தமிழர்கள் தேசமாக ஒன்றிணைய சங்கு சின்னத்திற்கு புள்ளடி இடுவோம் – சபா குகதாஸ்!

செப்டெம்பர் 21 இலங்கை சனாதிபதித் தேர்தலில் ஈழத் தமிழர்களாகிய நாம் தேசமாக ஒன்றிணைந்து தமிழ்ப் பொது வேட்பாளரின் சின்னமான சங்குக்கு நேரே புள்ளடி இட்டு ஒற்றுமையை பலப்படுத்துவோம் என ரெலோவின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தென்னிலங்கை பிரதான வேட்பாளர்களின் வாக்குறுதிகள் தேர்தல் விஞ்ஞாபனங்கள் கடந்த காலங்களை போன்றே தேர்தல் முடிவுற காற்றோடு காற்றாக பறந்து விடும் இதுதான் உண்மை எனவே தொடர்ந்து ஏமாறும் தரப்பாக இல்லாமல் தேசிய இனப்பிரச்சினை இன்றுவரை தீர்க்கப்படவில்லை என்பதை ஜனநாயக புள்ளடியில் காட்டுவோம்.
தென்னிலங்கை சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்கள் அதிகார கதிரையில் அமர்வதற்கான போட்டியிலும் ஒற்றையாட்சி மனோ நிலையிலும் குறியாக உள்ளனர் தேசிய இனப்பிரச்சினையை தீர்க்கப்பட்டால் மட்டுமே நாடு முன்னோக்கி செல்லும் என்ற உண்மையை புரிந்தும் அதற்கான தீர்மானங்கள் எதுவும் இன்றி வெறுமனே பூகோள நாடுகளின் நிகழ்ச்சி நிரலிலே களத்தில் இறங்கியுள்ளனர் சிங்கள வேட்பாளர்கள் ஆகவே தமிழ் மக்கள் தமது அபிலாசையை முன் நிறுத்தி அதன் பேரப்பலத்தை உறுதி செய்ய சங்குக்கு வாக்களிப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.