தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் பிளவடைந்துள்ள தமிழரசுக்கட்சி : ஜெயசிறில் சங்கடம்!

தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதன் ஊடாக தமிழ் மக்களின் எதிர்கால திட்டங்கள் சிறப்பாக செயற்படும் என காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு முக்கியஸ்தருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக்கட்சியினர் இரண்டாக பிரிந்து நிற்பது வடகிழக்கு தமிழர்களுக்கு சங்கடங்களை தருகின்றது.

தமிழரசுக்கட்சி தலைமைகள் தளம்பல் நிலையில் இருந்தமையினால் உறுப்பினர்கள் பல்வேறு வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து வருகின்றார்கள்.

இவ்வாறு பல உருவங்களாக பிரிவதற்கு தமிழரசுக் கட்சி தலைமைகள் விட்ட பிழையே காரணமாகும்.நாங்கள் இந்த அரசாங்கத்தில் எவரையும் நம்ப விரும்பவில்லை.

இங்கு ஒரு இனப்பிரச்சினை இருக்கின்றது.எமது மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். எனவே எதிர்வரும் தேர்தலில் எமது கோரிக்கையானது சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதும் எமது ஒற்றுமையை உலகிற்கு பறைசாற்றுவதுமாகும் என குறிப்பிட்டுள்ளார்.