Hot News
Home » செய்திகள் » மக்கள் வங்கியை தனியார் மயப்படுத்தும் நோக்கம் கிடையாது

மக்கள் வங்கியை தனியார் மயப்படுத்தும் நோக்கம் கிடையாது

மக்கள் வங்கியை தனியார் மயப்படுத்தும் எந்த நோக்கமும் அரசாங்கத்துக்கு கிடையாதென நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரட்ண தெரிவித்தார்.

மக்கள் வங்கி (திருத்த) சட்டமூலத்தின் மூலம் அவ்வங்கியை தனியார் மயப்படுத்த முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் வங்கி (திருத்த) சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்று (22) நடைபெற்றது. இவ்விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர். சர்வதேச தரப்படுத்தல்களில் மக்கள் வங்கி சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது.இந் நிலையில், இதன் எதிர்கால செயற்பாடுகளை வினைத்திறனாக்கும் நோக்கில் மூலதனைத்தைப் பெற்றுக்கொள்ளவே நாம் இந்த

திருத்தத்தை முன்வைத்துள்ளோம். வங்கியொன்றில் இருக்கவேண்டிய ஆகக்குறைந்த மூலதனம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் வங்கி போதிய மூலதனத்தைக் கொண்டுள்ள போதும், எதிர்காலத்தை கருத்தில்கொண்டு மூலதனத்தை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளோம்.

கடந்த நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னர் வங்கி மயமாக்கல் மிகவும் குறைவாக இருந்தது. எனினும், தற்பொழுது நிலைமை மாறியுள்ளது. வங்கிமயமாக்கல் அதிகரித்திருப்பதால் சந்தையில் அரச வங்கிகளின் பங்கு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

குறிப்பாக கடன்களை வழங்கும் போது அரசாங்க வங்கிகளுக்கான விகிதாசரம் 45 வீதத்துக்குக் குறைவாகவே காணப்படுகிறது. இந்த எண்ணிக்கை எதிர்வரும் பத்து வருடங்களில் 25 வீதத்துக்குக் குறையவும் வாய்ப்பு உள்ளது.

வங்கிகளின் உரிமைகள் பற்றி நாம் எப்பொழுதும் பேசுகின்றோம். எப்பொழுதும் நூற்றுக்கு நூறுவீத உரிமையைக் கொண்டிருக்க வேண்டும் என்றே கூறுகின்றோம்.

நாம் தற்பொழுது கொண்டு வந்திருக்கும் திருத்தத்தினால் வங்கியின் உரிமையில் எந்த மாற்றமும் ஏற்படாது. மக்கள் வங்கி தொடர்பில் காணப்படும் 100 வீத உரிமையை மாற்ற முடியாது.

வங்கிக்கு உரிமை மாத்திரமன்றி சந்தையில் அதற்கான விகிதாசாரம் அவசியமாகும். அரசாங்க வங்கிகளுக்கு சந்தையில் காணப்படும் வீதாசாரத்தை குறைப்பதற்கு இடமளிக்க முடியாது.

1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திறந்த பொருளாதார கொள்கையின் கீழ் வங்கித் துறையை சர்வதேச நாடுகளுக்குத் திறந்து விட்டமையால் தற்பொழுது அரசாங்க வங்கிகள் தொழில்நுட்பம் மற்றும் சேவை வழங்குவதில் முன்னிலையில் காணப்படுகின்றன.

இந்த வங்கிகளின் வினைத்திறன்களை அதிகரிக்காவிட்டால் தனியார் வங்கிகள் முன்னோக்கிச் செல்ல இடம் ஏற்படும். இந்த நிலைமையிலிருந்து அரசாங்க வங்கிகளை காப்பாற்றுவதாயின் அவற்றுக்கான மூலதனத்தை அதிகரிப்பது அவசியமாகும். அரசாங்க வங்கிகளாக இருந்தாலும் அரசினால் அவற்றுக்கு வழங்கக் கூடிய மூலதனம் மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேமிப்பு குறைவாக உள்ளமையும் காரணமாகும். இந்த நிலைமையை நிவர்த்தி செய்ய இரண்டு நடைமுறைகளைப் பின்பற்ற முடியும், ஒன்று கடன் பெறுவது மற்றையது மூலதனத்தை அதிகரிப்பது. இதற்காக மக்கள் வங்கி சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருகின்றோம்.

அங்கீகரிக்கப்பட்ட வங்கியின் மூலதனத்தை ஒரு பில்லியன் ரூபாவிலிருந்து 50 பில்லியன் ரூபாவரை அதிகரிக்கின்றோம். மூலதனத்தை அதிகரிக்க கடன்பத்திரத்தை வழங்கும்போது அரச உறுதிப்படுத்தல் இன்றி வங்கியே சுயாதீனமாகத் தீர்மானிக்கும் அதிகாரம் வழங்கப்படும்.