தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு – பிரதமர் மேற்கொள்ளும் நகர்வுகள்

பொதுத் தேர்தலை தொடர்ந்து நிச்சயமாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

புதிய அரசாங்கத்தில் தீர்வு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்பது அரசியல் வாக்குறுதியல்ல. அது அவர்களின் உரிமை.

எவ்வித மாற்றமுமில்லாமல் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலை நிச்சயம் நடத்துவோம்.

இனப்பிரச்சினைக்கு ஒரு நிலைக்குள் இருந்து கொண்டு மாத்திரம் தீர்வு காண முடியாது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் புதிய சட்ட உருவாக்கம் ஊடாக தீர்வு காணலாம் என்று கருதுகிறார்கள். அதுவல்ல.

அரசாங்கம் செயற்படும் விதத்தை அடிப்படையாகக் கொண்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்கள் அரசாங்கம் தம்மையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதை உணர வேண்டும். அவ்வாறான வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும்.

சட்ட மாற்றத்தின் ஊடாக மாத்திரம் இதனை மேற்கொள்ள முடியாது. நாட்டை நிர்வகிக்கும் கலாசாரம் மாற்றமடைய வேண்டும். அந்த மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்துவோம்.

மொழி உரிமை, அரச நிர்வாக உரிமை பொதுவான முறையில் உறுதிப்படுத்தப்படும். அதனைத் தொடர்ந்து அரசியலமைப்பின் ஊடாக மாற்றங்களை ஏற்படுத்துவோம்.

தீர்க்க முடியாத பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அரசியல், கல்வி, சுகாதாரம், சமூகம் சார்ந்த விடயங்கள் உட்பட அடிப்படைத் தேவைகளில் காணப்படும் பிரச்சினைகள் இனப்பிரச்சினைக்கு ஒரு காரணியாக உள்ளது.

யுத்தம் முடிவடைந்துள்ளது. இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைக்கவிலலை. இடைக்கால அரசாங்கத்தில் பாரியளவிலான மாற்றங்களை மேற்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் அரசாங்கத்தின் செயற்பாட்டு ஒழுங்கு முறையின் ஊடாக காலம் காலமாக காணப்படும் பிரச்சினைகளு்ககு முரண்பாடற்ற வகையில் தீர்வினை பெற்றுக் கொடுப்போம்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னெடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.