Hot News
Home » செய்திகள் » மட்டக்களப்பில் சுழல்காற்று, மழையினால் மரங்கள் முறிந்து, வீடுகள் சேதம்!

மட்டக்களப்பில் சுழல்காற்று, மழையினால் மரங்கள் முறிந்து, வீடுகள் சேதம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பதுளை வீதிப் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு வீசிய பலத்த மழையுடன் கூடிய சுழல் காற்றினால் மரங்கள் முறிந்து வீடுகள், படை முகாம் என்பன சேதமடைந்திருப்பதாக ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட சூறைக்காற்றினாலும், பலத்த மழையினாலும் மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டும், வீட்டுக் கூரைகள் காற்றினால் வீசப்பட்டும் உள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.

மட்டக்களப்பு, செங்கலடியிலுள்ள வீடொன்றிலிருந்த பெரிய பலாமரம் வேரோடு சாய்ந்து வீட்டின் மீது வீழ்ந்துள்ளது. எனினும் வீட்டில் சிறு குழந்தைகள் இருந்த போதும் தாங்கள் உயிராபத்தின்றி தெய்வானதீனமாக தப்பி விட்டதாக குடியிருப்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை ஏறாவூர்ப்பற்று பதுளை வீதி, தும்பாலஞ்சோலைக் கிராமத்தில் இருந்த படைமுகாம் ஒன்று பகுதியளவில் சேதமடைந்திருப்பதோடு அங்கு குடியிருப்பாளரின் ஒரு வீடு முழுமையாகவும் மற்றொரு வீடு பகுதியளவிலும் சேதமடைந்திருப்பதாக பிரதேச செயலாளர் சொன்னார்.

ஏறாவூர்ப் பற்றுப் பிரதேசத்திலுள்ள ஈரலக்குளம் கிராமத்தில் 3 வீடுகளும் மற்றும் வேப்பவெட்டுவான் கிராமத்தில் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாக பிரதேச செயலாளர் மேலும் சொன்னார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட வறட்சிக்குப் பின்னர் நேற்று புதன் மாலை பலத்த காற்றுடன் கனத்த மழை பெய்தது. இதன்போதே இவ்வாறு சுழற்காற்றில் அகப்பட்ட வீடுகளும் மரங்களும் சேதமடைந்துள்ளன.

TELO Media Team 1