் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும். எமது உரிமைகளைப் பறிக்க எவருக்கும் அதிகாரம் இல்லை” என்று மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

கொழும்பு ஆயர் மெக்ஸ்வெல் சில்வாவால் எழுதப்பட்ட ‘இலங்கையில் கிறிஸ்தவ தர்மத்தைக் கற்பிப்பதற்கான சவால்கள்’ என்ற தலைப்பிலான நூலின் வெளியிட்டு விழா நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்றது.

அந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

நாங்கள் ரெஜிமண்ட் சமூகத்தில் இல்லை. பட்டம் அனுப்பும் விதம் தெரியுமா? இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்காக மக்களின் வெறுப்புக்குள்ளான ஆட்சியாளர்களே மீண்டும் இந்த நாட்டை ஆட்சி செய்ய சர்வசன வாக்கெடுப்பை நடத்த முடியுமா என்பதைப் பார்ப்பதற்காக பட்டம் விடுகிறார்கள்.

அதனை ஒருபோதும் ஏற்க முடியாது. அரசியலமைப்பொன்று இருக்கிறது. அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு ஐந்து வருட காலம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஐந்து வருடங்கள் நிறைவடைந்ததன் பின்னர் அவர்கள் தேர்தலை நடத்த வேண்டும். பிரஜைகள் என்ற அடிப்படையில் அது எமது உரிமையாகும்.

அரசாங்கத்தால் எமது உரிமைகளைப் பறிக்க முடியாது.

குழந்தையிடமிருந்து அதன் கெளரவத்தை எவ்வாறு பறிக்க முடியாதோ, அதேபோன்று சுதந்திரத்துக்கான எந்தவொரு விடயத்தையும் அரசாங்கத்தால் பறிக்க முடியாது. இதுவரையில் கண்டது சகலதும் போதும். சுதந்திரமான தேர்லொன்றினூடான எமது தலைவர்களைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு வழங்க வேண்டும். அது எமது உரிமையாகும். அது எமக்கு அவசியமானதாகும் என்றார்.

நலன்புரித் திட்டங்களை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரித் திட்டங்களை வினைத்திறனுள்ளதாக்கி அதன் பயன்களை மக்களுக்கு துரிதமாக வழங்குவதற்கு ஆளுநர்கள் பங்களிக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாகாண ஆளுநர்களுடன் நேற்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது மாகாண மட்டத்தில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை விரைவாகத் தீர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் உறுமய காணி உறுதி வழங்கும் திட்டத்தின் வினைத்திறன் என்பன குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் உறுமய காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கு கிராம உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக மற்றுமொரு குழுவிற்கு அதிகாரத்தை வழங்கி நடமாடும் சேவைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பில் மக்களை ஆர்வமூட்டி, அவர்களுக்கு அந்த நன்மையை வழங்க வேண்டிய பொறுப்பு பிரதேச செயலாளர்களுக்கு உள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்தார்.

சார்க் பொதுச் செயலாளர் ஜனாதிபதி இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர் கோலம் சர்வார்க்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

சார்க் நாடுகளுக்கிடையிலான பல்வேறு திட்டங்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பில் பாரபட்சமின்றி தலையீடு செய்யுமாறு சார்க் பொதுச் செயலாளரிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

இலங்கையில் செயற்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், அதற்கு சார்க் நாடுகளின் ஆதரவை பெறுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை சார்க் கலாச்சார மையத்தை மொடர்ன் ஆர்டிற்காக மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இரண்டாவது மீளாய்வுக்கு ஐ.எம்.எப். ஒப்புதல்

சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அலி சப்ரி தனது X கணக்கில் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட 2.9 பில்லியன் டொலர்கள் விரிவான கடன் நிதியின் மூன்றாவது தவணையை இலங்கை பெறவுள்ளது.

