ஆணவத்தை விடுத்து அரவணைப்பே தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை நெறிப்படுத்தும் -ரெலோ

ஆணவத்தை விடுத்து அரவணைப்பே தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை நெறிப்படுத்தும்

தமிழ்த் தேசியப் பரப்பின் ஒற்றுமைக்கான இறுதிச் சந்தர்பத்தையும் கோட்டை விடுகிறது தமிழரசுக் கட்சி.

வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியத் தரப்பாக ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பதற்கு பல தடவைகள் தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எடுத்துக்கொண்ட முயற்சிகள் உதாசீனப் படுத்தப்பட்டன. இதன்பின் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையிலான கொள்கை ரீதியான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இது சாதாரணமாக ஏற்படுத்தப் படவில்லை. பல விட்டுக்கொடுப்புகள் அரவணைப்புகளின் அடிப்படையில் தான் சாத்தியமானது.

இதன் பின் தோன்றிய அரசியல் சூழ்நிலை மாற்றங்களில் வன்னி நிலப்பரப்பில் தமிழ் தேசிய கட்சிகளின் கைகளில் சபைகளை வலுப்படுத்துகின்ற நிலைப்பாடு பற்றி பேசவே நாங்கள் அழைக்கப் பட்டோம்.

அதன் பிரகாரம் திங்கள் மதியம் தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி வி கே சிவஞானம் ஐயா அவர்கள் அலுவலகத்தில் அக்கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரன் அவர்களுடன் சந்திப்பு நடைபெற்றது.

அதன்போது வன்னியின் அரசியல் சூழ்நிலை பற்றி கலந்துரையாட முற்பட்ட வேளையில் யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறதோ அதற்கான பதில் நடவடிக்கை வன்னியில் அமையுமென தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரன் அவர்கள் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்கள் பயனற்றவை. வன்னியில் அதிக சபைகளை ஆளும் தரப்பு கைப்பற்றும் நிலை காணப்படுகிறது. பல சபைகளில் தனி ஒரு கட்சியாக அவர்கள் ஆசனங்களை பெற்றுள்ளார்கள். தமிழ் தேசியப் பரப்பினர் இணைந்து செயலாற்றாது விட்டால் இந்த சபைகளை ஆளும் தரப்பிடம் இழக்க வேண்டிய சூழ்நிலை வரும்க். மேலும், கிழக்கு மாகாணத்தில் மாறுபட்ட அரசியல் சூழ்நிலைகளை தோற்றுவிக்கும் எனவும் தெரிவித்தோம்.

இன்னும் காலம் பிந்தவில்லை. தமிழ் தேசிய பரப்பினர் ஒன்றிணைந்து விட்டுக் கொடுப்போடு வடக்கு கிழக்கில் அனைத்து சபைகளையும் அமைப்பதற்கான முயற்சியை செய்ய முடியும். அதை நாங்கள் முன்னெடுக்க விரும்புகிறோம் எனவும் தெரிவித்தோம்.
ஆனாலும் இணக்கமான சூழ்நிலைக்கு பதிலாக வறட்டு சவடால்களே பதிலாகின.

தனிமனித வீர வசனங்களால் எமது இனத்தினை நேர்த்தியான பாதையில் வழி நடத்த முடியாது. மக்கள் வழங்கிய ஆணையை ஏற்று தமிழ்த் தேசியப் பரப்பினர் ஒன்று கூடி ஆட்சியை கைப்பற்றுவதே மக்கள் எதிர்பார்ப்பு. அதை செய்வதற்கு விட்டுக்கொடுப்பு, அரவணைப்பு என்பன மிக அவசியம். தலைமைகளை வறட்டு கௌரவம் இதற்கு தடையாக இருக்கக் கூடாது.

எப்பொழுதும் ஒற்றுமைக்காகவே ரெலோ பாடுபட்டு வந்துள்ளது. அதில் மிகுந்த நம்பிக்கையும் கொண்டவர்கள் நாங்கள். அதை தவறாக புரிந்து கொண்டு வீர வசனங்கள் பேசுவதில் அர்த்தம் இல்லை. வெட்டிச் சவடால்களுக்கு நாங்கள் ஒருபொழுதும் இடமளியோம்.

