டயானா கமகேயின் எம்.பி. பதவி பறிபோனது – உயர் நீதிமன்றம் உத்தரவு

டயானா கமகே எம்.பியின் பாராளுமன்ற உறுப்புரிமை பதவியை வறிதாக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி இனி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை டயானா கமகே வகிக்க முடியாது.

ஐக்கிய இராச்சியத்தில் மறைந்த தலைவர் சிறீசபாரத்தினத்தினம் நினைவஞ்சலி நிகழ்வு

1986 சித்திரை 29 – வைகாசி 06 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட எழுச்சித்தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் 300 க்கும் அதிகமான வீரமறவர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் அனைவருக்குமான அஞ்சலி நிகழ்வு ரெலோ பிரித்தானியாகிளை உறுப்பினர்களால் (08.05.2024) நேற்றைய தினம் மாலை 6.00 மணிக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலியும் நினைவுப்பேருரைகளும் நடைபெற்றது.

 

பிரித்தானிய அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு – சஜித்துக்கிடையில் சந்திப்பு

பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்து – பசிபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மேலருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றது.

இலங்கை தற்போது எதிர்நோக்கும் வங்குரோத்து நிலை குறித்து இரு தரப்பினருக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன், இதில் இருந்து விடுபட தாம் மற்றும் தமது குழுவினர் மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விளக்கினார்.

அதேபோன்று தற்போதைய அரசாங்கத்தின் படுமோசமான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, மக்கள் சார் ஆட்சியை எதிர்பார்க்கும், மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழித்து தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்க வேண்டும் எனவும், மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சியை உருவாக்குவதே தனதும் தனது குழுவினதும் நோக்கமாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்து பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மேலர் உள்ளிட்ட தூதுக்குழுவிடம் சுட்டிக்காட்டினார்.

பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இலங்கைப் பிரதானி Humairaa Hatia மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக், முதல் செயலாளர் டொம் சோப்பர் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். மேலும், ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நிரோஷன் பெரேரா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

வட மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஆதரவளிக்க தயார்: நோர்வே தூதுவர் உறுதி!

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ந்து வழங்குவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் (May-Elin Stener), வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸிடம் (P.S.M. Charles) தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான நோர்வே தூதுவர், இன்று (6)வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய போதே, இதனை குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்த முதலீடுகள்

இதன்போது ,வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்ற நடவடிக்கையின் முன்னேற்றங்கள், காணி விடுவிப்பு, கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, கல்வி, இயற்கை சக்தி வளங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், சுற்றுலா வழிகாட்டிகள் போதிய எண்ணிக்கையில் இல்லை எனவும், தங்குமிட வசதிகள் போதுமான அளவு இல்லை எனவும் குறிப்பிட்ட ஆளுநர், சுற்றுலாத் துறையை மேம்படுத்த முதலீடுகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

நோர்வே தூதுவர் உறுதி

கற்றல் செயற்பாடுகள் மற்றும் தொழிற்கல்வியை பெற முடியாது போதும் இளைஞர், யுவதிகள் தொடர்பில் மாற்று வழிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆளுநர் கூறினார்.

விடயங்களை கேட்டறிந்துக் கொண்ட இலங்கைக்கான நோர்வே தூதுவர், வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ச்சியாக வழங்கத் தயார் எனவும், ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

தமிழர்களின் ஒற்றுமையை காட்ட ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்த வேண்டும் – ஜனா எம்.பி

தமிழர்கள் தங்களது ஒற்றுமையை காட்டுவதற்கு இந்த ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்த வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய வளங்களை நினைத்தவாறு வெளிநாடுகளுக்கு கொடுப்பதிலே எனக்கு உடன்பாடு இல்லை. இருந்தாலும் அரசு தற்போதைய பொருளாதார நிலைமை கருதி தேசிய வளங்களை விற்பதும் அல்லது வேறு விதமாக வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டிருப்பதும் வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டுமே ஒழிய இரகசியமாக தாங்கள் நினைத்தவாறு ஜனாதிபதியோ அல்லது சம்பந்தப்பட்ட துறை சார் அமைச்சரோ அல்லது திணைக்களங்களின் தலைவர்களோ முடிவு எடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாட்டின் நிலைமை அருதி அதற்குரிய துறை சார்ந்தவர்களிடம் அனுமதியுடன் அல்லது பாராளுமன்றத்தின் அனுமதியுடன் பொதுநலன் கருதி செயல்பட வேண்டும்.

