Hot News
Home » செய்திகள் » காட்டு யானைகளின் அட்டகாசம்: தாக்குதலுக்குள்ளான வீடுகளை பார்வையிட்டார் அரியம் எம்.பி

காட்டு யானைகளின் அட்டகாசம்: தாக்குதலுக்குள்ளான வீடுகளை பார்வையிட்டார் அரியம் எம்.பி

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச சபைக்கு உட்பட்ட கச்சைக்கொடி கிராமத்தினுள் புகுந்த காட்டு யானைகளால் இரண்டு வீடுகள், தோட்டங்கள் உடைமைகள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நேற்று கிராமத்திற்குள் அட்டகாசத்துடன் உட்புகுந்த காட்டு யானைகள் இரண்டு கிராம வாசிகளின் வீடுகளை அடித்து உடைத்து நாசமாக்கியதுடன் அவர்களது உடமைகளுக்கும் தீங்கு விளைவித்திருக்கின்றன.

படுவான்கரைப் பிரதேசத்தில் யானைகளின் தாக்குதல் என்பது மலிந்த பண்டமாகி விட்டது. இதற்கு பல மட்டங்களில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டபோது அவை அனைத்தும் இன்றும் கிடப்பிலே கிடக்கின்றதுதான் உண்மை.

யானைகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகி இதுவரைகாலமும் இறந்தவர்களுக்கும் உடைமைகள் சேதமாக்கப்பட்டவர்களுக்கும் அவர்களுக்கு உரிய நட்டஈடுகளை வழங்க வேண்டும் என்று கோரியபோது அமைச்சர்கள் அதற்கான வாக்குறுதிகளை பலமுறை வழங்கியும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கபட்டதாக தெரியவில்லை.

நேற்று யானைகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகிய மக்களை சென்று பார்வையிட்டதுடன், அந்தமக்களுக்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என பிரதேச செயலாளரிடமும் கோரிக்கை விட்டிருக்கின்றேன் அவரும் அதற்கான நடவக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

ஆகவே வெறுமனே படுவான்கரை மக்களை பேச்சளவில் மாத்திரம் ஏமாற்றாமல் அவர்களுக்கான உடனடித் தீர்வுகளை எடுப்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்


TELO Media Team 1