தினேஷ் குணவர்த்தன தலைமையிலான அணி கதிரை சின்னத்தில் போட்டி!

முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான அணியினர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கதிரை சின்னத்தில் போட்டியிடத் தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவான எம்.பிக்கள் குழுவொன்று நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்திருந்தனர்.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தற்போதைக்கு ஒன்றிணைந்து முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் ஐக்கிய சுதந்திர முன்னணி என்றொரு அரசியல் கட்சியையும் உருவாக்கிக் கொண்டுள்ளனர்.

எனினும், குறித்த கட்சிக்கு இதுவரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், கட்சியின் சின்னமான வெற்றிக் கிண்ணம் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு உரிய கூட்டணி தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும், அதற்கு இதுவரை அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, அடுத்த தேர்தலில் ஐக்கிய மக்கள் முன்னணியின் கீழ் ‘கதிரை’ சின்னத்தில் போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

1994ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரை சந்திரிக்கா அரசாங்கம் இந்தக் கட்சியின் சின்னத்திலேயே தேர்தல்களில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.