Hot News
Home » செய்திகள் » சிறந்த பொழுதுபோக்குகள் இளம் சமுதாயத்தை நேர்வழியில் செல்ல வைக்கும்: சிறீதரன் எம்.பி

சிறந்த பொழுதுபோக்குகள் இளம் சமுதாயத்தை நேர்வழியில் செல்ல வைக்கும்: சிறீதரன் எம்.பி

அண்மையில் யாழ்ப்பாணம் கொக்குவில் ஐக்கிய விளையாட்டுக் கழகம், மானிப்பாய் தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் அமரர் ப.சச்சிதானந்தம் அவர்களின் நினைவாக இ.ச.பே.நாகரத்தினம் சக நிறுவனத்தின் அனுசரணையுடன் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியை நடாத்தியிருந்தது.
இதன் இறுதி ஆட்டம் யாழ்ப்பாணம் கோண்டாவில் இராமகிருஸ்ணா மகா வித்தியாலய மைதானத்தில் பா. பாலவரதன் தலைமையில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதில் பிரதம விருந்தினராக பா.உறுப்பினர் சி.சிறீதரனும், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் த.குருகுலராஜா, நல்லூர் பிரதேசசபை தவிசாளர் வசந்தகுமார் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக ஓய்வுபெற்ற பிரதி கல்விப் பணிப்பாளர் வி.மாணிக்கம், நவாலி மகாவித்தியாலய பகுதித் தலைவர் விக்னேஸ்வரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

விறுவிறுப்பாக நடந்த இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் குருநகர் கார்மேல் போய்ஸ் கழகமும் கொக்குவில் வராதி அம்மன் விளையாட்டுக் கழகமும் மோதின.

இந்த ஆட்டத்தில் வெற்றிக் கிண்ணத்தை குருநகர் கார்மேல் போய்ஸ் கழகம் சுவீகரித்துக் கொண்டது.

நடுவர்களாக நிரோஜன், இராஜேந்திரன் ஆகியோர் கடமையாற்றினர். இந்த சுற்றுப் போட்டியில் பங்குபற்றி தம் ஆற்றலை வெளிப்படுத்திய வீரர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களை வழங்கி கௌரவித்து உரையாற்றி பா.உறுப்பினர சி.சிறீதரன்,

நமது இளம் சமுதாயத்தின் எதிர்கால மேம்பாடு, வளர்ச்சி ஊரில் உள்ள அமைப்புக்கள் கழகங்கள், தனவந்தர்கள் செய்கின்ற இந்த வகையான ஆதரவுகள் மதித்து போற்றப்பட வேண்டியவை.

விளையாட்டோடு இங்கு சச்சிதானந்தம் என்ற ஒரு உயர் மனிதர் நினைவு கொள்ளப்படுகின்றார். நாம் கடந்த வரலாறுகளையும் வரலாற்றுக்குழைத்த மனிதர்களையும் மறந்துவிடக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த களம் அமைந்திருக்கின்றது.

இன்று களியாட்டம் கொண்டாட்டம் என வேறு தீய கலாசாரங்கள் எங்கள் மண்ணில் கொட்டப்படுகின்றன. அதில் நம் இளம் சமுதாயத்தை சேர்ந்த பலரும் ஆபத்தை உணராமல் விழுந்து விடுகின்றார்கள்.

இதன் மூலம் நமது எதிர்கால ஊரும் பண்பாடும் வேறுமாதிரி இருக்க வாய்ப்புக்கள் உண்டு. எனவே இப்படியான விளையாட்டுக்கள் சார்ந்த சிறந்த பொழுது போக்குகள் நமது எதிர்காலத்தின் நேர் வழியில் செல்லும் சந்ததியை உருவாக்க வாய்ப்பளிக்கும் என்றார்




TELO Media Team 1