யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தால் இரவோடிரவாக இடித்து அழிக்கப்பட்டமைக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரதான நுழைவாயிலுக்கு வெளிப்புறத்தில் நேற்றைய தினம் ஆரம்பித்த தீர்வு கிடைக்கும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை(10) இரண்டாவது நாளாகவும் நடைபெற்று வருகிறது.
இன்று மதியம் மாணவர்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம்அடைக்கலநாதன்,வலி கிழக்கு தவிசாளரும், யாழ் மாவட்ட ரெலோ அமைப்பாளர் நிரோஜ், ரெலோ இளைஞர் அணி செயலாளர் சபா குகதாசன், யாழ் மாநகரசபை துணை முதல்வரும் ரெலோ யாழ் மாவட்ட பிரதி அமைப்பாளர் ஈசன், ரெலோ நல்லூர் பிரதேச அமைப்பாளர் மதுசூதனன் ஆகியோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்குத் தமது முழுமையான ஆதரவைத் தெரிவித்தனர்.
அத்துடன் அவர்கள் அனைவரும் போராட்டம் மேற்கொண்டுள்ள மாணவர்களைச் சந்தித்தும் கலந்துரையாடினர்.