எனவே, சுமார் 336 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம், நாட்டின் பொருளாதாரத்தில் மேலும் சீர்திருத்தம் மற்றும் தகுந்த மாற்றங்களை ஏற்படுத்த இது வாய்ப்பளிக்கும் என்று தெரிவித்துள்ளது

நினைவேந்தல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூறுவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

சிரேஷ்ட பேராசிரியர் ஜகத் வீரசிங்க, கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழக பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டி. சனாதனன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பர்ஸானா ஹனீபா, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் துஷாரி சூரியாராச்சி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மஹிந்த விதானராச்சி ஆகியோர் உள்ளடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.

22-05-2023 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

1983-2009 காலகட்டத்தில் இலங்கையில் நடந்த ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டுக் கலவரங்கள் என்பவற்றினால் உயிரிழந்த பொதுமக்கள், ஆயுதப்படை உறுப்பினர்கள், பொலிஸார், முன்னாள் போராளிகள் உட்பட அனைவரையும் நினைவுகூரும் வகையில் ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக நினைவிடமொன்றை அமைப்பது குறித்து இந்தக் குழு ஆய்வு செய்தது.

இதற்காக, நிபுணர் குழு கடந்த நாட்களில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் அமர்வுகளை நடத்தியதுடன், ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான நிபுணர்களுடன் ஆலோசனைகளையும் நடத்தியது.

இந்த பொதுமக்கள் அமர்வுகள் அந்தந்த பகுதிகளில் பணியாற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தேசிய ஒருங்கிணைப்பு அதிகாரிகளினால் ஒருங்கிணைக்கப்பட்டன. பங்குபற்றிய மக்களுக்கு தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்கத்திற்கான தமது அபிலாஷைகள், யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

நினைவேந்தல் செய்வதற்கான மக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று குழு வலியுறுத்தியதோடு பல்வேறு குழுக்களும் தனிநபர்களும் நினைவேந்தல் மற்றும் நல்லிணக்க நிகழ்வுகளை வெவ்வேறு வழிகளில் முன்னெடுப்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. வளமான அறிவுக் கட்டமைப்பையே இது வெளிப்படுத்துவதாக சுட்டிக்காட்டியுள்ள நிபுணர் குழு, நாட்டின் மோதல்கள் தொடர்பான கடந்த காலத்தைப் பற்றி அறிக்கையிடவோ, கருத்துத் தெரிவிக்கவோ அல்லது வேறுவிதமாகக் கையாளும் முயற்சியின் போது இந்தப் பங்களிப்புகளைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த சந்திப்புகளின் போது முன்வைக்கப்பட்ட பரந்த அளவிலான யோசனைகளை பரிசீலித்த பின்னர் இந்தக் குழு பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இலங்கையின் மோதல்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுடன் உருவான கலை மற்றும் கலாச்சார வெளிப்பாடுகளை பாதுகாத்து வைக்கும் குறியீட்டு ரீதியிலான கட்டடமொன்றை அமைக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக கூட்டு அர்ப்பணிப்பை உறுதி செய்வதும் அனைத்து இலங்கையர்களிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும்.

குழுவின் அறிக்கையைக் கையளித்த போது ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் உடன் இருந்தார்.

13ஐ அமுல்படுத்துவது தொடர்பில் வட்டமேசை மாநாட்டைக் கூட்டுமாறு முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய கோரிக்கை

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்குவது குறித்து அரசியல் தலைவர்களும், புலம்பெயர் தமிழர்களும் நேர்மறையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள நிலையில் தாமதமின்றி வட்டமேசை மாநாட்டைக் கூட்டி தீர்வை எட்டுமாறு சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

“வடக்கு மற்றும் தெற்கின் பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தவும், இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்ட மோதல்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கும், அனைத்து பிரஜைகளுக்கும் கண்ணியத்துடன் வாழக்கூடிய உரிமையை வழங்குவதும், இந்தப் பிரச்சினைகளை எதிர்கால தலைமுறைகளுக்கு விட்டு வைக்காமல் இருப்பதும் எமக்குள்ள பாரிய கடமையாகும்.

