Hot News
Home » செய்திகள் » உள்முரண்பாடுகளை தொடர்ந்து நீடித்துக்கொண்டு போகாமல் முடிவுக்கு கொண்டு வாருங்கள் – மனோ கணேசன்

உள்முரண்பாடுகளை தொடர்ந்து நீடித்துக்கொண்டு போகாமல் முடிவுக்கு கொண்டு வாருங்கள் – மனோ கணேசன்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள இலங்கை தமிழரசு கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,தமிழீழ விடுதலை இயக்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகிய ஐந்து கட்சிகளும் தமக்கு இடையிலான உள்முரண்பாடுகளை தொடர்ந்து நீடித்துக்கொண்டு போகாமல் அவற்றிற்கு உடன் முடிவு கண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை பலமிக்க தமிழ் தேசிய ஜனநாயக அரசியல் இயக்கமாக கட்டி எழுப்பும் நோக்கில் செயலாற்றவேண்டும் என்பதுவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.அசாத்திய பொறுமையுடனும்இ ஒருவித சலிப்புடனும் கூட்டமைப்பு கட்சிகள் மத்தியிலான இந்த முரண்பாட்டு செய்திகளை நாட்டிலும்இ புலத்திலும் வாழும் தமிழ் இனமும்இ சமூக பொறுப்புள்ள தமிழ் உடகங்களும் அவதானித்துக்கொண்டு இருக்கின்றன என்பதை கூட்டமைப்பு அரசியல் தலைவர்கள் மறந்துவிடக்கூடாது.கூட்டமைப்பு சகோதர கட்சிகளுக்குள் பல வருட காலமாக நீடித்து வந்துள்ள உள்முரண்பாடுகள் பற்றி கருத்து தெரிவிப்பது அரசியல் நாகரீகம் அல்ல என்பதை நிச்சயமாக நானறிவேன். ஆனால், இன்று பகிரங்கமாகியுள்ள முரண்பாட்டு செய்திகள், கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று துன்பங்களை சுமந்து நிற்கும் தமிழர்களின் தேசிய இருப்பை சவாலுக்கு உள்ளாக்கும் விடயமாக மாறி வருகின்றன என்ற காரணத்தினாலேயே இதை கவலையுடன் சொல்ல வேண்டியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,உள்முரண்பாடுகள் பகிரங்கமாகும்போது முதற்பலி, மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கைதான். சொல்லொணா அகோர நினைவுகளையும்,அவல நிஜங்களையும் சுமந்து வாழும் தமிழ் மக்களுக்கு இன்று எஞ்சி இருப்பது நம்பிக்கை என்ற ஒன்றே ஒன்றுதான். இந்த நம்பிக்கையும் கனவாகுமானால்இ அது துர்பாக்கியமாகும். அது கோர வன்னி யுத்தம் தந்த வலிக்கு சமாந்திரமானதாகும். ஒரு அங்குலமும் இறங்கி வர தயார் இல்லை என்று இனவாத அரசு தனது நிலைபாடுகள் நாள் தோறும் அறிவித்துகொண்டுள்ளது. தமிழ் மக்களை சாகவிட்டுவிட்டு அதற்கு துணை போன சர்வதேசமும், இப்போதுதான் தாமதமாக விழித்து எழுந்து எம்மை சமாதானப்படுத்தி கொண்டிருக்கின்றது. உலக வல்லரசுகளின் முன்னுரிமை பட்டியலில் நமது விவகாரம் முதல் வரிசையில் இருந்தால், கட்சிகள் செயற்படாவிட்டாலும்கூட, தனது தேவைக்காகவே சர்வதேச உலகம் நம்மை தள்ளி அழைத்து சென்று தீர்வுக்கு வழி காட்டிவிடும். ஆனால், தூரதிஷ்டவசமாக உலக நாடுகளின் முன்னுரிமை பட்டியலில் நமது விவகாரம் முன் வரிசையில் இல்லை. இந்த கசப்பான உண்மையை பகிரங்கமாக சொல்வதற்கு நாம் தயங்க வேண்டியது இல்லை. இதுபற்றி தமிழ் மக்களுக்கு பொய்யான மாய நம்பிக்கைகளை தர முடியாது. எனவே, சர்வதேசம் என்ற ஒரே வார்த்தை பிரயோகம் மூலமாக மாத்திரம் நமது எதிர்பார்ப்புகள் தீர்ந்துவிட போவதில்லை என்பதை நாம் புரிந்துகொண்டால்தான், நம்மை ஜனநாயகரீதியாக தயார் படுத்திகொள்ளலாம். சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்கும். ஆனால் அந்த ஒத்துழைப்பை உள்வாங்க காத்திரமான கட்டமைப்பு இருக்க வேண்டும். இந்த காரணத்தினாலேயே இலங்கை தமிழர்களின் அரசியல் தலைமைகள்இ உலகின் ஏனைய இன விடுதலை இயக்க தலைமைகளை விட,அதிகமாக, காத்திரமாக, முழுநேரமாக உழைக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். காத்திரமான முழு நேர உழைப்புக்கும், ஆளுமைக்கும் கூட்டமைப்பில் பஞ்சமில்லை என நான் நம்புகிறேன். எனவே உழைப்பையும், ஆளுமையையும் முன்னெடுக்கும் எழுச்சியுடன்கூடிய கட்டமைப்பைகொண்ட கட்சி இயந்திரம்தான் தேவைபடுகிறது. ஆனால்இ இன்று வானத்தில் பறக்கும் பறவையை பிடிப்பது என்பது விடுத்து, கையில் இருக்கும் பறவையும் நம் கையில் இருந்து பறந்துவிடுமோ என்ற பயம் மக்களுக்கு வந்து விட்டது. புதிய எழுச்சியுடன்கூடிய கட்டமைப்பை ஏற்படுத்துவது என்ற இலக்கை நோக்கி நகர்வது என்பதை விடுத்து, இப்போது கையில் இருக்கும் கட்டமைப்பும் சிதையுமானால், அது வரலாற்று தவறாகிவிடும். நாளைய வரலாறு எழுதப்படுவது என்பது ஒருபுறமிருக்க, இன்றைய நிகழ்காலமே நம்மை நடுச்சந்தியில் நிறுத்திவிடும். தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்டமைப்புரீதியாக ஒழுங்கமைக்கப்பட்டு, ஆளுமையும், அர்ப்பணிப்பும், நேர்மையும், தூரப்பார்வையும், துணிச்சலும் கொண்ட கொண்ட தமிழ் தேசிய இயக்கமாக புத்தெழுச்சி பெற வேண்டும் என்பதுவே, சகோதர தமிழ் தேசிய கட்சியான எமது ஜனநாயக மக்கள் முன்னணியின் ஒரே எதிர்பார்ப்பாகும்.கூட்டமைப்பில் இடம்பெறும் எந்த ஒரு கட்சிக்கும் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ எமது கருத்துகள் அமையவில்லை. தமிழ் மக்களை சார்ந்தே நமது கருத்துகள் அமைகின்றன. உள்முரண்பாடுகளை தொடர்ந்து நீடித்துக்கொண்டு போகாமல் முடிவுக்கு கொண்டு வாருங்கள். ஜனநாயக கட்டமைப்பை ஏற்படுத்தி கூட்டமைப்பை வலுப்படுத்துங்கள். இதுவே இன்று நாட்டிலும், புலத்திலும் வாழும் தமிழ் மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பு. இந்த மக்கள் குரலையே நாம் இங்கு எதிரோலிக்கின்றோம்.

TELO Admin