இந்த நாட்டிற்கும் 2009 க்கு பின்பு தமிழ் மக்கள் மேலும் மேலும் பலவீனமடைத்து ஒரு இக்ட்டான சூழ்நிலையில் நடுச்சந்தியில் திக்கு தெரியாமல் நிற்கும் ஒரு நிலையில், தற்போது இருக்கும் அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளது கொள்கைகளும் ஒன்றாக இருந்தாலும் எங்களுக்குள்ளே பிளவு பட்டு இருப்பது அது எதிரிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.

அந்த வகையில் வடகிழக்கு சிவில் சமூக குழுவானது நேற்றைய சந்திப்பை ஒழுங்குப்படுத்தி ஒரே மேசையிலே தேசியக் கட்சிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த கட்சிகளும் ஒரு சில கட்சிகளையும் அழைத்து ஒரு மேசையில் இருந்தது ஒரு மகிழ்வான தருணமாக இருந்தது. அந்த கூட்டு தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் எதிர்காலத்தில் இந்த கூட்டு ஒரு அரசியல் கூட்டாக தமிழ் மக்களது அரசியல் விடுதலையை, தமிழ் மக்களுக்கு அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு அரசியல் தீர்வை கொண்டு வருவதற்கான கூட்டாக அமையுமாக இருந்தால் உண்மையிலேயே நாங்கள் அனைவரும் சந்தோஷப்படக்கூடிய நிகழ்வாக இருக்கும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை வந்து ஆறு ஜனாதிபதிகள் மக்களால் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார்கள். இதுவரை நேரடியாக தேர்வு செய்யப்படாதவர் அவருக்கு முன்பு 6 ஜனாதிபதிகளில் நாங்கள் விரும்பி இரண்டு ஜனாதிபதிகளை கொண்டு வந்திருந்தோம். ஆனால் நாங்கள் வாக்களித்து ஜனாதிபதியாக கொண்டு வரப்பட்டவர்களும், நாங்கள் விரும்பாத நான்கு பேரும் இந்த நாட்டை ஆண்டு, எங்களுக்கு இதுவரை எதுவுமே செய்யவில்லை. எங்களது இனப்பிரச்சினை தீர்வுக்காக எதுவுமே செய்யவில்லை. அந்த வகையில் இன்னும் இன்னும் நாங்கள் இந்த சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் என்று வாக்களித்து ஏமாறாமல் எங்களது ஒற்றுமையை நாங்கள் காட்ட வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. ஒற்றுமையை காட்டுவது என்பது அவர்களை வழிக்கு கொண்டு வர வேண்டிய ஒரு நிலையாகவும் இருக்கலாம். ஏனென்றால் கட்சிகளும் வடகிழக்கை சேர்ந்த தமிழ் தேசிய கட்சிகள் சிவில் சமூக பிரதிநிதிகள் புலம்பெயர் தேசத்தில் இருக்கும் தமிழ் நலன் விரும்பிகள் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் எந்த ஒரு வேட்பாளருக்கும் 50 வீதத்துக்கு மேலே வாக்கெடுத்து வெல்லக்கூடிய சூழ்நிலை ஒன்று உருவாகாது என்கின்ற நேரத்திலே சில வேளைகளில் எங்களுடன் பேசலாம்.

தற்போது ஜனாதிபதியாக வருவதற்கு ஆசைப்பட்டு மூன்று வேட்பாளர்களும் வாக்குகளை எந்த வழியில் பெறலாம் என்று நினைக்கின்றார்கள் தவிர தமிழ் மக்களது புரையோடிப் போய் உள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு முயற்சிக்கவில்லை. ஏற்பட்டிருக்கும் பொருளாதார சூழ்நிலையை காட்டி பிரச்சாரம் செய்கின்றார்களே தவிர இந்த பொருளாதாரச் சூழ்நிலை எப்படி ஏற்பட்டதன் என்ற அடிப்படைத் தன்மையை புரிந்து கொள்வதாக தெரியவில்லை. இந்த நாட்டிலே ஆயுதப் போராட்டம் தொடங்கியதில் இருந்து தான் இந்த நாட்டின் கையிருப்பு இல்லாமல் போனது என்பதை உணராதவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கூறுகின்றார்கள். ஆட்சிக்கு வந்தால் மூன்று வேலை சாப்பாடு தருவேன் என்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க போலீஸ் அதிகாரங்கள் அற்ற 13 வது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கூறுகின்றார். சஜித் பிரேமதாசாவும் ஒரு வெளிப்படுத்தல் தன்மையுடன் பகிரங்கமாக பேசுவதாக இல்லை.

ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி எங்களது ஒற்றுமையை நாங்கள் வெளிப்படுத்த வேண்டிய தேவை தற்போதைய நிலைமையில் தேவைப்பாடாக இருக்கின்றது. அந்த வகையில் அனைத்து தமிழ் கட்சிகளும் வந்திருந்தன.

இலங்கை தமிழரசு கட்சி தங்களுக்குள் ஒரு முடிவு எடுப்பதற்கு இரண்டு கிழமை அவகாசம் கேட்டிருக்கின்றார்கள்.

ஆனால் கடந்த காலங்களில் கூடுதலான பெரும்பாலான தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பொது வேட்பாளர் கருத்தை ஆதரித்திருந்தனர். அந்த வகையில் அவர்களும் ஒரு நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நான் நினைக்கின்றேன். இந்த வகையில் தமிழர்கள் தங்களது ஒற்றுமையை காட்டுவதற்கு இந்த ஜனாதிபதி தேர்தலை நாங்கள் பயன்படுத்த வேண்டும் என்றார்

சஜித் 13-வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராயின் தமிழ் தேசிய பிரதிநிதிகளிடம் கூற வேண்டும் – கோ. கருணாகரம் எம்பி

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 13-வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றார் என்றால் அதனை மனோகணேசன் ஊடாக சொல்லக்கூடாது, தமிழ் தேசியத்திற்கான தமிழ் மக்களது பிரதிநிதிகளாக இருப்பவர்களை அழைத்து அவர் கூற வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரர் சிறிசபாரத்தினம் அவர்களின் 38வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஒன்று பட வேண்டும் எதனை செய்கின்றோமோ யாராவது ஒரு உண்மையாக வாக்குறுதிகளை பெற்று பகிரங்கமாக வேண்டும் என்றால் ஒரு சர்வதேச நாட்டில் சாட்சியுடன் வாக்குறுதிகளை பெற்று வாக்களிப்பதா அல்லது பொது வேட்பாளரை நிறுத்துவதா? என்பதனை நாங்கள் ஒன்றாக முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரெலோவின் மறைந்த தலைவர் சிறி சபாரத்தினத்தின் 38வது நினைவேந்தல்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் சிறிசபாரத்தினம் அவர்களின் 38 ஆவது அஞ்சலி நிகழ்வு அவர் படுகொலை செய்யப்பட்ட இடமான அன்னங்கை, கோண்டாவிலிலும் யாழ் ரெலோ அலுவலகத்திலும் இடம்பெற்றது.

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு தமிழ் பொது அமைப்புகள் தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள் இன்று தீர்மானித்துள்ளனர்

குறித்த ஒன்று கூடல் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தலமையில் காலை 11:10 மணியளவில் வவுனியாவில் ரயில் வீதியில் அமைந்துள்ள RH விருந்தினர் விடுதியில் ஆரம்பமானது.

இதில் முதல் நிகழ்வாக ஆய்வாளர் நிலாந்தனின் அறிமுக உரையை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு உரையடல் இடம்பெற்றது.

இதில் உரையாடலை அகத்தியர் அடிகளார், திருகோணமலை வண. ஆயர் நொயல் இமானுவேல் வேலன் சுவாமிகள் உட்பட 48 சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் வணக்கத்திற்க்கு உரிய மத தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் மரபுரிமைகளைப் பேணும் வகையில் அரசாங்கம் செயற்படவேண்டும் – கூட்டமைப்பின் மே தின பிரகடனத்தில் வலியுறுத்து!

