மக்களின் விடுதலை என்ற சிந்தனை மட்டுமே எமக்கு இருக்குமானால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு வலுவான கட்சியாக இருக்கும். இல்லாவிட்டால், தமிழ் தேசியக் கூட்டமைப்பை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது என ரெலோ தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தின் 28 நினைவு தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றுகையில், இந்நாட்டில் தமிழர் பிரச்சனைக்காக முதன் முதலில் உருவாக்கப்பட்ட இயக்கம் என்றால் அது தமிழீழ விடுதலை இயக்கமே அது தங்கதுரை குட்டிமணி போன்ற முன்னனி உறுப்பினர்களால் இயக்கத்தை உருவாக்கினார்கள் என்று சொல்லாம். அதன் பின்பு அவர்கள் சிறை சென்ற போது எங்கள் அண்ணன் தலைவர் ஸ்ரீ சபாரெத்தினம் அவர்கள் அப்பொறுப்புகளை தோள் மீது சுமந்து பல சாதனைகளைப் புரிந்தார்.
போராட்டம் ஒற்றுமையினூடகத்தான் வெற்றி பெறும் என்ற சிந்தனையோடு செயற்பட்டவர் எமது தலைவர். அந்த அடிப்படையிலேதான் ஐந்து மாபெரும் போராட்ட இயக்கங்களின் தலைமைகளை ஒன்று சேர்க்கின்ற பணியை எம் தலைவர் தான் செய்தார். இதற்கு நாங்கள் தான் சாட்சி. ஐந்து தலைமைகளையும் ஒன்று சேர்க்கும் செயற்பாடானது எட்டாக்கனியாக இருந்து பிறகு எம் தலைவரினால் அது கனிந்தது. போராட்ட காலத்தில் எமது தோழமை இயக்கங்கள் சிக்கல்களுக்குள் மாட்டுகின்ற போது நாம் பார்வையாளர்களாக இருக்கவில்லை. அவர்கள் நெருடல்களுள் சிக்குறும் போது எமது அமைப்புதான் அவர்களைக் காப்பற்றியது என்ற வரலாறும் இருக்கின்றது.
எங்களுடைய தலைவர் எம் போராட்டத்தின் அனைத்து அமைப்புகளின் ஒற்றுமையை விரும்பியவர் என்பதற்கு பல உதாரணங்களைக் கூற முடியும். எங்களுடைய ஈழ தேசத்தில் முதன் முதலாக ஒரு தாக்குதல் இடம்பெற்றது என்றால் அது எமது தமிழீழ விடுதலை இயக்கத்தின் தாக்குதலாகத்தான் இருக்கின்றது. அதன்பின் எமது தலைவர்கள் ஒற்றுமை இல்லாத காரணத்தினால் எமது இனத்தின் போராட்ட வரலாறு தற்போது எந்தளவிற்கு இருக்கின்றது என்பதை அந்த ஒற்றுமை இல்லாத காரணத்தால் எங்களுடைய போராட்டம் எத்தகையதாக திசை திருப்பட்டிருக்கின்றது என்பதை நாம் வரலாற்று ரீதியாக உணர முடியும்.
தமிழ் தேசியக் கூட்டமைமப்பு உருவாக்குவதற்கு எங்களுடைய கட்சியின் பங்களிப்பு அளப்பரியது. உண்மையில் கிழக்கின் பத்திரிகையாளர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வரலாறு உருவாகுவதற்கு காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள். அவர்கள் தான் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்காக வித்திட்டவர்கள் இதில் சிவராம், சண்.தவராஜா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
கிழக்கு மண் தான் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கியது. இன்று யார் யாரோ ஏதோவெல்லாம் பேசுகின்றனர் ஆனால் இந்த வரலாற்றை அறிந்தவர்கள் நாம். எங்களைப் பொறுத்த மட்டில் வரலாறு எங்களுக்கு முன் இருக்கின்றது. போராட்ட இயக்கங்களுக்குள் ஒரு ஒற்றுமை இல்லாத காரணத்தால் எங்களுடைய மக்களின் விடுதலை என்பது எங்கே போயிருக்கின்றது என்பதை நாம் உணரக் கூடியதாக இருக்கின்றது.
அது போல தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற கட்சிகள் மெத்தனப் போக்கோடு செயற்பட வேண்டும். எமது மக்களின் விடுதலை எமது மக்களின் சுதந்திரம் எங்களுடைய மக்களின் அழிந்த வாழ்வை மீட்டெடுக்க வேண்டும். என்ற கொள்கையோடு நாங்கள் இருப்போமானால் மக்கள் தான் எங்கள் எஜமானர்கள் என்று செயற்படுவோமானால் எந்தக் கட்சியும் தன்னை பெரிது என்ற எண்ண முடியாது.
