யாழ். பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டமைக்கு கண்டத்தை வெளியிடும் வகையில் இன்று வடக்கு,கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அனைத்து தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் இணைந்து அழைப்பு விடுத்திருந்தன.
அந்தவகையில், வடக்கு, கிழக்கு பகுதிகளில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, குறித்த ஹரத்தாலுக்கு முஸ்லிம் சமூகத்தினரும் தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.
வவுனியா
வவுனியா நகரில் சில வியாபார நிலையிங்கள் கொவிட்-19 தொற்றுகாரணமாக ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில் ஏனைய வியாபார நிலையங்கள் பொதுச்சந்தை, மருந்தகங்கள், உணவகங்கள் என அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. நகரை அண்டிய பகுதிகளான பூந்தோட்டம், குருமன்காடு கோவில்குளம் போன்ற இடங்களில் அனைத்து வியாபார நிலையங்களும் முழுமையாக மூடப்பட்டிருந்தது.
அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் மாத்திரமே போக்குவரத்தில் ஈடுப்பட்டிருந்தன.
வங்கிகள் மற்றும் அரச நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்த போதும் பொது மக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. அத்தோடு பாடசாலைகள் நீண்ட இடைவெளிக்கு பின் ஆரம்பிக்கப்பட்ட போதும் மாணவர்களின் வரவு மிக மிக குறைவாக இருந்தமையால் பாடசாலைகளின் செயற்பாடுகளும் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன.
முல்லைத்தீவு
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு முள்ளியவளை புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் விசுவமடு உடையார்கட்டு மாங்குளம் மல்லாவி துணுக்காய் பாலிநகர் பாண்டியன்குளம் உள்ளிட்ட நகர் பகுதிகள் மற்றும் அதனை அண்டிய அனைத்து பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டு ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தங்களுடைய போக்குவரத்து சேவைகள் அனைத்தையும் முற்றாக நிறுத்தி இந்த ஹர்த்தாலுக்கு தங்களுடைய பூரண ஆதரவை வழங்கி வருகின்றனர். மாவட்டத்தில் அரச பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வருகின்ற அதேவேளை பாடசாலைகள் இயங்கினாலும் மாணவர்களின் வரவு குறைவான நிலை காணப்படுவதை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் நகர்ப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாக காணப்படுவதோடு அரச திணைக்களங்களும் வங்கி சேவைகளும் இடம் பெற்று வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் புரண ஹர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள முஸ்ஸீம் மக்கள் ஹர்த்தாலுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.
தனியார் போக்குவரத்து சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டது.மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்லவில்லை.
மன்னார் நகரில் உள்ள பொதுச் சந்தை, மருந்தகங்கள், உணவகங்கள் என அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.
மேலும் அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் வழமை போல் சேவையில் ஈடுபட்டதோடு அரச திணைக்களங்கள் வழமை போல் செயல் பட்டது.
மேலும் பாடசாலைகள் நீண்ட இடைவெளிக்கு பின் ஆரம்பிக்கப்பட்ட போதும் மாணவர்களின் வரவு குறைவாக காணப்பட்டது. இதனால் இன்றைய தினம் மன்னார் மாவட்டம் முழுமையாக முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு
ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. கொரோனா அச்சுறுத்தலால் ஏற்கெனவே வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றபோதிலும் திறப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களும் மூடப்பட்ட நிலையிலேயே காணப்பட்டன.
மட்டக்களப்பு, காத்தான்குடி, வாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி, கொக்ட்டிச்சோலை உட்பட பல நகரங்களிலும் கடைகள் பூட்டப்பட்டிருந்ததுடன், அனைத்து அலுவல்களும் ஸ்தம்பித்திருந்தன. போக்குவரத்துச் சேவைகளும் இடம்பெறவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
சில பாடசாலைகள் நடைபெறுகின்றபோதிலும் மாணவர்களின் வரவு மிகவும் குறைவான நிலையிலேயே இருந்தது.
இந்நிலையில், யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த வெள்ளிக்கிழமை இடித்தழிக்கப்பட்ட நிலையில் , மீண்டும் அதே இடத்தில் தூபியினை நிறுவும் நோக்குடன் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராசாவினாலும் பல்கலைக்கழக மாணவர்களினாலும் நினைவுக்கல் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.