Hot News
Home » செய்திகள் » தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளதை உளவாளியான ஜாகீர் உசேன் ஒப்புக்கொண்டார்

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளதை உளவாளியான ஜாகீர் உசேன் ஒப்புக்கொண்டார்

சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேன், தீவிரவாத அமைப்புகளுடன் தமக்கு உள்ள தொடர்புகளை ஒப்புக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சிப் பெற்ற அவர், சென்னை உயர் நீதிமன்றம், டிவி ஒளிபரப்பு கோபுரம், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அமெரிக்க துணை தூதரகம் ஆகியவற்றை தகர்க்க திட்டமிட்டிருந்ததாக சி.பி.சி.ஐ.டி காவல்துறையின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ அமைப்பின் உத்தரவின்பேரில், இந்த இடங்களின் புகைப்படங்களை எடுத்து அனுப்பியதாகவும், அவை தெளிவாக இல்லாததால் மீண்டும் படம் பிடிக்க சென்னை வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுதவிர, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை சென்னைக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், இதற்காக வாடகைக்கு வீடு தேடி வந்ததாகவும் ஜாகிர் உசேன் கூறியுள்ளார்.

தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இதுவரை 6 முறை தமிழகம் வந்துள்ளதாகவும், இறுதியாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னை வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜாகீர் உசேனை 3 நாட்கள் காவலில் எடுத்து கியூ பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் கியூ பிரிவு காவல்துறையினர் அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 நாள் காவல் முடிந்து நீதிமன்றத்தில் நாளை மீண்டும் ஜாகீர் உசேன் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

TELO Media Team 1