ஏனெனில் எங்களுக்கு எமது மக்களின் விடுதலை தான் முக்கியம் ஏனெனில் இன்று அன்றும் விடுதலைக்காகத் தான் போராட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இப்போதும் மக்களின் அரசியல் விடுதலை சம்பந்தமாகத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போராடிக் கொண்டிருக்கின்றது. ஆனால் இது வலுப் பெற வேண்டுமானால் நாம் எமது மக்களின் வாழ்கை என்று ஒன்றுடன் ஒன்று பட வேண்டும். எங்களுடைய தலைவர் அவர் போராட்ட வாழ்க்கையில் ஒரு விடயத்தைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். எமது விடுதலைப் போராட்டம் இந்தியாவுடன் பின்னிப் பிணைந்துள்ளது. உலக நாடுகள் தங்களுடைய நலனைத் தான் முதலில் பார்க்கும் இரண்டாவதுதான் எமது பிரச்சனையைப் பார்க்கும் அது போலத்தான் இந்தியாவும் தன்னுடைய நலன்சார்ந்த பிரச்சனைகள் தொடர்பாக ஜெனீவாவில் தொடர்ந்து எம்முடன் நின்ற இந்தியா இன்று நடுநிலை வகித்தது.
அதை நாங்கள் ஒரு பெரிய விடயமாகப் பேசி இந்தியாவை நாங்கள் புறந்தள்ள முடியாது எங்கள் தலைவரின் தீர்க்கதரிசனமான கருத்தினை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவை நாம் புறக்கணித்து எந்த விடயத்திலும் வெற்றி பெற முடியாது. உலக நாடுகள் கூட எங்களுடைய விடத்தினை மேற்கொள்வதற்கு எமக்கு அருகில் இருக்கும் வளர்ந்து வருகின்ற ஒரு வல்லரசு நாடு என்று இந்தியாவிடம் தான் முதலில் வினவும். எனவே இந்தியா எமக்கு தேவை அதனைப் புறந்தள்ள முடியாது. இந்தியாவில் சரி பிழை இருக்கும் எனவே முடிந்த விடயத்தைக் கருத்திற் கொள்ளாமல் இனிவரும் காலங்களில் அங்கு ஒருவேளை ஆட்சி மாற்றம் இடம்பெறும். ஆட்சி மாற்றம் இடம்பெறுமாயின் அரசியல் சார்ந்த எம் மக்களை மீட்டெடுக்கின்ற ஒரு வாய்ப்பு எமக்கு உருவாகும். இந்தப் போராட்டம் திசை திருப்பப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே. எனவே நாம் இந்தியாவுடன் இணைந்தே எமது மக்களுக்கான அரசியல் தீர்வு எமது மக்களை விடுதலை என்பது தீர்மானிக்கப்படும்.
தமிழீழ விடுதலை இயக்கத்தைப் பொருத்தமட்டில் என்றும் ஒற்றுமையுடன் செயற்படும் நிலைதான் கொண்டிருக்கும். எமது தலைவர் அவர்களின் வழியில் வந்த நாங்கள் அந்த ஒற்றுமையைப் பலப்படுத்துவதற்கு நாம் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்துள்ளோம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பிரச்சனைகள் வருகின்ற போதெல்லாம் தமிழீழ விடுதலை இயக்கம் அந்த ஒற்றுமையைக் காப்பாற்றுவதற்கு பாடுபட்டுள்ளது. அந்தவகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு ஒற்றுமையான கட்சியாக இருக்கின்றது. மக்களின் விடுதலை என்ற சிந்தனை மட்டும் எமக்கு இருக்குமாக இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு வலுவான கட்சியாக இருக்கும். மக்களின் விடுதலையை வென்றெடுக்கக் கூடிய வகையில் நாம் செயற்பட முடியும். இதை விடுத்து மக்கள் எங்களுடைய எஜமானர்கள் அவர்களை துன்பத்தில் இருந்து மீட்க வேண்டும் என்று வெறும் உதட்டளவில் பேசிவிட்டு உள்ளத்தில் வேறொன்றை எண்ணுவோமாக இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினையும் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது.