Posted in Uncategorized

இராணுவம் மீட்ட நகைகளை பொதுவுடைமையாக்க வேண்டாம் – ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் வைப்பகத்தில் இருந்து இராணுவத்தினரால் மீட்கப்பட்ட தங்க நகைகளை, உறுதி ஆதரத்துடன் இருக்கும் மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த நகைகளை அரச பொதுவுடமையாக்கும் நிலையை உருவாக்கி விடக்கூடாது என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாக தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ராஜபக்‌ஷ காலத்தில் நடந்த போரின் போது விடுதலைப் புலிகளின் வைப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட நகைகள் காணாமல் போய்விட்டன. பணம் மற்றும் உடமைகள் காணாமல் போயுள்ளன என்று பேசப்படும் நிலையில், இந்த அரசாங்கம் இராணுவத்தினர் வசமிருந்த நகைகளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நல்லவொரு விடயத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதை நாங்கள் பாராட்ட வேண்டும்.

எவ்வாறாயினும் இந்த விடயத்தில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். அதாவது இந்த நகைகள் சாதாரண மக்களுடையவையே. அவர்கள் அந்த வைப்பகத்தில் நகைகளை வைத்தமைக்கான அத்தாட்சிகளை பலரும் வைத்திருக்கின்றனர். என்னிடமும் அவர்கள் வழங்கியுள்ளனர். அதனை சபையில் சமர்ப்பிக்வும் முடியும். ஆதாரத்துடன் இருக்கும் மக்களிடம் அவை செல்ல வேண்டும். அவற்றை பொதுவுடமையாக்கும் வாய்ப்பை ஏற்படுத்திவிடக் கூடாது.

இந்த நகைகளை கொடுப்பதில் சட்ட வரையறைகள் உள்ளன. கூடுதலாக ஆதரங்களை காட்டும் மக்கள் இருப்பதை போன்று அந்த ஆதாரங்களை காணாமலாக்கியவர்களும் இருக்கின்றனர். ஆனால் அவற்றை காணாமலாக்கியவர்கள் தமது நகைகளின் அடையாளங்களை கூறும் போது அதனையும் பரிசீலிக்க வேண்டும் என்று கோருகின்றேன்.இதேவேளை கொடுக்கப்படாத மிகுதி நகைகளை எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பயன்படுத்துவதாக கூறுகின்றீர்கள். இது நல்ல விடயம் தான் ஆனால் கூடுதலாக அந்த நகைகள் மக்களை சென்றடையும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது என்றார்.

Posted in Uncategorized

எமது விடுதலை கொள்கைவழியிலானது என உணர்த்தியவர் பொன் சிவகுமாரன் ரெலோ நிரோஸ்

தமிழ் மக்களின் விடுதலை இலட்சியபூர்வமானது. அவ் விடுதலை என்பது கொள்கை வழியில் அடையப்படவேண்டியது என்பதை தமிழ்த் தேசிய மாணவர் சக்தியாக உணர்த்தியவர் தியாகி பொன் சிவகுமாரன் அவர்கள் என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

பொன் சிவகுமாரனின் 51 வது ஆண்டு நினைவு தினத்தில் உரும்பிராயில் உள்ள பொன் சிவகுமாரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்பு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், தமிழ் மக்களின் இலட்சியபூர்வ விடுதலைப் பயணத்தின் வழி உறுதியுடன் நின்று மாணவ தலைவனாக பெரும் அரசியல் தலைவர்களுக்கு உணர்த்தியவர் சிவகுமாரன் அவர்கள். அடக்கு முறைகளுக்கு எதிராக தமிழ் இனம் இலட்சியபூர்வமாக எவ்வாறாக உச்சபட்ச தியாகத்தினை எமது இனத்திற்காக மேற்கொள்ள முடியும் என்பதை கற்பித்து முதல் வித்தாகிய மாவீரனே பொன் சிவகுமாரன் அவர்கள்.

தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் இளைஞர்களின் தியாகம் என்பது அளவிடப்பட முடியாதது. எதிரியிடம் உயிருடன் பிடிபட்டு விடக்கூடாது என்பதற்காக சயனட்டினை உட்கொண்டே சிவகுமாரன் அவர்கள் தன்னுயினை ஆகுதியாக்கினார். மாணவர் சக்தி மாபெரும் சக்தி என்பதை பேரினவாதத்திற்கும் உலகிற்கும் எடுத்துக்காட்டிய இனத்தின் வழிகாட்டி பொன் சிவகுமாரன் அவர்கள்.

