13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு : விஜித ஹேரத் விளக்கம்

மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என உறுதியளித்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர், அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையை வெளியிடுவதைத் தவிர்த்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வு வழங்கப்படுமெனவும், 13ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவெனவும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் சிங்கள மொழியில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அது அமைந்திருந்தது.

இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த அமைச்சர் விஜித ஹேரத்,

“ஜனாதிபதித் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட விஞ்ஞாபனத்தில் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

முதலாவது விடயம் கடந்த காலத்தில் இடம்பெற்றது ஜனாதிபதி தேர்தல். ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ஒருவர் தெரிவாகியுள்ளார்.

அரசாங்கத்தை அமைப்பதற்கு இப்போது நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்னர்தான் அரசாங்கத்தை அமைக்கும் விடயம் இடம்பெறும்.

எனவே, எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில், புதிய அரசியலமைப்பை உருவாக்கி, அதனை இந்நாட்டு மக்களிடம் சமர்ப்பித்து, இந்த நாட்டு மக்களின் பொதுக் கருத்தின் அங்கீகாரத்தைப் பெற்று, தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான கொள்கை மற்றும் வேலைத் திட்டம் தெளிவாக உள்ளது” என்றார்.

புதிய ஜனாதிபதியின் மூவரடங்கிய அமைச்சரவைக் கலந்துரையாடலில் அரசியல் கைதிகள் தொடர்பில் கலந்துரையாடப்படாவிட்டாலும், அவர்களின் விடுதலைக்கான சட்டக் கட்டமைப்பு தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடப்படும் என ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்,

“எங்கள் நிலைப்பாடும் அதுதான். அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கான சட்ட கட்டமைப்பு உள்ளது. நீதி அமைச்சிடமிருந்து தேவையான அறிக்கைகளை பெற்றுக்கொண்டு அந்த விடயங்களை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

எனவே நேற்றைய அமைச்சரவைக் கூட்டம் பிரதான விடயங்கள் குறித்தே இடம்பெற்றது.

அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை, ஆனால் எதிர்காலத்தில், குறிப்பாக புதிய அரசாங்க செயல்முறையுடன், நாங்கள் நிச்சயமாக தீர்மானம் எடுப்போம்.” என்றார்.

Posted in Uncategorized

எமது கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த சிலர் முயற்சி: அநுர தரப்பு குற்றச்சாட்டு

எமது கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த சிலர் முயற்சி மேற்கொள்கின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் உபாலி சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

வவுனியாவில், நேற்று (01.10.2024) இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தின் போது ஏற்பட்ட சர்ச்சை நிலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“நேற்று காலை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது சிலர் இடையூறு ஏற்படுத்தியதோடு தாம் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் என பொய்யாக கூறி எமது கட்சிக்கு உள்ள நற்பெயரை கலங்கப்படுத்தவும் அபகீதியை ஏற்படுத்தும் நோக்கோடும் செயற்பட்டிருந்தனர்.

தற்போது தமிழ் மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்படுகின்ற ஆதரவையும் நல்ல எண்ணத்தினையும் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் இவ்வாறான செயலில் ஈடுபட்டதை எண்ணி மனவருத்தமடைகின்றோம் என தெரிவித்தார்.

சர்வதேச ரீதியான ஒப்பந்தங்களில் விலக முடியாத பெரும் நெருக்கடியில் அநுர!

சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட உடன்படிக்கையில் இருந்து இலங்கை விலகிச் செல்வதற்கான ஏது நிலைகள் இல்லை என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி எம். கணேசமூர்த்தி தெரிவித்தார்.

அது அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கமாக இருந்தாலும், வேறு யாருடைய அரசாங்கமாக இருந்தாலும் அதில் இருந்து விலகிச் செல்ல மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு விலகிச் செல்வார்களாக இருந்தால் மீண்டும் ஒரு நெருக்கடி நிலையை நிச்சயமாக சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

தனியார் ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

போர்குற்றச்சாட்டு விசாரணைக்கு அநுர அரசாங்கத்தை வலியுறுத்துங்கள் : ஜெய்சங்கரிடம் கோரிக்கை!

