Hot News
Home » செய்திகள் » செல்வம் அடைக்கலநாதனை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்த யசூசி அகாசி

செல்வம் அடைக்கலநாதனை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்த யசூசி அகாசி

ஜப்பானின் உயர் ராஜதந்திரியும் ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகிகளில் ஒருவரும் இலங்கைக்கான ஜப்பானின் முன்னாள் விசேட சமாதான தூதுவருமான யசூசி அகாசி மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகிரா சுகியாமா ஆகியோர் நேற்றைய தினம் (20) பாராளுமன்ற வளாகத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களை சந்தித்துப் பேசினார்கள்.

ஜப்பானின் உயர் ராஜதந்திரி யசூசி அகாசி , ரெலோ உயர்மட்டக் குழுவை ஜப்பானுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.

இச்சந்திப்பில் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் பிரத்தியேகச் செயலாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான சுரேன் குருசுவாமி அவர்களும் கலந்து கொண்டார்.

வடக்கு கிழக்கு அபிவிருத்தியில் ஜப்பான் அதிக முதலீடுகளைச் செய்யுமாறு ரெலோ சார்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு பதிலளித்த ஜப்பானின் உயர் ராஜதந்திரி யசூசி அகாசி, சமாதான காலத்தில் இதற்கு உரிய முயற்சிகளை தாம் மேற்கொண்டதாயும் போர் தொடங்கியதால் அவை தடைப்பட்டு விட்டதாக கவலை தெரிவித்தார். இருப்பினும் எதிர் காலத்தில் வடக்கு கிழக்கு அபிவிருத்தியில் மிகுந்த ஆர்வம் கொள்வதாகவும் உறுதியளித்தார்.

அரசியல் தீர்வு குறித்தும் ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக விரிவாக கேட்டறிந்த ஜப்பானின் உயர் ராஜதந்திரி யசூசி அகாசி , ரெலோ உயர்மட்டக் குழுவை ஜப்பானுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.