தமிழ் மாணவர் மீது பௌத்த சிங்கள பேரினவாதச் சிந்தனையுடன் அரசு கொண்டு வந்த தரப்படுத்தல் முறைமைக்கு எதிராக போராடியவர் சிவகுமாரன் அவர்கள். தரப்படுத்தலை எதிர்த்து போராடிய மாணவர் பேரவையில் தன்னை முழுமையாக இணைத்துச் செயற்பட்டார். இக் காலத்தில் சிறிமா அரசாங்கத்தில் அங்கம் வகித்த சோமவீர அமைச்சரின் வாகனத்திற்குக் குண்டு வைத்தார் எனக் கைதுசெய்யப்பட்டார்.

அதுபோன்று அரசாங்கத்தில் சலுகைகளுக்காக சேர்ந்திருந்த அல்பிரட் துரையப்பா உள்ளிட்டவர்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டார். துரையப்பாவின் வாகனம் வெடித்துச் சிதறிய நிலையில் துரையப்பா மயிரிழையில் உயிர் தப்பினார். உலகத்தமிழாராட்சி மாநாட்டு படுகொலைகளை மேற்கொண்டவார்களை தண்டிப்பதற்காக திடனாக உழைத்தார். அரச பேரினவாதம் எம்மீது ஆயுத வன்முறையைத் திணித்த போது அதற்கு எதிராக மீண்டும் ஆயுதவழியில் பதிலளித்த தியாகி சிவகுமாரன் அவர்களின் இலட்சியத்தினை நினைவுகூர்ந்து இன்றும் அனுஸ்டிக்கின்றோம் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

பிரித்தானியாவில் எழுச்சி தலைவர் சிறீசபாரத்தினத்தின் 39 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

எழுச்சித்தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் முன்னூறுக்கும் அதிகமான போராளிகள் ஆதரவாளர்களது நினைவஞ்சலி நிகழ்வு பிரித்தானியாவில் நேற்று ஞாயிறு 25.05.2025 ரெலோ பிரித்தானியாகிளை உறுப்பினர்களால் உணர்வுபூர்வமாக அஞ்சலி செய்யப்பட்டது.

முதல் ஈகை சுடரை ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஏற்றிவைத்தார்,சகோதர படுகொலையில் கொல்லபட்ட போராளிகள் பொதுமக்களிற்காக இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிறப்புரைகள் பிரித்தானியாவிற்கு வருகை தந்த தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் பறுவா மோகன் ஆகியோாரால் நிகழ்த்தப்பட்டது.

நன்றி உரை பிரித்தானிய கிளையின் தலைவர் சாம் சம்பந்தன் வழங்கினார்.

இதனை தொடர்ந்து சமகால அரசியல் நிகழ்வுகள், வரும் மாகாண சபை தேர்தலை எப்படி எதிர் கொள்வது , உள்ளூராட்சி சபைகளை வினைத்திறனுடன் கையாள எப்படியான கூட்டுக் களை உருவாக்க வேண்டும் யாருக்கு ஆதரவுகளை வழங்குவது,ரெலோ வின் சர்வதேச கட்டமைப்பும் நாட்டில் உள்ள மாவட்ட கிளைகளும் இணைந்து எப்படியாக இயங்குவது போன்று பல விடயங்கள் ஆராயப்பட்டது.

Posted in Uncategorized

ஆளும் கட்சி அரசியல் அதிகாரம் காணிகளை பந்தாடுவதற்கும் உத்தியோகத்தர்களை அச்சறுத்தவும் பிரயோகிக்கப்படக்கூடாது – பூநகரி சம்பவம் குறித்த ரெலோ நிரோஷ்

உள்ளூராட்சி மன்றங்களில் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்படும் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை திட்டமிட்டு திரிவுபடுத்தும் வகையில் செயற்பட்டு மக்களை பிழையாக வழிநடத்தி அரச உத்தியோக்தரின் தொழில் சுதந்திரத்திலும் செயற்பாடுகளிலும் தடை ஏற்படுத்தவதை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும் என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில், அப் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் உள்ளூராட்சி மன்ற நடைமுறைகளுக்கும் சட்டத்திற்கும் அமைவாக செயற்பட்டதனை திசை திருப்பும் வகையில் ஆளுங்கட்சி பிரதேச அரசியல்வாதிகள் கத்தரிக்கப்பட்ட வீடியோ பதிவு ஒன்றை தயாரித்துள்ளனர். அதனை யாழ் – கிளிநொச்சி மாவட்ட ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அவர்கள் தனது முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். இது பொறுப்புமிக்க பதவியில் இருந்து கொண்டு அரச உத்தியோகத்தர்களை அச்சுறுத்தும் அடாவடித்தனமாகும்.

