Hot News
Home » செய்திகள் » இந்திய வீடுகட்டும் திட்டம்: ‘பயனாளிகள் தெரிவில் பாரபட்சம்’

இந்திய வீடுகட்டும் திட்டம்: ‘பயனாளிகள் தெரிவில் பாரபட்சம்’

இந்திய உதவியின் கீழ் இரண்டாம் கட்டமாக வீடமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற அதேவேளை, வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி பிரதேசத்தில் இந்திய வீடுகளுக்கான பயனாளிகளைத் தெரிவு செய்வதில் பாரபட்சம் காட்டப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.இது தொடர்பில் நெடுங்கேணி ஒலுமடுவைச் சேர்ந்த பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுபவர்கள் வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர அவர்களிடம் நேரடியாக முறையிட்டிருக்கின்றார்கள். நெடுங்கேணி பிரதேசத்தில் அரச திட்டங்களின் கீழ் காணிகளைப் பெற்றிருக்கின்ற யாழ் மாவட்டத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டவர்களுக்கே இந்திய வீட்டுத்திட்டத்தில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. வவுனியா அரசாங்க அதிபரைச் சந்தித்து இது குறித்து எடுத்துக் கூறிய அவர்கள் எழுத்து மூலமாகத் தமது குறைகளை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.இதுபற்றி கருத்து வெளியிட்ட வவுனியா அரசாங்க அதிபர், இந்திய வீடமைப்புத் திட்டத்தின் பயனாளிகளைத் தெரிவு செய்வதில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றதா, அவற்றில் அதிகாரிகள் யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கின்றார்களா என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகளை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்தார். அத்துடன் முறையிட்டவர்கள் உண்மையிலேயே பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு அடுத்த கட்ட பயனாளிகள் தெரிவில் இடமளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்தார். இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்திற்கு ஐயாயிரம் வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

TELO Admin