Hot News
Home » செய்திகள் » நாங்கதான் இந்தியாவின் உண்மையான நண்பர்கள்

நாங்கதான் இந்தியாவின் உண்மையான நண்பர்கள்

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனில், தமிழ் மக்கள் தேசமாக அங்கீகரித்து, புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். நாங்கதான் இந்தியாவின் உண்மையான நண்பர்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்

யாழில் செய்தியாளர்களுடன் பேசிய போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோட்டாபய ராஜபக்சவும், மஹிந்த ராஜபக்சவும் போர்க்குற்றவாளிகள், அவர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமென்பதே தமிழ்மக்களின் நிலைப்பாடு.

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென தமிழ் மக்கள் போராடி வரும் நிலையில், இவ்வாறானவர்களுடன் இந்தியாவின் முக்கியஸ்தர்கள் உறவாடுவது தமிழ் மக்களை வேதனைப்படுத்துவதாகவே அமையும். ராஜபக்சக்களை தாஜா செய்யலாமென இந்தியா கருதக்கூடும். இவ்வாறான நோக்கத்துடன்தான், 2005ம் ஆண்டிடுக்கு பிறகு தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு எதிரான போரிற்கு இந்தியா வேண்டிய உதவியை செய்தது. அவரை தம்முடன் வைத்திருக்கலாமென நம்பிய இந்தியாவிற்கு கடைசியில் கிடைத்தது ஏமாற்றம்தான்.

இந்தியாவின் இராஜதந்திர தவறுதான்  எங்களுடைய பாதுகாப்பு அரணாக இருந்த விடுதலைப்புலிகள் அகற்றப்பட்டு, இந்தியாவின் எதிரியான சீனாவை இந்தியாவின் தென்கோடிக்குள் கொண்டு வந்து விட்டுள்ளது. இது இந்தியாவின் தோல்வி. கடந்த தவறுகளில் இருந்து இந்தியா பாடங்களை கற்றுக்கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். ஒருபோதும் சிங்கள பௌத்த பேரினவாதம், இந்தியாவிற்கு விசுவாசமாக இருக்கப் போவதில்லை. அவர்கள் இந்தியாவின் நிரந்தர எதிரியாகவே இருப்பார்கள். உண்மையில் இந்தியாவின் நிரந்தர நண்பர்களாக இருப்பவர்கள் தமிழர்கள் மட்டும்தான்.

தமிழ் தேசமும், சிங்கள தேசமும் அங்கீகரிக்கப்பட்டு இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால், தமிழ் தேசத்தின் ஆதரவின்றி இந்த தீவில் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை உருவாக்கப்பட்டால், இந்தியாவின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். அதே நேரம் தமிழ் தேசமும் பாதுகாப்பாக வாழக்கூடியதாக இருக்கும்.