தமிழ் மக்களின் மரபுவழித் தாயகமான வடக்கு கிழக்கில் குடிசனப் பரம்பல்களை மாற்றி சீரழிக்காமல் அந்த மக்களின் மரபுரிமைகளைப் பேணிப் பாதுகாக்கக்கூடிய வகையில் அரசாங்கம் செயற்படவேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்துகின்றது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் இன்று(01) வெளியிடப்பட்ட மே தின பிரகடன தீர்மானத்திலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டின் பொருளாதார வங்குரோத்துக்குக் காரணமாக அமைந்த தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண தவறியமையும் அநாவசியமாக பல்லாண்டுகாலமாக ஒரு யுத்தததை நடத்தியமையும் அந்த யுத்தத்தை நடாத்துவதற்கு அரசாங்கம் உருவாக்கிய பயங்கரவாத தடைச்சட்டம் யுத்தம் முடிவடைந்து பதினைந்து ஆண்டுகள் கழிந்த பின்னரும் இன்னமும் நடைமுறையில் இருப்பதானது மக்களின் அடிப்படை உரிமைகளை தொடர்ந்தும் மீறும் ஒரு செயற்பாடாகும்.

அதேபோல் யுத்தத்தின் காரணமாக காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தொடர்பாக அரசாங்கம் எந்தவித காத்திரமான நடவடிக்கைகளை எடுக்காமையானதும் மிகுந்த விசனத்தை ஏற்படுத்துவதுடன் அரசாங்கத்தின் தமிழர் விரோத போக்கையும் வெளிக்காட்டி நிற்கின்றது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வன்மையாகக் கண்டிப்பதுடன் இவற்றிற்கு உரிய தீர்வினைக் காணவேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

வட கடலில் பாக்கு நீரிணையிலும் மன்னார் வளைகுடாவிலும் தமிழக மீனவர்களுக்கும் ஈழத்து வடபுல மீனவர்களுக்குமிடையில் மீன்பிடி தொடர்பாக தொடர்ச்சியான சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன. ஈழத்து மீனவர்களின் படகுகள் சேதமாக்கப்படுகிறது. வலைகள் அறுக்கப்படுகின்றன.

இலட்சக் கணக்கான பெறுமதி வாய்ந்த சொத்துகள் கடலில் நிர்மூலகாப்படுகின்றன. அதே சமயம் நாளாந்தம் தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படுவதும் நீதிமன்றங்களால் அவர்களது படகுகள் அரசுடையாக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகின்றது. இவை நிறுத்தப்படவேண்டும். இதற்கு ஏற்ப இந்திய அரசும் இலங்கை அரசும் மீனவ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புபட்ட இப்பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு விரைந்து செயற்படவேண்டுமென்று கோருகின்றோம்.

கடந்த சில வருடங்களாக இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவுகளாலும் வரட்சியாலும் சில இடங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகளின் காரணமாகவும் தவறான உரக்கொள்கையினாலும் இப்பொழுது தெங்கு செய்கையில் ஏற்பட்டுவரும் நோய் காரணமாகவும் விவசாயிகள் தமது ஜீவனோபாயத்தையே முற்றுமுழுதாக இழந்து நிற்கிறார்கள்.

மேலும் விவசாயிகளின் விளைச்சலுக்கு உரிய நிர்ணய விலை கிடைக்காமையாலும் விவசாயிகள் மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளனர். எனவே விவசாயிகளுக்கான உரம் மற்றும் கிரிமிநாசினிகளை தேவையான அளவிற்கு மானிய அடிப்படையில் வழங்குவதுடன் விவசாயிகளின் கடன்களை இரத்து செய்ய வேண்டும்.

நுன்நிதிக்கடன் வழங்கும் நிறுவனங்கள் அப்பாவிப் பெண்களிடம் மிகப்பெருமளவிலான வட்டியினை அரவிடுவதோடு நிதியை மீளச் செலுத்துகையில் காலதாமதம் ஏற்படும்பட்சத்தில் அந்நிறுவனங்களினால் பெண்கள் குறிப்பாக குடும்பத்தை தலைமையேற்று நடத்தும் பெண்கள் பாலியல் தொல்லை உட்பட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதுடன் தற்கொலை செய்துகொள்வதற்கும் தூண்டப்படுகின்றனர்.

