Hot News
Home » கட்டுரைகள் » தமிழர் பொருளாதாரமும் உரிமை வென்றெடுப்பும்.

தமிழர் பொருளாதாரமும் உரிமை வென்றெடுப்பும்.

தமிழினத்தின் இருப்பை நிலைநிறுத்தவும் அதன் இன உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் தமிழர்கள் சார்ந்த தமிழர்களுக்கே உரித்தான சுய பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்புதல் மிக மிக அத்தியாவசியமான தேவையாகும்.

நில உரிமைகள் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அதே போல அந்த நிலத்தில் உள்ள அந்த இனத்தின் குடிப்பரம்பலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குடிப்பரம்பல் சிதைக்கப்படுகிறது என்றால் அப்போது அந்த் இனத்தின் நில உரிமை மெல்லமெல்ல இழக்கப்படுகிறது அல்லது பறிக்கப்படுகிறது என்றே மறைமுக கருத்தாகும்.
ஆகவே நிலங்களையும் தக்க வைக்க வேண்டும் என்றால் குடித்தொகைப் என்பது பேணப்பட‌ வேண்டும், அந்த குடித்தொகை பரம்பலினை பேணுவதற்கு தமிழர்களுக்கு உரித்தான மிகவும் வலுவான சுய பொருளாதாரம் ஒன்று காணப்பட வேண்டும். அந்த சுய பொருளாதாரம் இன்று என்றுமில்லாதவாறு தமிழர் பிரதேசங்களில் சிதைக்கப்பட்டு இருக்கிறது.
வெறுமனே வெளிநாடுகளில் மட்டும் தங்கி வாழுகிற புலம்பெயர் தேசத்து பணங்களினை நம்பி வாழ்கிற ஒரு துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். வடக்கு-கிழக்கில் காணப்படுகிற ஆடம்பரம் மிக்க வீடுகள், கடைகள், மற்றும் சொத்துக்கள் என்பன பெரும்பாலும் புலம்பெயர் தேசத்தில் உள்ள உறவினர்களின் பங்களிப்பினால் உருவாகியவையாகும். அவர்களது அந்நியச்செலாவணி மூலமான அபிவிருத்தியினை நாங்கள் மதிப்பளிக்கும் பட்சத்திலும் இனிவரும் காலங்களில் புலம்பெயர்ந்து வாழுகின்ற அவருடைய வாரிசுகள் மூலம் அந்த அந்நியச்செலாவணி இங்கே இலகுவாக கிட்டுமா என்பது கேள்விக்குறி.
எனவே தமிழர்களுக்கு உரித்தான நீடித்த நிலைத்த (sustainable economic development) ஒரு தற்சார்பு பொருளாதாரம் ஒன்று வடக்கு கிழக்கில் தமிழர் பிரதேசங்களில் கட்டியெழுப்பப்பட வேண்டும். இனப் பரம்பலை அதன் மூலம் நில அபகரிப்புக்களினை கட்டுப்படுத்தவும், உரிமைகளை வென்றெடுப்பதற்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு அடிப்படைக் காரணியாக அமைகிறது.

தமிழர் பிரதேசங்களில் சொல்லிக் கொள்ளக்கூடிய அளவுக்கு எந்தவிதமான உற்பத்திகளும் இல்லை. எந்தவிதமான கைத்தொழில் பேட்டைகளும் இல்லை, எந்தவிதமான தொழிற்சாலைகளும் இல்லை, எந்த விதமான பெரியளவிலான சுயாதீன தொழில் வழங்குனர்கள் இங்கே இல்லை, ஆனால் இங்கு வளங்கள் மட்டும் அதிகமாக காணப்படுகிறது. நிலவளம் அதிகமாக காணப்படுகிறது, மனிதவளம் அதைவிட மிஞ்சியதாக காணப்படுகிறது. இங்கே மனித வளங்கள் உரிய வேலை வாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள் இல்லாமல் வெறுமனே வெளிநாடுகளுக்கு மட்டும் இடம்பெறும் ஒரு மனித வளமாக‌ காணப்படுகிறது.
தமிழர் சமுதாயம் மனிதவள முகாமைத்துவம், சுய பொருளாதார மேம்பாடு என்பவற்றில் இன்று தோல்வி கண்டிருக்கிறது. தமிழர்களுக்கே உரித்தான வலுவான‌ சுய பொருளாதாரமும் கட்டியெழுப்பப்பட்டாலே அதனூடாக‌ குடித்தொகை பரம்பலும் மேம்படும். அதன்மூலம் உரிமைகளினை வென்றெடுக்க அது பேரம் பேசுதலுக்கு தவிர்க்க முடியாத காரணியாகிவிடும். எனவே இனியாவது தமிழர்களின் சுய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உரிய தரப்புக்கள், தமிழ் தலைமைகள், புலம்பெயர் அமைப்புக்கள், முதலீட்டாளர்கள் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும்.

