அரசாங்கத்தின் ஆதரவும் பின்புலமும் உடையவர்களே நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன மீது தாக்குதல் நடத்தியிருக்கக் கூடும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நீதிமன்றக் கட்டமைப்பு, நீதி வேண்டி நிற்க வேண்டிய ஓர் சூழ்நிலைமை நாட்டில் உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அரசியல்வாதிகள் என்ற ரீதியில் நீதிமன்றக் கட்டமைப்பை பாதுகாக்கவே தாம் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.தமக்குக் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் அரசாங்கத் தரப்பினர் செயற்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி அரசியல்வாதிகளும், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அவர்களின் அடியாட்களும் இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் சில அரசியல்வாதிகள் வெளியிட்ட கருத்து தவறானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை காவல்துறையினர் கைது செய்வார்களா என்பது சந்தேகமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.உயர் பாதுகாப்பு வலயத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் அரசாங்கத்திற்கு தொடர்பு இருக்கக் கூடும் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.