Hot News
Home » கட்டுரைகள் » சவூதி எண்ணெய்க் குதத் தாக்குதலும் ஈரானுக்கு ஆதரவான சீன நகர்வுகளும்

சவூதி எண்ணெய்க் குதத் தாக்குதலும் ஈரானுக்கு ஆதரவான சீன நகர்வுகளும்

கடந்த சனிக்கிழமையன்று உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளர்களில் ஒன்றான  சவூதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் இரண்டின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானத்தாக்குதல்கள் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இத்தாக்குதல்களால் உலகின் எண்ணெய் நிரப்பலில் 5% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தியில் 50% வீதம் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் சுத்திகரிப்பு நிலையங்களின் தீயை கட்டுப்படுத்துவது மட்டுமன்றி எண்ணெய் உட்கட்டுமானங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்து உற்பத்தியை வழமைக்கு தொண்டு வர சிலவாரங்கள் ஆகலாம் என்று சவூதி தரப்பில் கூறப்பட்டாலும் நிலைமை வழமைக்குத்  திரும்ப அதை விடக்கூடுதலான காலம் தேவைப்படலாம் எனத் துறைசார்ந்த நோக்கர்களும் ஆய்வு நிறுவனங்களும் குறிப்பிடுகின்றனர்.

சவூதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள்  மீதான தாக்குதல்களின் உடனடி விளைவாக பெற்றோலிய விலைகள் அதிகரித்துள்ளன. தாக்குதலுக்கு  முதல்நாள் (13.09.2019) வெள்ளிக்கிழமையன்று உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகெண்ணெயின் (Brent Crude oil) விலை 60 அமெரிக்க டொலர்களாக  இருந்தது. தாக்குதலின் பின்னர்  71 டொலர்களாக  பாய்ச்சல் காட்டியது. எவ்வாறாயினும் இந்த விலை 68 டொலர்களாக மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. 2008ம் ஆண்டின் பின்னர் மசகெண்ணெய் விலையில் ஏற்பட்ட  கணிசமான (14.7%) அதிகரிப்பாக இது பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும் மெய் ரீதியில் பெற்றோலிய விலைகளை நோக்கும்போது 40 வருடங்களுக்கு முன்னர் நிலவிய விலைகளுடன் ஒப்பிடுகையில் ஒரு பீப்பாய் மசகெண்ணெயின் விலை குறைவாகவே இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.

நிரம்பல் சடுதியாக வீழ்ச்சியடைந்தால் மசகெண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள இவ்வதிகரிப்பு தவிர்க்க முடியாத ஒன்றுதான். ஆயினும் இவ்விலை அதிகரிப்பானது எவ்வளவு காலத்திற்கு நீடித்திருக்கும் என்பதை சரியாகக் கூற முடியாது. மசகெண்ணெயின் மீதான கேள்வி மற்றும் நிரம்பலில் ஏற்படும் சீராக்கங்களே அதனைத் தீர்மானிக்கும். ஆரம்பத்தில் விலை துரிதமாக அதிகரித்து தற்போது படிப்படியாக வீழ்ச்சியடைந்து வரும் போக்கானது இவ்விலை அதிகரிப்பு தற்காலிகமானது என்பதையும் அதிக காலத்திற்கு நீடித்திருக்காது என்பதையும் வெளிப்படுத்துகின்றது. தாக்குதல் இடம்பெற்ற உடன் ஏற்பட்ட பீதி காரணமாக விலைகள் சடுதியாக அதிகரித்தபோதும் உண்மைத் தகவல்கள் வெளிவரும்போது படிப்படியாக குறைவடையத் தொடங்கின.

கடந்த பத்து வருடங்களில் உலகின் எண்ணெய் உற்பத்தியில் வெனிசுவேலா நாட்டின் எண்ணெய் உற்பத்தி வீழ்ச்சியடைந்தமை, ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் காரணமாக  வீழ்ச்சி ஏற்பட்டது. எனினும் இவ்வீழ்ச்சி காரணமாக பெற்றோலிய விலைகள் அதிகரிக்கவில்லை. அதற்கு காரணம் உலகளாவிய ரீதியில் இதே காலப்பகுதியில் பெற்றோலியப் பொருள் மீதான கேள்வியும் குறைவடைந்தமையாகும். அது மட்டுமன்றி 1950கள் தொடக்கம் இற்றைவரை பல்வேறு காரணங்களால் மசகெண்ணெய் உற்பத்தி தடைப்பட்டு வந்துள்ளது. பின்வரும் அட்டவனை அதனை வெளிப்படுத்துகிறது.

