Hot News
Home » செய்திகள் » அரசியல் கைதிகள் விவகாரம் சட்டமா அதிபருக்கு அழைப்பு

அரசியல் கைதிகள் விவகாரம் சட்டமா அதிபருக்கு அழைப்பு

அநுராதபுரத்தில் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக மீளாய்வு மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து எவரும் சமுகமளிக்காததன் காரணத்தினால் சட்டமா அதிபருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரச்சாரச் செயலாளர் வேலாயுதம் கணேஸ்வரன் தெரிவிக்கையில்;

அநுராதபுரத்தில் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக 26.10.2017 அன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீளாய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதற்குரிய விசாரணைத் திகதி அறிவிக்கப்படாது அம்மனு நேற்று வழக்கிற்கு எடுத்து கொள்ளப்பட்டது. கைதிகளின் சார்பாக சட்டத்தரணி சந்திரலால் அவர்கள் சமுகமளித்திருந்தார். எனினும் சட்டமா அதிபர் சார்பாக எவரும் சமுகமளிக்கவில்லை. இதனால் மனு தொடர்பில் ஆராய முடியாத சூழ்நிலை உருவாகியது. இது தொடர்பாக நீதிமன்றானது சட்டமா அதிபருக்கு அறிவித்தல் (Notice ) ஒன்றை அனுப்பியுள்ளது.

தொடர்ந்து அடுத்த தவணையினை நாம் நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்திற்கு கேட்டுள்ளோம். ஏனெனில் சட்டமா அதிபர் சார்பாக எவரும் வராத காரணத்தினால் அவர்களுக்கு காலஅவகாசம் ஒன்றினை வழங்கி மேற்படி காலத்தினை குறிப்பிட்டுள்ளோம்.

அத்துடன் கடந்த திங்கட்கிழமை நடந்த வழக்குகளில் எமது மனுவும் வழக்கிற்கு எடுத்து கொள்ளப்படுவது தொடர்பில் பட்டியலில் தெரிவிக்கப்படவில்லை. திங்கள் காலை மேலதிகமாக இணைத்து கொள்ளப்பட்ட பட்டியல் மூலமாகவே எமது மனு வழக்கிற்கு எடுத்து கொள்ளப்பட்டது. எனினும் அது தொடர்பிலும் எந்தவொரு அறிவித்தலும் எமக்கு அளிக்கப்படவில்லை. அதனால் எம்மால் சமுகமளிக்க முடியவில்லை. அத்துடன் சட்டமா அதிபர் சார்பாகவும் திங்கள் அன்றும் எவரும் சமுகமளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து அநுராதபுரத்தில் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து மீளாய்வு மனு தொடர்பான விபரங்களை அவருக்கும் தெரியப்படுத்தியுள்ளேன் என்றார்.