அடிப்படையில் இவ்விடயம் குறித்த ஆராய்கையில், ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரின் அனுசரணையில் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி ( ) யில் போட்டியிட்ட அரசியல் பிரமுகர் ஒருவர் சட்ட திட்டங்களுக்கு முரணாக, பெறுமதியான வீதியோரக் காணிகளை தனக்கு தேவையானவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதற்கு அரசாங்க ஒத்துழைப்பு காணப்பட்டுள்ளது. இங்கு மீறப்படும் உள்ளுராட்சி சட்டவிதிகள் தொடர்பில் உள்ளுராட்சி மன்ற உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை புறந்தள்ளி அரசியல் அதிகார மமதையில் குறித்த எதிர்த்தரப்பினர் உத்தியோகத்தர்கள் மற்றும் அச் சபையின் பொறுப்பதிகாரி, சபையின் தீர்மானங்களை தற்போது மேற்கொள்ளத்தக்க செயலாளர் மீது பலவந்தத்தினை பிரயோகித்துள்ளனர். பலவந்தத்திற்கு இடமளிக்காத உத்தியோகத்தர்கள் உள்ளூராட்சி சட்டங்களின் அடிப்படையில் சட்டவிரோத கடைகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமது காணி அபகரிப்பு நோக்கம் நிறைவேறுவதற்கு உள்ளூராட்சி மன்றம் தடையாகவுள்ள நிலையில் அங்கு பிரசன்னமாகியிருந்த உள்ளுராட்சி மன்ற உத்தியோகத்தர்கள் மீது அவதூறு மற்றும் அச்சுறுத்தல் பிரயோகிப்புக்கள் நடைபெற்றுள்ளன. மேலும் தாக்குதல் மேற்கொள்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றினை எல்லாம் மேற்கொண்டுவிட்டு தமது வசதிக்கு ஏற்றால் போல் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அவர்கள் கத்தரிக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது முகநூலில் வெளியிட்டுள்ளார். இதனால் உள்ளூராட்சி மன்ற பணியாளர்களின் கௌரவம் மற்றும் தொழிற்சுதந்திரம் அரசாங்க அதிகாரத்தினால் மீறப்பட்டுள்ளது.

இப்படியான அரசாங்கத்தின் அரசியல் அணுகுமுறைகள் ஜனநாயக விரோதமானவை என்பதுடன் சட்டம் ஒழுங்கிற்கும் அப்பாற்பட்டவை. பிரதேச சபைகளின் உத்தியோகத்தர்களின் தொழிற்சுதந்திரத்தினையும் அவர்களது உரிமைகளையும் மீறுவனவாகும். அரசியல் தலையீடுகள் இன்றி நீதியான முறையில் உத்தியோகத்தர்கள் சேவையாற்றுவதற்கான அகப் புறச் சூழ்நிலைகளை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பள்ள அரசாங்கத் தரப்பு சற்றேனும் அரசியல் தர்மத்திற்கு இடமளிக்காது மக்கள் விரோத நடவடிக்கைளில் ஈடுபடுவதையே இது காட்டுகின்றது. நல்லாட்சிக்கான தத்துவம் தொடர்பாக ஆளுங்கட்சி கவனம் செலுத்த வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றங்களின் சுயாதீனம் அரச அதிகாரங்களால் பாதிக்கப்படும் போது அவற்றினை நாம் பார்த்திருக்க முடியாது என்றார்.