ஒருநாளில் இழக்கப்பட்ட மசகெண்ணெய் உற்பத்தி பீப்பாய்களில்

*1956 – 1957 சுயெஸ்கால்வாய் நெருக்கடி 2 மில்லியன்
*1967 – ஆறு நாள் யுத்தம் 2 மில்லியன்
*1973 -1974 அரபு – இஸ்ரேல் யுத்தம்  4.3 மில்லியன்
*1978 -1979 ஈரானியப் புரட்சி 5.6 மில்லியன்
*1980 -1981 ஈரான் ஈராக் யுத்தம் 4.1 மில்லியன்
*1990−1991 குவைத் மீதான ஈராக்கிய ஆக்கிரமிப்பு 4.3 மில்லியன்
*2000 – ஈராக்கின் எண்ணெய் ஏற்றுமதி தடை 2.1 மில்லியன்
*2002−2003 வெனிசுவேலாவின் பெற்றோலிய வேலை நிறுத்தம் 2.6 மில்லியன்
*2003 – ஈராக்கிய யுத்தம் 2.3 மில்லியன்
*செப்டெம்பர்  2019 சவூதி மீதான ஆளில்லா விமான தாக்குதல் 5.7 மில்லியன்

எவ்வாறாயினும் அமெரிக்காவும் சவூதியும் ஒரு தரப்பாகவும். ஈரான் மற்றொரு தரப்பாகவும் முரண்பாடுகளை வளர்த்து பிராந்தியத்திலும் உலகளாவிய ரீதியிலும் கூர்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தற்போதைய சூழ்நிலையில் இப்பிரச்சினையை ஆபத்தான மற்றும் அவசரமான ஒரு பிரச்சினையாகவே நோக்க வேண்டியுள்ளது.

பெற்றோலிய விலைகளை ஸ்திரப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா தனது கையிருப்பில் உள்ள மசகெண்ணெய் ஒரு பகுதியை சந்தைக்கு விட தீர்மானித்துள்ளது. அமெரிக்காவில் 644.8 மில்லியன் பீப்பாய்கள் கையிருப்பில் உள்ளன. அதற்கு மேலதிகமாக சுமார் 416.1 மில்லியன் பீப்பாய்களை வணிக ரீதியிலான கிடங்குகளில் சேமிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் சவூதி அரேபியாவும் 188 மில்லியன்  பீப்பாய்களை  கையிருப்பில் வைத்துள்ளது. அத்தோடு மிகப்பெரிய பெற்றோலிய வாடிக்கையாளராகிய சீனா மூன்று வாரங்களுக்கு தேவையான மசகெண்ணெயை கையிருப்பில் வைத்துள்ளது. பெற்றோலிய உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஏனைய நாடுகளிலும் கையிருப்புகள் பேணப்பட்டு வருவதானால் தற்போதைய விலை அதிகரிப்புகள் வெகு காலத்திற்கு நீடிக்காது என்றே நம்பப்படுகிறது.

கடந்த இரண்டு வருடங்களில் நாளொன்றுக்கு இரண்டு மில்லியன் பீப்பாய்கள் வீதம் மசகெண்ணெய் உற்பத்தி வீழ்ச்சியடைந்த போதிலும் (வெனிசுவேலா மற்றும் ஈரான் பிரச்சினைகள் காரணமாக) பெற்றோலிய விலைகளில் அதிகரிப்பு ஏற்படவில்லை என்பது இதற்கு நல்ல உதாரணமாகும்.