இலங்கையில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்தை போர்க்குற்ற விசாரணைக்கு, முழுமையாக ஒத்துழைக்குமாறு வலியுறுத்த வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் எஸ். ராமதாஸ், அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்வரும் 4ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே ராமதாஸ் தமது எக்ஸ் (X) தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் இந்த விஜயம் இலங்கைத் தமிழர்களுக்கு பயனும், அதிகாரமும் அளிக்கும் வகையில் அமைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைகின்ற போதிலும், போர்க்குற்றங்களுக்குக் காரணமானவர்கள் இதுவரை தண்டிக்கப்படவில்லை. அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின்படி தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ள போதிலும் எந்தப் பயனும் ஏற்படவில்லை.

எனவே, மாறிமாறி ஆட்சி செய்த பாரம்பரிய கட்சிகள் அல்லாத கட்சியைச் சேர்ந்த ஒருவர் தற்போது ஆட்சிக்கு வந்துள்ளார். ஆகையால், பிரிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் இலங்கை ஜனாதிபதியிடம் முன்வைக்க வேண்டும்.

அத்துடன், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்குமாறு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கத்திடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்த வேண்டும் என கோரியுள்ளார்.

Posted in Uncategorized

உணவுக்கான நிலுவை தொகையை செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத்தில் இருந்து எடுத்துச்சென்ற உணவுக்கான நிலுவைத் தொகையை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், அன்றைய தினம் வரை கொடுப்பனவை கணக்கிட்டு வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், கடந்த மாதம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொடுப்பனவு தொகையை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மாதாந்த கொடுப்பனவு
இந்த நிலையில், எதிர்வரும் மாதங்களில் இவ்வாறான நிலுவையிலுள்ள கணக்குகளுக்கு உடனடியாக தீர்வினை காண மாதாந்த கொடுப்பனவு தொகையை தாமதமின்றி வழங்குவதாக நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் கொடுப்பனவு தொகை தாமதமானது தொடர்பாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே நாடாளுமன்ற சேவை திணைக்களத்திடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

Posted in Uncategorized

பாராளுமன்ற தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டி: ரெலோ செயலாளர் பா.உ கோவிந்தன் கருணாகரம் ஜனா

பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக குத்து விளக்குக்கு பதிலாக சங்கு சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (30) காலை நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியத்தின் மீது பற்றுக்கொண்ட இளைஞர்களை இணையுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

அதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் அழைப்பு தொடர்பில் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

‘ஒரே சீனா’ கொள்கையை உறுதிப்படுத்தியுள்ள அநுரவின் அரசாங்கம்

ஒரே சீனா என்ற வெளிவிவகாரக் கொள்கையில் இலங்கை உறுதியாக உள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொழும்பில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ஒரே சீனா கொள்கையானது இருதரப்பு மற்றும் பலதரப்பு மன்றங்களில், இலங்கையின் வெளியுறவுக் கொள்கையாக பதிந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான பரிமாற்றங்கள், பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு கிடைத்த உதவிகள், பட்டுப்பாதை முயற்சியின் கீழ் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் சீன நிதி நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கடன் மறுசீரமைப்புகள் என்பவற்றை பாராட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சீனாவின் ஒற்றுமை
இந்தநிலையில்,பொருளாதார மீட்சி செயல்முறைக்கு சீனாவின் ஒற்றுமை, ஆதரவு மற்றும் தொடர்ச்சியான பங்காளித்துவத்தை இலங்கை நாடுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென்ஹோங், சர்வதேச நிலைமைகள் எவ்வாறு மாறினாலும் அல்லது பாரம்பரிய அல்லது பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்களை எதிர்கொண்டாலும், சீன அரசாங்கமும் மக்களும் எப்போதும் இலங்கையுடன் உறுதியாக நிற்கிறார்கள் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை: சாள்ஸ் நிர்மலநாதன் அறிவிப்பு

புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்கின்ற நோக்கத்திற்காக இம்முறை நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்பதை அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத்தருகிறேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் அதிகூடிய வாக்குடன் மக்களின் விருப்பத்துக்கு அமைய நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டு இருந்தேன்.