தமிழர் பொருளாதாரம் இன்று எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை ஒரு சிறிய உதாரணம் மூலம் சுட்டிக்காட்டலாம்.
அண்மையிலே கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்டஊரட‌ங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு அரசினை விட உள்ளூரில் உள்ள நிதியாளர்கள் ,கொடையாளர்கள், புலம்பெயர் தேசத்திலுள்ள உறவுகள், நண்பர்கள் போன்றோருடைய நிதி பங்களிப்பின் மூலம் பெருமெடுப்பிலான நிவாரணப் பணிகளை அவர்கள் செய்து காட்டி இருந்தார்கள்,சாதித்திருந்தார்கள். உண்மையிலேயே இது பாராட்டத்தக்கதாக இருந்தாலும் அதன் பின் மறைந்து இருக்கிற தமிழர் தற்சார்பு பொருளாதாரம் பற்றி சற்று சிந்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்த நிவாரண பொதிகளில் உள்ளடக்கப்பட்ட பொருட்களில் எவ்வளவு நிதி தமிழர்களிடமே போய்ச் சேர்ந்தது என்பதை ஒருகணம் திரும்பிப் பார்க்க வேண்டும். ஒரு ஆயிரம் ரூபா அல்லது இரண்டாயிரம் ரூபா கொண்ட நிவாரணப் பொதியிலே பொதி செய்யப்பட்ட அரிசி,ப‌ருப்பு, சீனி, மா, தேயிலை, பால்மா, சோயா ,பனடோல் போன்ற பொருட்கள் அதிகம் உள்ளடக்கப்பட்ட பொருட்களாக இருந்தது.
இதிலே இந்த பொருட்களை கொள்வனவு செய்தவர்கள் நாங்கள், அதை விநியோகித்தவர்களும் நாங்கள், எனவே கொள்வனவாளர்களாகவும், அதை விநியோகிக்கவும் அந்த நிவாரண பணியை மேற்கொண்ட ஒரு மன சந்தோஷத்தில் தமிழர்கள் நாங்கள் இருக்கிறோம், ஆனால் அந்த கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களில் பெரும்பாலும் எல்லா பொருட்களுமே தமிழர்களின் உற்பத்தி அல்லாத பொருட்களாக காணப்படுகிறது. அரிசி பெரும்பாலும் தமிழர் பிரதேசங்களில் விளைவிக்கப்பட்ட ஒரு பொருளாக இருக்கலாம், ஆனால் அது கூட பெரும்பாலும் தமிழர் பகுதிகளுக்கு அப்பால் விளைவிக்கப்பட்ட உற்பத்தி பொருளாகவே அமைந்துவிட நிறையவே சந்தர்ப்பங்கள் இருக்கிறது.
பொதி செய்யப்பட்ட எத்தனையோ மில்லியன் கணக்கான நிவாரண பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அதிலே கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களில் எவ்வளவு பணம், எவ்வளவு பொருளாதாரம் எங்களுடைய தேசத்துக்கு உள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறது என்றால் விடை பூச்சியமாக வரக்கூடும், இல்லை மைனஸ் ஆக கூட வரலாம்.
ஆகவே தமிழர்கள் இன்றும் கொள்வனவாளர்களாக மட்டுமே தான் இருக்கிறார்களே தவிர இன்னும் சொல்லிக் கொள்ளக்கூடிய உற்பத்தியாளர்கள்களாக‌ வளரவில்லை. இப்படி நிலைமை இருக்க தென்னிலங்கைக்கே எல்லா வருமானங்களையும் தென்னிலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்துக் கொண்டிருக்க எங்களுடைய தற்சார்பு பொருளாதாரம் எவ்வாறு கட்டியெழுப்பப்பட வேண்டும்.என்பதை நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