இத்தகைய நுன்நிதிக் கடன் நிறுவனங்களைத் தடைசெய்வதுடன் உழைக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்குத் தேவையான நிதியை இலகுதவணை அடிப்படையில் வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும் பணவீக்கமும் வாழ்க்கை செலவுக்கு ஏற்ப கொடுப்பனவுகள் இல்லாமையும் தொழிலாளர், விவசாயிகளை பலமடங்கு பாதித்திருக்கிறது. வறுமைக்கோட்டிற்குக் கீழிருப்போர் பல மடங்கு உயர்ந்திருப்பதாக ஐ.நா. புள்ளிவிபரங்கள் கூறுகின்றது.

அரசாங்க வருவாயை கூட்டுவதற்காக வரிகள் அதிகரிக்கப்படுவதும் விலைகள் உயர்த்தப்படுவதும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகிறதே அன்றி, வறிய மக்களின் மூன்று வேளை உணவிற்கு உத்தரவாதமில்லாத நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்குக் கீழிருக்கும் அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் போஷாக்கு உணவு உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் பொதுவான பொருளாதர உதவித் திட்டத்தின்கீழ் நிவாரணம் வழங்கப்படவேண்டும்.

அரசாங்கத்தின் தவறான கொள்கைகளின் காரணமாக நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது மாத்திரமல்லாமல், இலஞ்சம் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடு காரணமாக அரச இயந்திரமும் முற்றுமுழுதாக சீர்குலைந்திருக்கிறது. இவற்றிற்கு எதிரான மக்களின் குரல்களையும் தொழிற்சங்கங்களின் குரல்களையும் பொது அமைப்புகளின் குரல்களையும் அடக்குவதற்காக தொடர்ச்சியாக பல்வேறு அடக்குமுறை சட்டங்கள் இயற்றப்படுகினறன.

இவற்றை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வன்மையாகக் கண்டிப்பதுடன், தொழிற்சங்கங்களும் பொது நிறுவனங்களும் சுதந்திரமாக இயங்குவதற்கும் தமது கோரிக்கைகளுக்காகப் போராடுவதற்கான உரிமைகள் உத்திரவாதம் செய்யப்படவேண்டும்.

அரசாங்கத்தின் நான்காவது தூணாகவும் ஜனநாயகத்தின் காவலனாகவும் திகழ்கின்ற ஊடகத்துறைக்கு எதிராக அரசாங்கம் புதிய புதிய சட்டங்களினூடாக அவற்றைக் கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றது. இணைய தளங்கள், சமூக வலைத்தளங்கள், அச்சு ஊடகம் மற்றும் இலத்திரனியல் ஊடகம் போன்றவை சுதந்திரமாகவும் பக்கசார்பற்றும் இயங்கக்கூடிய வகையிலும் அவற்றின் சுயாதீனச் செயற்பாடுகள் தடையின்றி செயற்படும் வகையிலும் அரச அடக்குமுறைச் சட்டங்கள் அகற்றப்படவேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் என்பது தமிழ் பேசும் மக்களின் மரபுவழித் தாயகமாக இருந்து வருகின்றது. குடிசனப் பரம்பல்களை மாற்றியும் கலாசார ஊடுருவல்களை ஏற்படுத்தியும் அங்கு வாழும் மக்களின் மொழி, கலாசார, பண்பாடு மற்றும் பொருளாதார வளங்களை சீரழிக்காமல் காலாதிகாலமாக வாழ்ந்துவரும் அந்த மக்களின் மரபுரிமைகளைப் பேணிப் பாதுகாக்கக்கூடிய வகையில் அரசாங்கம் செயற்படவேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சு.கவின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச – மைத்திரி தெரிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்ஷ முன்நிறுத்தப்படுவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (1) தெரிவித்தார்.

ஓ.இ. இளங்கரத்னவின் நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டார் என தெரிவித்த திரு.மைத்திரிபால, தனக்குபதவியில் தமக்கு ஆசை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

விஜயதாச ராஜபக்சவுக்கு சுதந்திரக் கட்சி பூரண ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார்.

விஜயதாச ராஜபக்சவுக்கு கட்சியின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகவும், தான் ஒருமுறை ஜனாதிபதியாக பதவி வகித்ததாகவும், பதவிப் பிரமாணம் செய்யும் போது மீண்டும் போட்டியிடப் போவதில்லை என அறிவித்ததாகவும் அவர் கூறினார்.