Hot News
Home » செய்திகள் » இலங்கையில் தொடரும் தாதியர் போராட்டம்! 200 சத்திரசிகிச்சைகள் நிறுத்தம்! கெஞ்சுகிறார் அமைச்சர்

இலங்கையில் தொடரும் தாதியர் போராட்டம்! 200 சத்திரசிகிச்சைகள் நிறுத்தம்! கெஞ்சுகிறார் அமைச்சர்

இலங்கையில் தாதியர் அலுவலர்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாதியர் அலுவலர் சம்மேளனத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய இதனை அறிவித்துள்ளார்.
எனினும் கொழும்பு லேடி ரிஜ்வே, பொரல்லை காஸல் பெண்கள் வைத்தியசாலை, டி சொய்ஸா மற்றும் மகரகம புற்றுநோய் வைத்தியசாலை ஆகியவற்றில் பணியாற்றும் தாதியர் இந்த போராட்டத்தில் பங்கேற்கமாட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பளம் உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டம் கடந்த சில நாட்களாக நடத்தப்பட்டு வருகிறது.

இதனால் நாடளாவிய ரீதியாக சுமார் 200 சத்திரசிகிச்சைகளுக்கு தடை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்தப் போராட்டத்தில் இருந்து தமது தொழிற்சங்கம் இன்று முதல் விலகிக் கொள்வதாக பொதுச்சேவைகள் ஐக்கிய தாதியர் சங்க தலைவர் முறுதட்டுவோ ஆனந்த தேரர் அறிவித்துள்ளார்

எனினும் தேரரின் அறிவிப்பால், தமது போராட்டத்துக்கு பாதிப்பில்லை என்று சமன் ரத்னபிரிய குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அப்பாவி நோயாளர்களின் உயிருடன் விளையாடாமல் மனிதாபிமானத்துக்கு மதிப்பளித்து தாதிமார் உடன் கடமைக்குத் திருப்ப வேண்டும் என கேட்டுக் கொண்ட சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க முழு நேரமும் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தாதியர் போராட்டத்தினால் அப்பாவி நோயாளர்களே இதனால் அவதிப்படுகின்றனர். தாதிமார் சங்கத் தலைவர் சங். முரத்தெட்டுவே ஆனந்த தேரர் உட்பட சகல தாதிமார்களும் இதனை உணர்ந்து கடமைக்குச் சமுகமளிக்க வேண்டும். என்று கேட்டுள்ளார்

TELO Media Team 1