ஏனெனில் எமது வரலாறுகள் எமக்கு பாடங்கள் தந்துள்ளன வரலாற்றில் சிந்தனையைக் கொண்டு எம் செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என்றால் அந்த அபாயகரமான நிலைமை ஏற்படக்கூடிய நிலைமை வந்துவிடும். இன்று உலகம் பூராகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளைத் தான் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தான் எமக்கு விடுதலைப் பெற்றுத் தருவார்கள் என்று எம் மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்கள். வடக்கு கிழக்கில் ஒரு அரசியல் தீர்வு கிடைக்குமாக இருந்தால் அதை ஒரு இணைந்த வடக்கு கிழக்கினூடாகத் தான் வெற்றிகொள்ள முடியும். மாகாண சபை நடந்து முடிந்த பின்பு எம் மக்கள் மத்தியில் சில கேள்விகள் எழுந்துள்ளது. அது மக்கள் மத்தியில் எழவில்லை. சிலர் அவற்றைத் தூண்டுகின்றனர். அனைவரும் வடக்கு வடக்கு என்று தான் பேசுகின்றனர். கிழக்கைப் பற்றி யாரும் கவலை கொள்வதில்லை என்ற மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்திருக்கின்றன.
உண்மையில் அந்த சிந்தனையை நாம் வித்திடக் கூடாது. கடந்த இறுதி யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசம் வன்னி அதன் அடுத்த படியாக கிழக்குத் தான். வடக்கில் முதன் முறையாக தமிழ் முதலமைச்சர் அவர்கள் கிடைத்துள்ளார். அது ஒரு பெரிய விடயமாகப் பேசப்படுகின்றது. நமது ஒரு துர்பாக்கிய நிலைமை கிழக்கில் ஒரு ஆசனம் எமக்கு கிடைத்திருந்தால் இங்கும் எம் முதலமைச்சர் இருந்திருப்பார். வடக்கில் அதிகம் பாதிக்கப்பட்டமையால் எல்லோரும் அங்கு செல்லும் நிலைமை. ஆனால் எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பினைப் பொருத்தமட்டில் இணைந்து வடக்கு கிழக்கு என்ற கொள்கையிலேயே இருந்து கொண்டிருக்கின்றது.
அந்தவகையில் சில சில தவறுகளை நாங்கள் மறந்தும் விடக்கூடாது எமது மக்களை இணைத்து அணைத்து கொண்டு போகின்ற செயற்பாட்டினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்கின்றது. மாற்றான் தாய் மனப்பாண்மை என்பது யாரிடமும் இல்லை ஆனால் அது கருணா பிள்ளையான் போன்றவர்களாலேயே பேசப்படுகின்றது. ஒரு காலத்தில் தான் தப்புவதற்காக யாழ் மட்டக்களப்பு என்ற பிரதேச முரண்பாட்டைக் இங்கு கொண்டுவந்தார்.
அந்தவகையில் தற்போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை மக்கள் மத்தியில் இருந்து நீக்குவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கைப் பிரித்துப் பார்க்கின்றது என்ற கருத்தை முன்வைக்கின்றார்கள். இரண்டு விடயங்களில் மக்களை உடனடியாக திசை திருப்ப முடியும். ஒன்று பிரதேச வாதம் மற்றையது மதம் சார்ந்த விடயங்கள். ஒவ்வொரு பிரதேசத்திலும் அந்த மக்கள் தங்கள் பற்றைக் கொண்டுள்ளார்கள். அது போல தங்கள் மதங்களில் உளமான பற்றை வைத்துள்ளார்கள்.
தங்கள் மதத்திற்கும் பிரதேசத்திற்கும் ஏதாவது ஏற்படுமாயின் உடனடியாக அவர்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்துவார்கள். அதனால் தான் பல நாடுகளில் மதம் சார்பான பிரச்சனைகளைக் கொண்டுவருவார்கள். அதைத்தான் இன்று பிள்ளையானும் கருணாவும் செய்கின்றனர். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயற்படவில்லை. எமக்கு தேவை எம் மக்களின் விடுதலை அவர்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டியதுதான் எமது நோக்கம்.
