Hot News
Home » செய்திகள் » ஈழத்தமிழருக்கான அரசியல் தீர்வு முதன்மைப்படுத்த வேண்டும் – எரிக் சொல்கெய்ம்

ஈழத்தமிழருக்கான அரசியல் தீர்வு முதன்மைப்படுத்த வேண்டும் – எரிக் சொல்கெய்ம்

ஈழத்தமிழர் விவகாரத்தை முதன்மைப்படுத்துமாறு முன்னாள் நோர்வே அமைச்சரும் சிறிலங்காவுக்கான சிறப்பு சமாதானத் தூதருமான எரிக் சொல்கெய்ம் சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். தமிழ் மக்களுக்கு விரைவான தீர்வொன்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என சொல்கெய்ம் தெரிவித்துள்ளார். பி.பி.சி முன்னாள் செய்தியாளர் பிரான்செஸ் ஹரிசன் எழுதிய ‘மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது சொல்கெய்ம் இதனை வலியுறுத்தியுள்ளார். சிறிலங்கா அரசாங்கம், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டுமெனில் முதலில் நான்கு முக்கிய விவகாரங்கள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சொல்கெய்ம் சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்தல், காணாமற் போதல்கள் மற்றும் ‘வெள்ளை வான் கடத்தல்கள்’ போன்றவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும், வடக்கில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தை குறைக்க வேண்டும், அரச ஆதரவுடன் வடக்கு மற்றும் கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட மாட்டாது என உத்தியோகபூர்வமாக உறுதியளிக்க வேண்டும் ஆகிய நான்கு விடயங்களையும் சொல்கெய்ம்ம் வலியுறுத்தியுள்ளார். இப்புத்தக வெளியீட்டு நிகழ்வில், சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஐ.நா வல்லுனர் குழுவின் உறுப்பினரும், தென்னாபிரிக்காவின் உண்மையான, மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான ஜஸ்மின் சூக்கா மற்றும் அனைத்துலக நெருக்கடிகள் குழுவைச் சேர்ந்த அலன் கீனன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதேவேளையில், இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐ.நா ஒளிப்படக் கலைஞர் பெஞ்சமின் டிக்ஸ் தான் ‘வன்னி’ என்ற பெயரில் புதிய வரைகலை நாவல் ஒன்றை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் தொடர்பாக நீள ஆவணம் ஒன்றைத் தயாரிப்பதற்கான திட்டமொன்றைக் கொண்டுள்ளதாக திரைப்படத் தயாரிப்பாளர் கலும் மக்றே குறிப்பிட்டார்.

TELO Admin