அன்று தொடக்கம் இன்றுவரை என்னால் முடிந்த அளவு தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வந்திருக்கின்றேன்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு
அத்துடன் எனது பிரதேசங்களில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் என்னால் இயன்றவரை வழங்கியும் மக்களின் போராட்டங்களிலும் பங்கு பற்றி இருக்கின்றேன்.

வன்னி மாவட்டத்தில் தேவையான என்னால் முடிந்த பல அபிவிருத்தி திட்டங்களையும் நான் முன்னெடுத்து இருக்கின்றேன். தமிழ் மக்கள் எனக்கு இவ்வளவு காலமும் வழங்கிய ஆதரவிற்கும் கௌரவத்திற்கும் நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்கின்ற நோக்கத்திற்காக இம்முறை நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்பதை அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத்தருகிறேன்.

அதே நேரம் தமிழர்களின் உரிமைக்காக தொடர்சியாக நான் உழைத்துக் கொண்டிருப்பேன் என்பதை உறுதியாக கூறுகின்றேன்.

எனக்கு தொடர்ச்சியான ஆதரவை இவ்வளவு காலமும் நல்கிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகளை தெரிவிப்பதுடன் தொடர்ந்தும் உங்களோடு நான் பயணிப்பேன் என்பதையும் கூறிக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அநுர மீது மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்க தயாராகும் இந்தியா!

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயகவுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுப்பதற்கு இந்தியா தயாராகி வருவதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்தார்.

தனியார் ஊடகத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

இலங்கை பொருளாதார ரீதியில் வளர்ச்சியடையவும் வீழ்ச்சியடையவும் விரும்பாத இந்தியாவின் எண்ணத்தை தோற்கடிக்க வேண்டுமாயின் இந்தியாவை வெளியேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை ஜனாதிபதி அநுர எட்டியுள்ளதாக ஆய்வாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், பெரும்பான்மை மக்கள் தங்களுக்கு ஒரு மாற்றம் தேவை என கருதியே தற்போது அநுரகுமார திஸாநாயகவை வெற்றியடைய செய்ததாக ஆய்வாளர் அரூஸ் கூறினார்.

இதேவேளை, பூகோள அரசியலில் இருந்து அவர் தப்பி பிழைப்பதே அநுரவின் அடுத்த சவால் என ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அநுர அரசின் அதிரடி : முன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்களின் இராஜதந்திர கடவுச்சீட்டுகள் இரத்து

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் அனைத்து முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட இராஜதந்திர கடவுச்சீட்டுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர குடிவரவு குடியகல்வு திணைக்கள தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.

அத்துடன், கடவுச்சீட்டுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சகல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளரும் தலைமை அதிகாரியுமான சமிந்த குலரத்ன தெரிவித்தார்.

இதன்படி, சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் அரசியலமைப்பு பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூன்று உறுப்பினர்களைத் தவிர 219 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் இராஜதந்திர கடவுச்சீட்டுகள் ரத்து செய்யப்படும்.

வழக்கமான முறைப்படி, அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள், அவர்களது மனைவிகள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் ராஜதந்திர கடவுச்சீட்டு சலுகைக்கு உரிமை உண்டு.

அமைச்சுப் பணியாளர்களின் விமான அனுமதிப்பத்திரங்களும் இரத்து
கூடுதலாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது மனைவிகள் அல்லது கணவர்கள் அதே உரிம சிறப்புரிமைக்கு உரிமையுடையவர்கள்.

இதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் மூலம் அமைச்சுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ விமான அனுமதிப்பத்திரங்களும் இரத்துச் செய்யப்பட்டதாக சமிந்த குலரத்ன மேலும் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டமை தொடர்பில் குடிவரவு திணைக்களம் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

Posted in Uncategorized