ஆகையால் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி அதற்கான தலையீடுகளை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் மேற்கொள்ள வேண்டும் என்பது எமது நம்பிக்கையாகும். மேலும் 9 ஆவது நாடாளுமன்றத்தின் கால எல்லை தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி உள்ளிட்ட ஆளும் கட்சிக்கும், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதின் முக்கியத்துவம் தொடர்பில் அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தற்போது நாடாளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்பட்டு வரும் அதிக அளவிலான உறுப்பினர்களும் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிட எண்ணி இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர்களும் இந்தக் கருத்தில் உறுதியாக இருப்பது எமக்குத் தெரியும்.

இது போன்ற முற்போக்கான அபிலாஷைகளைப் பாராட்டபட வேண்டும். இந்த அனைத்து விடயங்களையும் கருத்தில் கொள்கையில் தற்போது நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து தாமதமின்றி வட்டமேசை மாநாட்டைக் கூட்டி இவ்விடயங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுமாறு மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகின்றோம்.

தமிழ் புலம்பெயர்ந்த தரப்பினரில் குறிப்பிடத்தக்க குழுவினர் இதற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதும் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். இவ்விடயத்துக்கு நாட்டின் முதன்மை தரப்புகள் ஆதரவு தெரிவித்திருப்பது பாராட்டத்தக்கது.

இந்தப் பேச்சுகளைப் புறக்கணிக்காமல் இருப்பதற்கான கடமை தமிழ் அரசியல் கட்சிகளுக்கு போன்றே அனைத்து கட்சிகளுக்கும் உள்ளது. குறுகிய அரசியல் காரணங்களுக்காக இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் துரோகிகள் என்று எதிர்காலச் சந்ததியினர் குற்றஞ்சாட்ட வழிவகுக்கும். ஆகையால் ஜனாதிபதி உள்ளிட நாடாளுமன்றம் உன்னத நோக்கத்துடன் தலையிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றுள்ளது.

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும் எதிர்க்கட்சித்தலைவரின் கூற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை மீள அமுல்படுத்துவது குறித்து எதிர்க்கட்சித் தலைவரின் கூற்றுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (13) காலை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை பிரிவினைக்கு எதிரான கூட்டமைப்பு, தேசிய அமைப்புகளின் ஒற்றுமை, தேசப்பற்றுள்ள தேசியப் படை, இரண்டாம் தலைமுறை, யாழ். சிவில் சமூக மையம், அகில இலங்கை அமைப்பு, பிரஜை அதிகாரத்திற்கு எதிரான இலஞ்சம் மற்றும் ஊழல் அமைப்பு, பூகோள இலங்கை சங்கம், நீதி மற்றும் இறைமைக்கான மக்கள் குரல், தேசப்பற்றுள்ள அறிஞர் சங்கம் என்பன கலந்து கொண்டனர்.

இதன் போது எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சி இல்லாததால் அலுவலகப் பிரதிநிதி ஒருவரிடம் போராட்டக்காரர்கள் கடிதம் ஒன்றை கையளித்தனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு ரெலோ தலைவர் செல்வம் வாழ்த்து

மாண்புமிகு நரேந்திர மோடி
தலைவர் பாரதீய ஜனதா கட்சி
பிரதம மந்திரி
இந்தியா

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்கள்

இந்திய நாட்டின் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுடைய கட்சி நாடு தழுவிய ரீதியில் பெற்ற வெற்றிக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

தங்களின் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்தும் மூன்றாவது தடவையும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை பெற்று ஆட்சி அமைப்பது தங்கள் மீது மக்கள் கொண்டுள்ள அதீத நம்பிக்கையை பறை சாற்றுகிறது.

தங்களது இந்த வெற்றிக்கு எமது ஈழ மக்கள் சார்பாகவும் நமது கட்சி சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன். தங்கள் அரசியல் பணி தொடர்ந்து சிறக்க எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

செல்வம் அடைக்கலநாதன் பா.உ
தலைவர் – தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Posted in Uncategorized