முல்லைத்தீவு பழையச்செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக நேற்றைய தினம் (21) வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார் .
நீண்டகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கொழும்பு மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்தார்.
இந்த நிலையில் மரணமடைந்த பௌத்த பிக்குவின் சடலத்தை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்துக்கு கொண்டுவந்து இறுதிகிரியைகளை மேற்கொள்வதற்கு இராணுவம் மற்றும் கடற்படை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்து பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரால் நேற்றைய தினம் (21) இரவு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் தடை கோரி முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்ட்டது.
இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சுதர்சன் முன்னிலையில் இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தது . இதன்படி 23 .09.2019 நாளை காலை 9 மணிக்கு விகாரை தரப்பினரையும் பிள்ளையார் ஆலய தரப்பினரையும் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் நாளையதினம் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றால் கட்டளை ஒன்று ஆக்கும்வரை குறித்த பௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ எரிக்கவோ முடியாது எனவும்
அதுவரையான காலப்பகுதியில் பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்தும் விதமாக பொலிஸார் கடமையில் ஈடுபடவேண்டும் எனவும் முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில் இறந்த பௌத்த பிக்குவின் உடலம் பழைய செம்மலை நீராவியடியில் தற்போது வைக்கப்பட்டுள்ளது . சிங்கள மக்கள் சிங்கள மாணவர்கள் பொதுஜன பெரமுன கட்சியினர் உள்ளிட்வர்கள் பௌத்த பிக்குவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொலிஸார் ,விசேட அதிரடிப்படையினர் இணைந்து கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு மேதாலங்கார கீர்த்தி என்ற பௌத்த பிக்கு மிக நீண்டகாலமாக தமிழ் மக்களுக்கு சொந்தமான பழையசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவுடன் குருகந்த ரஜமஹா விகாரை என்னும் பெயரில் விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்து பிள்ளையார் ஆலயத்துக்கு வழிபாட்டுக்கு செல்லும் தமிழ் மக்களுடன் பிரச்சனைகளில் ஈடுபட்டுவந்தார் .
இதன்காரணமாக முல்லைத்தீவு பொலிஸாரால் பௌத்த பிக்கு மற்றும் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தரப்பினருக்கு எதிராக சமாதான சீர்குலைவு ஏற்படுத்தப்படுவதாக தெரிவித்து முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் கடந்த மே மாதம் 6ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
அதாவது பிள்ளையார் ஆலய தரப்புக்கு பிக்குவால் இடையூறு ஏற்படுத்தக்கூடாது இரு தரப்பும் சமாதானமுறையில் தமது வழிபாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ளலாம் . புதியகட்டுமானங்களை மேற்கொள்ளும்போது உள்ளூர் திணைக்கள் பெறப்படவேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது . இந்த தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து கடந்த மாதம் வவுனியா மேல்நீதிமன்றில் பௌத்த பிக்குசார்ப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் பௌத்த பிக்கு மரணமடைந்துள்ளார் .