போர்க் காலங்களில் இருந்த தமிழருடைய சுய பொருளாதாரம் ஒரு வலுவான நிலையில் இருந்தது. அது குடும்பங்களை கொண்டு நடத்தக் கூடியதாக இருந்தது. கிடைக்கப்பெற்ற வருமானங்களின் மூலம் அதாவது அந்த காலங்களில் பெண்கள் பெரிதும் வேலைக்குப் போகாத காலங்களில் ஒரு குடும்பத்தலைவர் உடைய வருமானத்தில் தன்னிறைவு கண்ட காலம். ஆனாலும் தேவைகள் அதிகம் ஆனபோதிலும் இருவர் வேலைக்கு போன பொழுதிலும் இன்னும் நிறைவடையாத கடன்கள் நிறைந்த‌ ஒரு பொருளாதாரக் கட்டுமானம் கொண்ட வாழ்க்கையை தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருப்பது துர்பாக்கியமான‌ விடயம்.

அத்தோடு தென்னிலங்கையிலிருந்து இங்கே அதிகமாக கிளைபரப்பி பரந்து கிடக்கிற லீசிங் கம்பனிகளும் கடன் போர்வையிலே மக்களினுடைய வியர்வையையும், இரத்தத்தையும் சுரண்டுகிற பல கம்பெனிகள் இங்கு வேரூன்றி இருக்கின்றன. அவற்றின் மூலமும் நம்மவர்களின் உழைப்புகள் வட்டியாக‌ உறிஞ்சப்படுகின்றன, அந்த நிதிகள், பொருளாதாரங்கள் இங்கிருந்து தென்னிலங்கைக்கு நகர்த்தப்படுகிறது. ஒட்டுமொத்தமாக பார்ப்போமேயானால் இவ்வாறு எந்தவிதமான சுய பொருளாதாரமும் இல்லாமல் திட்டமிடலும் இல்லாமல் தமிழினம் எங்கே போகிறோம் என்றே தெரியாது நகர்ந்தே போய்க்கொண்டிருக்கிறது அகல பாதாளம் நோக்கி…

இங்கு நிலவளம் நிறையவே இருக்கிறது, மனிதவளம் நிறையவே இருக்கிறது ஆகவே விவசாய உற்பத்திகளை பெருக்கலாம், வேறு உற்பத்தி தொழிற்சாலைகளை நிறுவலாம் ,பல வேலைவாய்ப்புகளை உருவாக்கி எங்களுடைய இளைஞர்கள் வெளிநாட்டுக்கு குடிப்பெயர்வதை நிறுத்தலாம், இவற்றையெல்லாம் செயற்படுத்தி கைவிடப்பட்ட தமிழர் நிலங்களில், பறிபோகும் நிலங்களில் குடிப்பரம்பலை ஏற்படுத்தலாம், அதன் மூலம் ஒரு இனப் பரம்பலை கட்டியெழுப்பி அந்த பொருளாதார வளர்ச்சியின் ஊடாக எங்களுடைய நிலங்களை நாங்கள் பறிபோகாது பாதுகாத்து கொள்ளலாம். பின்னர் அதனூடாக இலகுவாக ‌உரிமைகளை வென்றெடுக்கலாம்.
எந்த விதமான சுய பொருளாதார கட்டியெழுப்பலும்,கொள்கைகளும், எதிர்காலம் பற்றிய பொருளாதார புரிந்துணர்வு திட்டங்களும் இல்லாமல், தமிழர்களின் குடிப்பரம்பலை பேணாமலும், இளைஞர், யுவதிகளின் குடிப்பெயர்வை நிறுத்தாமலும் வெறுமனே உரிமை உரிமை என‌ வெற்றுக் கோஷங்களை மட்டும் வைத்துக் கொண்டு எதையும் சாதிக்க முடியாது என்பதை முதலில் தமிழினம் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே தமிழர்களுக்கே உரித்தான சுய பொருளாதார கட்டுமான அபிவிருத்தி ஒன்றை இங்கு பலப்படுத்தி அதன் ஊடாக இனப்பரம்பலையும், குடிப்பரம்பலையும் விஸ்தரித்து எங்களுடைய நிலங்களை நாங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாத்து உரிமைகளை வென்றெடுக்க அடுத்த தலைமுறை வழி நடத்தப்படவேண்டும்.
அது காலத்தின் கட்டாயம் என்பதை அனைத்து தமிழர் தரப்பும் உணர்ந்து விரைவாக செயற்பட வேண்டும்.

கு.மதுசுதன்

உறுப்பினர்,நல்லூர் பிரதேச சபை.