Hot News
Home » செய்திகள் » திவிநெகும: அரச தரப்பு வாதத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது

திவிநெகும: அரச தரப்பு வாதத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது

இலங்கையில் திவிநெகும சட்டத்தின் நிறைவேற்றம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையொன்றின்போது இலங்கை அரசின் சார்பில் சட்டமா அதிபர் முன்வைத்த ஆட்சேபனையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.வடக்கு மாகாணசபை இன்னும் அமைக்கப்படாதுள்ள நிலையில், அதன் ஆளுநருக்கு திவிநெகும சட்ட மூலத்துக்கு அனுமதி வழங்க அதிகாரம் இருக்கின்றதா என்ற விசாரணையை உச்சநீதிமன்றம் மேற்கொள்ளமுடியாது என்ற சட்டமா அதிபரின் ஆட்சேபனையே உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அந்த வழக்கின் விசாரணையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான அனுமதியையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது.வடக்கு மாகாண ஆளுநரின் அனுமதியை, இன்னும் அமைக்கப்படாதுள்ள வடக்கு மாகாணசபையின் சம்மதமாக கருதமுடியாது என்பதால், திவிநெகும சட்டமூலத்துக்கு அவர் அளித்த அனுமதியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்குத் தாக்கல் செய்தது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த விவகாரம் அரசியலமைப்பு சம்மந்தப்பட்ட பிரச்சனை என்பதால் அதனை உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பிவைக்க உத்தரவிட்டிருந்தது.இந்த மனு இன்று திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்துக்கு வந்தபோது ஆட்சேபனையொன்றை முன்வைத்த அரசதரப்பு சட்டத்தரணி, இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் விளக்கம் அளிக்கவேண்டிய பகுதிகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் தெளிவாகக் கூறாதபடியால், விசாரணையை நடத்தும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு இல்லை என்று வாதிட்டார்.ஆனால் இந்த மனுமீதான விசாரணையை தொடர்ந்தும் நடத்துவதற்கு உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது என்று மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டனர்.அரச தரப்பு வாதத்தை நிராகரித்த தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்தும் நடத்துவதற்கான உத்தரவை வழங்கியது.அதன்படி, இந்த வழக்கு மீதான விசாரணைகள் எதிர்வரும் 22-ம் திகதி நடக்கவுள்ளது.

TELO Admin