Posted in Uncategorized

ஆயிரக்கனக்கான தமிழ்ச் சிறார்களை போர் என்ற போர்வையில் அரசு இனப்படுகொலை செய்தது – ரெலோ நிரோஷ்

அரசாங்கம் நடத்திய மனிதாபிமானமற்ற போரில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அப் படுகொலைகள் அரசினாலேயே மேற்கொள்ளப்பட்டது என்பதற்கு சகல ஆதாரங்களும் உள்ள நிலையிலும் சிறுவர் விடயத்தில் ஏனும் பொறுப்புக்கூறவோ அல்லது நீதியை நிலைநாட்டவோ அரசு தயாரில்லை. கொல்லப்பட்டவர்கள் தமிழ்க் குழந்தைகள் என்பதால் அதுபற்றிய குறைந்தபட்ச விசாரணையைக்கூட மேற்கொள்ள தயாரில்லை. இது நன்கு திட்டமிட்ட இனப்படுகொலை என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

வாதரவத்தை வீரவாணி சனசமூக நிலையத்தில் போரின்போது படுகொலைசெய்யப்பட்ட சிறார்களை விசேடமாக நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் தினம் நேற்று சனிக்கிழமை மாலை அனுஸ்டிக்கப்பட்டது. இந் நிகழ்வில் கலந்துகொண்;டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்குக் கிழக்கில் போர் நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கான சிறார்கள் வகைதொகையின்றி படுகொலை செய்யப்பட்டார்கள். அவ்வாறாகக் சந்தேகத்திற்கு இடமின்றி சிறார்கள் அரசினாலேயே கொல்லப்பட்டார்கள். குமுதினி படகில் இருந்த குழந்தைகள் கடற்படையால் வெட்டிக்கொலை செய்யப்பட்டது, நாகர்கோவில் உள்ளிட்ட பாடசாலைகள் மீது விமானக்குண்டுகளை வீசி மாணவர்களை படுகொலை செய்தமை, முள்ளிவாய்க்கால் பகுதியில் பாதுகாப்பு வலயம் என்று அரசே அறிவித்து விட்டு அப் பகுதிக்குள் இரசாயன கொத்துக்குண்டுகளை வீசி குழந்தைகளையும் சிறார்களையும் கொன்றமை என சிறுவர் படுகொலைகளை ஆதாரபூர்வமாக அடுக்கிச் செல்லலாம். யுத்தத்தின் பின்னும் குழந்தைகளுடனும் சிறுவர்களுடனும் சரணடைந்தவர்களின் கதி என்ன என்பதை அரசு வெளிப்படுத்தவில்லை.

இலங்கை அரசு சிறுவர்கள் தொடர்பான பல்வேறு சமவாயங்களில் உலகளவில் கைச்சாத்திட்டுள்ளது. பல சிறுவர் பாதுகாப்பு நிறுவன பொறிமுறைகளைக் கொண்டுள்ளதாக உள்ளது. ஆனால் இராணுவ பொறிமுறையின் முன் அவை சகலதும் செயலிழந்த நிறுவனங்கள் ஆகும். தமிழ்க்குழந்தைகள் விடயத்தில் அரசு சர்வதேச சமவாயங்களையோ சர்வதேச விதிமுறைகளையோ சட்டங்களையோ கடைப்பிடிக்கவில்லை. இன்றும் குழந்தைகளை அரசு எவ்வாறு கொன்றழித்தது என்பதற்கு நேரடி சாட்சியங்களும் ஆதாரங்களும் உள்ளன.

யுத்தத்தினை நடத்தியது மாறிமாறி ஆட்சிக்குவந்த அரசாங்கம் என்று கூறி இன்றைய அரசாங்கம் நிராகரித்துவிட முடியாது. தமிழ் மக்கள் மீதான போருக்கு இனவாதிகளாக ஆதரவு நல்கிய தரப்பாக இன்றைய அரசாங்கத்தின் தலைமைகள் உள்ளன. இலங்கையில் அரச கொள்கையாகவே தமிழ் மக்கள் மீது அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் பாரதூரமான படுகொலைகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நடந்துள்ளன.

அரச படுகொலைகளுக்கு எந்த அரசாங்கம் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் பொறுப்புக்கூறவேண்டும். இது தமிழ் மக்களின் அழுத்தமாக என்றும் காணப்படவேண்டும் என்றார்.

Posted in Uncategorized

ரெலோவின் வவுனியா மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் கிறிஸ்ரி குகராஜாவின் 26 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

ரெலோ மத்தியகுழு உறுப்பினர், வவுனியா மாவட்ட இணைப்பாளர் அமரர் குகன் அவர்களது 26 வது வருட நிறைவின் நினைவு தினம் இன்றாகும்.