நாம் இந்த அரசாங்கத்தினை ஒரு போதும் நம்புவதாக இல்லை பல பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருக்கின்றோம். இப்போது பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வாருங்கள் என்று கூறுகின்றார்கள். இதற்கு முன்னர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தெரிவுக்குழுக்கள் அனைத்தும் குப்பைத் தொட்டியில் போடப்பட்டுள்ள நிலையே காணப்படுகின்றது. தற்போது ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு இதற்கு முன்னும் கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கப்பட்டு அதன் சிபாரிசுகள் தற்போது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
எனவே இந்த அரசு ஒன்றையுமே செயற்படுத்தாது செயற்படுத்துவதற்கான சிந்தனை இந்த அரசிடம் இல்லை என்பதால் தான் நாம் உலக நாடுகளின் கரங்களைப் பற்றினோம். இன்று வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகத்தினை குழப்புகின்ற வகையில் இராணுவப் பிரசன்னம் அதிகரித்துக் காணப்படுகின்றது. எமது மக்களின் வாழ்வாதாரத்தினையும் சிதைக்கின்றனர். சலூன் தொடக்கம் சாதாரண சில்லறைக் கடை வரையில் இராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ளது. எமது மக்களின் நிலங்கள் கால் நடைகளை வைத்துக் கொண்டு பயிர்ச்செய்கை மேற்கொள்வது மட்டுமல்லாது சந்தைப்படுத்தலும் மேற்கொண்டு எமது மக்களின் வயிற்றில் அடிக்கின்றார்கள்.
இச்செயற்பாடுகள் உலகத்தில் எந்த இராணுவத்திலும் இல்லை. எனவே இந்த இராணுவப் பிரசன்னம் என்பதை இல்லாமல் செய்ய வேண்டும். இதனை இந்த அரசாங்கத்திடம் கூறினோம். ஆனால் எந்தப் பிரயோசனமும் இல்லை. அதனால் தான் உலக நாடுகளிடம் தெரிவித்திருக்கின்றோம். நாங்கள் சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று கேட்டிருந்த அடிப்படையில் இன்று அது நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. எனவே உலகில் இருபத்து மூன்று நாடுகள் எம் பிரச்சனையை ஏற்றுக் கொண்டிருக்கின்றன எம்முடன் இருக்கின்றது. எனவே இந்த சந்தர்ப்பத்தை நாம் நழுவ விட்டோம் என்றால் தந்தை செல்வா சொன்னதைப் போன்று எம் மக்களை கடவுள் கூட காப்பற்ற முடியாது. எனவே எங்கள் தலைவர் விட்டுச் சென்ற சிந்தனைகளை தமிழீழ விடுதலை இயக்கம் செயல் வடிவம் காட்டிக் கொண்டிருக்கின்றது.
நாம் எமது தலைவரின் சிந்தனையான ஒற்றுமை எமது மக்களின் விடுதலை எமது மக்களுக்கென்ற ஒரு தேசம் அதற்காக உழைப்பது என்பது தான் எம் தலைவர் எமக்கு விட்டுச்சென்றவை. எங்களைப் பொருத்த மட்டில் எங்கள் மூச்சு எமது மக்களின் விடுதலை. இந்த விடுதலைக்காக எமது இளைஞர்கள் போராளிகள் தியாகிகள் போராடியிருக்கின்றனர் அவர்களை நினைவு கூறுவதால் எந்தப் பயனும் இல்லை. அவர்களின் தியாகத்திற்காகப் போராடும் அமைப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றும் உழைத்துக் கொண்டிருக்கும்.
அது மட்டுமல்லாது எமது மக்களின் பிரச்சனைகள் சர்வதேசத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றது என்றால் அப்பெருமை எமது வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருக்கும் ஊடகவியலாளர்களைத் தான் சாரும் அவர்களுக்கு இன்று சில அழுத்தங்கள் இருக்கும் அவர்கள் நினைத்தால் அரசு பக்கம் சார்பாக எழுதி வசதியாக இருக்கலாம். ஆனால் அவர்கள் அந்த அழுத்தங்களையும் உயிராபத்துக்களையும் பொருட்படுத்தாமல் ஏனெனில் இந்த நாட்டில் சுதந்தரம் என்பது இல்லை சுயமாக கருத்து சொல்லப்படுவது என்பது மறுக்கப்பட்ட ஒரு நாடு.
எனவே அவர்கள் கருத்துகள் சுயமாக சொல்லுகின்ற போது அவர்கள் எதிரியாக கருதப்படுகின்றார்கள். அப்படி நெருக்குதல் இருந்தும் அவர்கள் சுயநலம் இன்றி எமது தேசத்திற்காக எமது தேசத்தின் மக்களுக்காக உண்மைகளை வெளிக்கொணரும் பத்திரிகையாளர்களையும் நான் பாராட்ட மறக்க முடியாது என்றார்.