அதேபோன்று 2008ம் ஆண்டின் பின்னர் உலகப்பொருளாதாரம் மெதுவடைந்து வருகிறது. அமெரிக்க நிதி. நெருக்கடி ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி போன்றவற்றில் அமெரிக்க மற்றும் மேற்குலகப் பொருளாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளபடியினால் அவற்றின் வளர்ச்சி வேகங்கள் மந்த கதியடைந்துள்ளன. இது மசகெண்ணெய் மீதான உலகளாவிய கேள்வியில் மந்த நிலையை உருவாக்கியுள்ளன.

உலகின் முன்னணி 10 எண்ணெய் உற்பத்தியாளர்களும் நாளொன்றுக்கு உற்பத்தி (மில்லியன் பெரல்களில்)யும்

ஐக்கிய அமெரிக்கா       17.2 m
ரஷ்யா                            11.5 m
சவூதிஅரேபியா              9.8 m
கனடா                             5.4 m
ஈராக்                               4.7 m
சீனா                               4.0 m
ஐக்கிய அரபு அமீரகம்    3.0 m
பிரேசில்                          2.7 m
குவைத்                          2.7 m
ஈரான்                             2.4 m

மேலுள்ள அட்டவனை உலகில் முன்னணி மசகெண்ணெய் உற்பத்தியாளர்கள் அமெரிக்காவும் ரஷ்யாவும் என்பதைக் காட்டுகிறது. அத்துடன் கனடா மற்றும் சீனாவும் கணிசமான உற்பத்திக்கு பங்களிப்புச் செய்கின்றன. ஆயினும் மசகெண்ணெய் ஏற்றுமதிகளில் மத்திய கிழக்கு நாடுகளே முன்னணியில் உள்ளன. என்பதை மறுப்பதற்கில்லை.

சவூதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கான பொறுப்பாளியாக சவூதியும் அமெரிக்கவும் ஈரானை நோக்கி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன. அவற்றை ஈரான் முற்றாக நிராகரித்தது. எவ்வாறாயினும் முரண்பாடுகள்  முனைப்பு பெறும் வகையிலான  பதற்ற நிலை தொடர்கிறது. ஈரான் மீது அமெரிக்கா ஏற்கெனவே கடுப்பில் உள்ளது. தற்போது இது ஒரு காரணமாக அமெரிக்கா கையில் கிடைத்துள்ளது. ஈரான் மீது மேலும் பொருளாதார அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

மறுபுறம் மேற்படி தாக்குதல்க்ள இடம்பெற பத்து நாட்களுக்கு முன்னர் செப்டெம்பர் மூன்றாம் திகதி Petroleum Economics சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரையொன்றில்  ஈரானின் எண்ணெய், எரிவாயு மற்றும் பெற்றோலியத் துறைகளில் 290 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய சீனா இணங்கியுள்ளதாகவும் அதற்கப்பால் அந்நாட்டின் போக்குவரத்து கைத்தொழில் உட்கட்டுமானங்களில் மேலும் 120 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய இணங்கியுள்ளதாகவும் பதிவு செய்துள்ளது. சீனா ஈரானுக்கு வழங்கும் இந்த உதவி சீனாவின் பட்டி மற்றும் பாதை நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு விரிவாக்கமாகும்.

அத்துடன் ஈரானின் அணுத்திட்டங்களை காரணங்காட்டி அந்நாட்டை தனிமைப்படுத்தி பொருளாதார ரீதியில் முடக்கி தன்முன்னே மண்டியிட வைக்கும் நோக்கில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் ஆக்கிரப்பிப்பு நோக்கிலான வர்த்தக தொழில்நுட்ப மற்றும் இராணுவ நகர்வுகளுக்கு எதிராக சீனா மேற்கொண்ட ‘முகத்தில் அறையும்’ ஒரு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தன்னிச்சையாக விதித்துள்ள தடைகளை மீறி அந்நாட்டுடன் பொருளாதாரத் தொடர்புகளை பேணும் நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் எதிராக இரண்டாம் கட்டத் தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா அச்சுறுத்தி வருகிறது. இவ்வச்சுறுத்தல் காரணமாக இந்தியா ஈரானிடமிருந்தான் மசகெண்ணெய் இறக்குமதியை  நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயிலும் சீனாவின் இப்போதைய முதலீட்டு நடவடிக்கை அமெரிக்காவில் அந்த அச்சுறுத்தல்களை தாம் ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்பதற்கான ஒரு சமிக்​ஞையாகக் கொள்ளப்பட வேண்டும். சீனாவின் இந்நகர்வு காரணமாக தற்போது ஈரான் உற்பத்தி செய்யும் மசகெண்ணெய் முழுவதையும் சீனாவே கொள்வனவு செய்யமுடியும். அவ்வாறு நடைபெறுமாயின் தற்போது ஈரானின் உற்பத்தியாக நாளொன்றுக்கு   200,000 பீப்பாய் மசகெண்ணெய் உற்பத்தியை அதன் பூரண  இயலளவான 4 மில்லியன் பீப்பாய்களாக அதிகரிக்கலாம்.

