Hot News
Home » செய்திகள் » தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் முஸ்லிம்களை உள்வாங்கக் கூடாது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் முஸ்லிம்களை உள்வாங்கக் கூடாது?

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் மக்கள் தங்கள் உரிமைகளையும், அரசியல் குறிக்கோள்களையும் அடையும் நோக்கில் செயற்பட எதிர்பார்க்கும் வேளையிலும், முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் பதவிக்கும் ஏனைய வரப்பிரசாதங்களுக்காகவும் அந்த குறிக்கோளை அரசிடம் அடகு வைக்கும் வேளையிலும், மாற்று அரசியல் சிந்தார்ந்தம் ஒன்றுக்காக முஸ்லிம் மக்கள், தமிழ் மக்களுடன் இணையும் தேவை எழுந்துள்ளது.தமிழ், முஸ்லிம் மக்களின் தற்போதைய ஒரே எதிரி சிங்கள பேரினவாதமே! பள்ளிவாசல் உடைப்பு, காணி அபகரிப்பு என முஸ்லிம் மக்களை நசுக்கும் நாசகார வேலைகள் ஒரு பக்கம் தொடர, மறுபக்கம் அரசியல் தீர்வு இழுத்தடிப்பு, திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்,  ஆட்கடத்தல் என தமிழ் மக்களை நசுக்கும் வேலைகள் மும்முரப்படுத்தபட்டுள்ளன.இதன் பின்னணியில் பாரிய சக்தி ஒன்றும் அரசியல் பேரினவாதிகளின் அனுசரணையும் உந்துகோலாக உள்ளது. ஆக, தமிழ்-முஸ்லிம் மக்களின் அடிப்படை பிரச்சினை ஒன்றே..!இந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஆராயமுன் குறிக்கோளை அடையும் வழிமுறைகளை நன்றாக திட்டமிட வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்கு அடித்தளமாக தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒரே குடையின் கீழ் ஒன்று சேர வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள். அதற்காக அவர்கள் பச்சைக்கொடி காட்டும் அறிகுறிகள் தென்படுகின்றன. காலத்தின் தேவை அதுவாக இருந்தால் உடனடியாக அதை அமுல்படுத்த வேண்டும். காலம் கடந்த ஞானம் அரசியலுக்கு உதவாது.தமிழ்-முஸ்லிம் மக்கள் இணைவு அரசியல் ரீதியாக ஆரம்பிக்க பட வேண்டும். அதற்கு தற்போதைய முஸ்லிம் கட்சிகளோ, அரசியல்வாதிகளோ தயாராக இல்லை என்றாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆர்வமாக உள்ளது.இது தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் சாணக்கியத்தையும், முஸ்லிம் அரசியல் வாதிகளின் பிற்போக்கு பச்சோந்திதனத்தையும் பிரதிபலிக்கின்றது. தமிழ்-முஸ்லிம் மக்கள் இணைவின் மூலமே சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் எனும் அடிப்படை தெரிந்தும், தங்கள் பதவிகளை விட்டுகொடுக்க தயார் இல்லை என்ற நிலையிலேயே ஏமாற்று கதைகள் கூறி வருகின்றனர். இது முஸ்லிம் சமூகத்துக்கு ஆரோக்கியமானது அல்ல. இதன் பிரதிபலிப்பு கிழக்கில் பெரும் அரசியல் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.எனது ஆய்வில் முஸ்லிம் மக்கள், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணையும் மனோ நிலையில் இருப்பதை அறிய முடிகின்றது. இதை தமிழ் தேசிய கூட்டமைப்பு சாதகமாக பயன்படுத்தி முஸ்லிம் நலன் விரும்பிகள், அமைப்புகள், புத்திஜீவிகள் மற்றும் அரசியல்வாதிகளை உள்வாங்கி முஸ்லிம் வேட்பாளர்களை தங்கள் கூட்டமைப்பில் முன்னிறுத்தினால் கணிசமான வாக்குகளை பெறும். இதன் மூலம் கூட்டமைப்பில் முஸ்லிம் பிரதிநிதிகள் உருவாக்கபட்டால் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் ஓரம் கட்டப்படுவது நிச்சயம்.அரசின் வாக்கு வங்கி தற்போது சரிய ஆரம்பித்துள்ளது. இது அரசிடம் அடைக்கலம் புகுந்துள்ள முஸ்லிம், தமிழ் கட்சிகளுக்கும் பொருந்தும். சரியும் இந்த வாக்குகளை குறிப்பாக முஸ்லிம் வாக்குகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற முயற்சிக்குமானால் அடுத்த தேர்தலில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக கூட்டமைப்பு மாறினாலும் ஆச்சரியபடுவதுக்கு இல்லை.இதன் மூலம் சிறுபான்மை மக்களின் உரிமைகளை இலகுவாக வென்றெடுக்க முடியும். இதற்கான முயற்சிகளை கூட்டமைப்பு இப்போது இருந்தே ஆரம்பிக்க வேண்டும். குறிப்பாக முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும். இதற்கு பக்கபலமாக சில முஸ்லிம் சமூக நலன் விரும்பிகளும், அமைப்புகளும் தயாராகிக்கொண்டு இருக்கின்றார்கள். வரும் நாட்களில் இது பெரும் அரசியல் திருப்பு முனையாக அமையும்.

TELO Admin