இராஜரெட்ணம் கிறிஸ்ரி குகராஜா குகன் அவர்களது இறப்பின் 26 வருட நிறைவு நினைவு நாள் 15/5/2025 இன்றைய தினத்தில் வவுனியாவில் அமைந்துள்ள அமரர் குகன் அவர்களின் நினைவிடத்தில் நினைவஞ்சலி நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
மேற்படி அஞ்சலி நிகழ்வில் ரெலோ தலைவர் கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

வவுனியாவில் சிறி சபாரட்ணம் அவர்களின் 39 ஆவது நினைவேந்தல் அனுஷ்டிப்பு.!

வவுனியாவில் சிறி சபாரட்ணம் அவர்களின் 39 ஆவது நினைவு தினம் 10.05.2025 அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் சிறி சபாரட்ணம் அவர்களின் 39 ஆவது நினைவு தினம் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியா மாநகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது சிறி சபாரட்ணம் அவர்களின் படத்திற்கு தீபம் ஏற்றி, மலர்மாலை அணிவித்து, மலர்தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது

நிகழ்வில் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தம் கருணாகரன், சிவசக்தி ஆனந்தன், வினோதரராதலிங்கம், ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி, முன்னாள் வட மகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் உள்ளிட்ட பலரும், மதகுருமார், கட்சி உயர் பீட உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்ன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கை தமிழ் அரசு கட்சி – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இடையே கலந்துரையாடல் : வவுனியா சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பேச்சு

வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் 15-05-2025 நடைபெறுகிறது.

உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் பின்னர் வவுனியா மாநகர சபை உட்பட ஏனைய சபைகளில் ஆட்சி அமைப்பதில் கட்சிகளுக்கிடையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் நோக்கத்துடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரதிநிதிகள் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று ஒன்றுகூடியுள்ளனர்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் செந்தில்நாதன் மயூரனின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ப.சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் முக்கியஸ்தர் க. சந்திரகுலசிங்கம் மோகன், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் க.துளசி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்

தமிழின அழிப்புக்கு நீதி கிடைக்க துணை நிற்கும் கனேடிய தேசம்: ரெலோ யாழ் மாவட்ட தலைவர்சபா குகதாஸ்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் கனேடிய அரசாங்கமும் மக்களும் தொடர்ந்து முன்னெடுத்து வரும் சகல நடவடிக்கைகளையும் ஈழத் தமிழர்கள் பெரு அவாவுடன் வரவேற்பதுடன் நன்றிகளையும் தெரிவிக்கின்றோம் என ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் 2009 யுத்த களத்தில் இடம்பெற்றது தமிழினப் படுகொலை என்பதை கனேடிய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பிரகடனப்படுத்தியதுடன் ஒவ்வொரு வருடமும் மே மாதம் இனப்படுகொலை வாராமாக அனுஷ்டிக்கின்றது.

தமிழினப் படுகொலை

தமிழினப் படுகொலை தொடர்பான வரலாறுகளை மாணவர்களுக்கு தெளிவூட்டல் என்னும் வேலைத் திட்டம் அத்துடன் தற்போது பிரம்டன் நகரசபைப் பகுதியில் தமிழினப்படுகொலை நினைவகம் எனப்படும் தூபி அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க மிகப் பெரும் பக்க பலமாக கனேடிய அரசு செயற்படுகிறது.

பிரம்டன் நகர பிதா பட்ரிக் ப்றவுண் ஆற்றிய உரை தமிழினப் படுகொலையை மறுப்பவர்கள், ஏற்றுக் கொள்ளாதவர்கள் கொழும்பு செல்லுங்கள் கனடாவில் இடமில்லை என பொது வெளியில் உரையாற்றியமை உண்மை தான் தமிழர் தாயக மக்களும் இனப்படுகொலை இல்லை அல்லது முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் தமிழினப் படுகொலை நடைபெறவில்லை என தெரிவிக்கும் எவரையும் தாயக அரசியல் அரங்குக்குள் அனுமதிக்கக் கூடாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி புலம்பெயர் தேசங்களில் வாழும் அனைத்து ஈழத் தமிழர்களும் தாங்கள் வாழும் நாடுகளில் தமிழினப் படுகொலைக்கான நீதியின் கதவுகள் திறப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

மேலும், கனேடிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு புதிய நம்பிக்கை ஔிக்கீற்றை காட்டுகின்றது” என தெரிவித்தார்.

Posted in Uncategorized