Hot News
Home » செய்திகள் » மலையக மக்களை நிலவுடமை சமூகமாக்க ஐ.நா. ஆவன செய்ய வேண்டும்

மலையக மக்களை நிலவுடமை சமூகமாக்க ஐ.நா. ஆவன செய்ய வேண்டும்

மலையக சமூகம் நிலவுடமைச் சமூகமாக மாறுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை ஆவன செய்ய வேண்டுமென தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

காலங்காலமாக ஆண்டு வரும் அரசாங்கங்கள் பெரும்பான்மை மக்களை மாத்திரம் சிறுதோட்ட உடமையாளர்களாக மாற்றியுள்ளன. இந்திய வம்சாவளித் தமிழர்களை தொடர்ந்தும் நாட்சம்பள உழைப்பாளர்களாக கூட்டு ஒப்பந்த பொறிக்குள் சிக்கவைத்துள்ளனர். இதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்க ஐ.நா. முன்வர வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் 24ஆம் திகதிமுதல் 30ஆம் திகதிவரை நியுயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நாவின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இதனையொத்ததாக நடைபெற்றுவரும் உபகுழுக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் அமெரிக்கா சென்றுள்ளார்.

 செனகல் நாட்டுக்கான ஐ.நா அலுவலகத்தில Discrimination based on Work And descent எனும் தொனிப்பொருளில் நேற்று நடைபெற்ற உபக்குழுக் கூட்டமொன்றில் “வம்சாவளி அடிப்படையில் வஞ்சிக்கப்படும் இலங்கை பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள்” எனும் தலைப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இனப் பாரபட்சம் தொடர்பான ஐ.நா அறிக்கையாளர் ரீடா இஷக் (Rita Izak) இலங்கை வந்திருந்த தருணத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணி, அவரை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதன்போது இலங்கையின் சிறுபான்மைச் சமூகமாக மலையகத் தமிழர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஐ.நாவில் அவரது முன்னிலையில் ஏனைய நாட்டு மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களது பிரச்சினைகளை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

 தேயிலைத் தொழில்துறையில் பெரும்பான்மை மக்கள் மாத்திரம் சிறுதோட்ட உடமையாளராக்கப்பட்டுள்ளனர். இந்திய வம்சாவளி தமிழர்களை நாட்சம்பள உழைப்பாளர்களாக கூட்டு ஒப்பந்த பிடிக்குள் சிக்கவைத்துள்ளனர். இது ஒரே தொழில் துறையில் நிலவும் பேதப்படுத்தலாகும் ( Discrimination by work and descend).

இனிவரும் காலங்களில் நாங்கள் நிலவுடைமைச் சமூகமாக மாறுவதற்கு ஐ.நா ஆவண செய்யவேண்டும். ஐ.நா அறிக்கையாளர் ரீடா இஷக் (Rita Izak) இதனை மையப்படுத்தி ஐ.நாவுக்கு அறிக்கையிட வேண்டுகிறேன எனவும் இந்த உபக்குழுக் கூட்டத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நான்கு நிமிடங்கள் மாத்திரம் இவருக்கு உரையாற்ற நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. நான்கு நிமிடங்களில் மலையகச் சமூகத்தின் பிரச்சினையை தெளிவாக எடுத்துரைத்தமைக்காக குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் திலகர் எம்.பியை வாழ்த்தியுள்ளார்.