சீனாவின் பிரதான சக்திவள நிறுவனங்களாகிய CNPC CNOC, SINOPEC போன்றன பங்களிப்பு செய்வதன் மூலம் ஈரானின் மசகெண்ணெய் உற்பத்தியை துரிதமாக அதிகரிக்க முடியும். இந் நடவடிக்கை வெற்றி பெறுமாயின் ஈரானுக்கு வேறு நாடுகளின் சந்தைகள் தேவைப்படாது.

துருக்மெனிஸ்தான் வழியாக  சீனாவுக்கு செல்லும் தற்போது உள்ள எரிவாயுக்குழாய் கட்டமைப்பு ஊடாக ஈரானிய உற்பத்தி எரிவாயுவில் கணிசமான அளவை ஏற்றுமதி செய்யமுடியும் இதே பாதையில் எண்ணெய்க் குழாய்களை அமைப்பதன் மூலம்  மசகெண்ணெய் ஏற்றுமதியை பாதுகாப்பாக மேற்கொள்ள முடியும்.

இதன் மூலம் பொருளாதாரத் தடைமூலம் ஈரானை பணிய வைக்கும் அமெரிக்க மற்றும் மேற்குலக முயற்சிகள் பிசுபிசுத்துப் போகும். எரிபொருள் போக்குவரத்தில் சீனா எதிர்நோக்கும் இடர் அபாய நிலைகளும் கணிசமாகக் குறைக்க முடியும்.

அத்துடன் உலகின் பிரதான பெற்றோலிய இறக்குமதி நாடான சீனா தனது சக்தி வளத் தேவைகளுக்காக அமெரிக்காவின் வளைகுடா கூட்டாளிகளான சவூதி அரேபியா ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியா, புரூணை போன்ற நாடுகளில் தங்கி இருப்பதை கணிசமாக குறைத்துக் கொள்ளலாம். அதற்கு பிரதியீடாக ஈரான் மற்றும் ரஷ்யாவிலிருந்து அவற்றை இறக்குமதி செய்யலாம்.

அமெரிக்காவிலிருந்து சீனாவின் மசகெண்ணெய் இறக்குமதி வர்த்தகப் போரைத் தொடர்ந்து 76% சதவீதத்தால்  வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கும் சீனா எதிர்பார்த்துள்ளது.

எனவே உலகின் பெற்றோலிய சந்தையில் அதன் விலைகளின் எதிர்கால போக்குகளை இப்புதிய நிகழ்வுகளின் கூட்டுத் தாக்கங்களே  தீர்மானிக்கப்போகின்றன. ஈரானை வதைக்கும் நடவடிக்கைகள் அமெரிக்கா எதிர்பார்ப்பது போல அவ்வளவு இலகுவாக இருக்கப்போவதில்லை.

மத்திய கிழக்குக்கு அதிக படைபலத்தை அது அனுப்பினாலும் யுத்தம் ஒன்று ஏற்படுமாயின் அது அமெரிக்காவுக்கே அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். சுறாக்கள் மோதும்போது நெத்தலி மீன்கள் சின்னா பின்னப் படலாம்.  இலங்கையும் நெத்தலியின் நிலையிலேயே உள்ளது. 

கலாநிதி எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை, கொழும்பு பல்கலைக்கழகம்

(தினகரன்)