Hot News
Home » செய்திகள் » தம்புள்ள ஹைரியா ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பில் ஆராய அனைவருக்கும் பௌசி அழைப்பு

தம்புள்ள ஹைரியா ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பில் ஆராய அனைவருக்கும் பௌசி அழைப்பு

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை தம்புள்ள ஹைரியா ஜும்ஆ மஸ்ஜித் நிலைமை தொடர்பாக ஆராய்வதற்கு அனைத்து கட்சிகளையும் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கலந்துரையாடலுக்கு தான் அழைப்பு விடுத்துள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்தார்.இன்று பிற்பகல் 2:30 மணிக்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அந்த சந்திப்பு இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.அதேவேளை தம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் அங்கிருந்து அகற்றப்படாது என்று ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார் . மேலும் அவர் தெரிவிக்கையில் தம்புளையில் குறித்த பகுதியில் இருந்து குடியிருப்பாளர்கள் , மற்றும் வர்த்தக நிலையங்களை வைத்திருப்பவர்கள் இந்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் வெளியேற உத்தரவிடப்பட்ட பின்னர் தனக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தம்புள்ள பள்ளி அங்கிருந்து அகற்றப்படாது என்று தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.தம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் நிலைமை தொடர்பாக ஆராய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்துக் கட்சிகளினதும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தான் இதற்கான அழைப்பை விடுத்துள்ளதாகவும், சந்திப்புக்கு அனைவரும் சமுகம் தருவார்கள் என்று நம்புவதாகவும் கூறினார்.தம்புள்ள புனித பூமி என்று தெரிவிக்கப்படும் பிரதேசத்தில் வசிக்கும் பெரும்பாலான குடியிருப்பாளர்கள், மற்றும் வர்த்தக நிலையங்களை வைத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் வெளியேற உத்தரவிடும் கடிதங்கள் கடந்த மாதம் 27 ஆம் திகதி அனுப்பிவைக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TELO Admin