மக்களுக்காக விடுதலையைப் பெற்றுக் கொள்வதற்காக எமக்குள் இருக்கும் பகைமை உணர்வை மறந்து விட்டு ஒன்றாகச் சேர்வதன் மூலம் தான் இதனை எட்ட முடியும். எமது பாதைகள் வேறாக இருக்கலாம். எமது பயணம் ஒன்றாக இருக்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதரலிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பில் உள்ள டெலோ அலுவலகத்தில் நடைபெற்ற ஸ்ரீசபாரத்தினம் 28 நினைவு தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
எமது தலைவர் அண்ணன் ஸ்ரீ சபாரெட்ணம் சிறப்பான ஒரு தலைமைத்துவத்துடன் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தினை முன்னெடுத்துச் சென்றவர்.
எங்களது போராட்டம் அவரது இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் பயணித்துக் கொண்டிருந்தலும், நாம் இன்னமும் அந்த இலக்கினை எட்டவில்லை. நான் வாழ்க்கையை நேசிக்கின்றேன். என்னிடம் நல்ல சிந்தனைகளும் எண்ணங்களும் இருக்கும் வரை என்று தலைவர் அடிக்கடி கூறுவார்.
ஒவ்வொரு டெலோ போராளிகளும் அந்த காலகட்டத்தில் அந்த சிந்தனையோடும் எண்ணங்களோடும் தான் அவரால் வளர்க்கப்பட்டவர்கள். ஆனால் இறுதியாக ஐந்து விடுதலை இயக்கங்கள் உருவாகி நாம் எங்களுக்குள் ஒற்றுமை இல்லாததன் காரணமாக ஒன்றாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து இயக்கங்களும் ஒன்றாக கூட்டுமுயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். ஆனால் அந்த முயற்சி இன்றுவரை தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றது.
இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பாக அந்த ஒற்றுமை பரிணமித்தாலும் கூட நாம் இன்னும் இந்த ஒற்றுமைக்குள் வரவில்லை என்றுதான் கூற வேண்டும்.
ஸ்ரீ சபாரெத்தினமாக இருக்கலாம், பத்மநாபாவாகவும் இருக்கலாம், பாலகுமாராகவும் இருக்கலாம் எல்லோரும் ஒரு கட்டத்தில் நாங்கள் ஒற்றுமைப் பட்டால்தான் எமது நோக்கத்தினை வெற்றிபெற முடியும் என்று உறுதியாக நம்பி அதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டவர்கள்.
ஆனால் அவை ஒரு கட்டத்தில் தோற்றுப் போயின. நாம் ஆயுத இயக்கங்கள் எல்லோரும் பிரிந்து வேறுபட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பலாபலன்களை நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் என்றுதான் கூற வேண்டும்.
எத்தனையோ மிதவாதக் கட்சிகள் எமது மக்களின் விடுதலைக்காக போராடியிருக்கின்றன. பல போராட்டங்களை நடத்தியிருக்கின்றன. அதே போன்று ஆயுதக் குழுக்களும் பல போராட்டங்களை மேற்கொண்டன. ஆனால் மீண்டும் நாங்கள் விடுதலைப் பயணத்தை தொடர்வதற்கு ஆயுத இயக்கங்களும் மிதவாதக் கட்சிகளும் இணைந்து எமது மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம்.
இலக்கினை அடைவதற்கு நாம் ஒற்றுமைப் படவேண்டியவர்களாக இருக்கின்றோம். சில முரண்பாடுகள் எமக்குள் தவிக்க முடியாததாக இருந்தாலும் கூட நாங்கள் சகல விட்டுக் கொடுப்புகளுக்கும் மனமுவந்து நாங்கள் செயற்படுவதன் மூலமாகத்தான் நாம் எமது விடுதலையை அடைய முடியும்.
ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கிடையிலும் நாம் மனமுவந்து ஐக்கியப் படுகின்ற நிலைமை இல்லாமை மிகவும் மனவேதனைக்குரியது. அந்தவகையில் எமது இயக்கம் ஆயுதக் கட்சிகளையும் மிதவாதக் கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துடன் ஒன்றிணைந்து நடவடிக்கை முன்னெடுப்பதற்கு ஒற்றுமையை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டது. அதற்கு எமது ஊடகவியலாளர்கள் சிலரும் உறுதுணையாக இருந்தமை இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம்.
இவ்வாறான முயற்சியின் முலமே இந்த தமிழ் தேசியக் சுகூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் மட்டக்களப்பின் ஊடகவியலாளர்கள் என்றுதான் கூற வேண்டும்.
அவர்களின் அயராத முயற்சி பல நெருக்கடிகளுக்கு மத்தியில் விடுதலைப் புலிகளோடும் எங்களோடும் இணந்து இப்படிப்பட்ட ஒரு கூட்டமைப்பினை உருவாக்க வேண்டும் என்பதில் அவர்கள் அயராது முயற்சி செய்தார்கள். அதற்காக அவர்கள் தங்கள் உயிர்களை இழக்கவும் நேரிட்டது.
எனவே இந்த இழப்புகளை நாம் ஈடு செய்ய வேண்டுமாக இருந்தால் நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். அந்த இணைவின் மூலமாகத் தான் எமது தலைவர் ஸ்ரீ சபாரெத்தினம் அவர்கள் எமது ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பித்தாரோ, ஒரு விடுதலை இயக்கத்தினை எமது முன்னைய தலைவர்களுடன் சேர்ந்து உருவாக்கினாரோ, அந்த நோக்கத்தை நாம் அடை வேண்டுமாக இருந்தால் நாம் மீண்டும் மீண்டும் ஒற்றுமைப் பட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
ஆனால் அந்த ஒற்றுமை எமக்குள் இல்லை. நாம் எமது மக்களுக்காக விடுதலை ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக எமக்குள் இருக்கும் பகைமை உணர்வை மறந்து விட்டு ஒன்றாகச் சேர்வதன் மூலம் தான் இதனை எட்ட முடியும்.
இதன் மூலம் தான் எமது தலைவரிக் கனவை நனவாக்க முடியும் எமது பாதைகள் வேறாக இருக்கலாம் எமது பயணம் ஒன்றாக இருக்க வேண்டும் என்றார்.